அதிமுக கட்சி அலுவலகத்தில் இன்று எம்ஜிஆரின் 107வது பிறந்தநாள் கொண்டாட்டம்; எடப்பாடி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்: மூத்த தலைவர்கள் புறக்கணிப்பால் பரபரப்பு


சென்னை: எம்ஜிஆரின் 107வது பிறந்தநாளையொட்டி இன்று அவரது சிலைக்கு எடப்பாடி பழனிசாமி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இந்த நிகழ்ச்சிக்கு, மூத்த அதிமுக தலைவர்கள் பலரும் வராமல் புறக்கணித்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அதிமுக நிறுவன தலைவர் எம்ஜிஆர் 107வது பிறந்த நாளையொட்டி இன்று காலை சென்னை, ராயப்பேட்டை அவ்வை சண்முகம் சாலை, தலைமை கழக வளாகத்தில் அமைந்துள்ள எம்ஜிஆர் திருவுருவச் சிலைக்கு, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினார். பின்னர் அந்த வளாகத்தில் அதிமுக கட்சி கொடியினை ஏற்றி வைத்து இனிப்பு வழங்கினார். அதனைத் தொடர்ந்து, தலைமை கழக செயலாளர்கள் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

இந்த நிகழ்ச்சியில், மாவட்ட செயலாளர்கள், எம்பி, எம்எல்ஏக்கள், முன்னாள் அமைச்சர்கள், முன்னாள் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்களும், சார்பு அமைப்புகளின் மாநில நிர்வாகிகளும், மாவட்ட கழக நிர்வாகிகள், எம்.ஜி.ஆர். மன்றம், ஜெயலலிதா பேரவை, எம்.ஜி.ஆர். இளைஞர் அணி, மகளிர் அணி, மாணவர் அணி, அண்ணா தொழிற்சங்கம் உட்பட கட்சியின் பல்வேறு அமைப்புகளை சேர்ந்த நிர்வாகிகளும், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகளும், கூட்டுறவு சங்கங்களின் முன்னாள் பிரதிநிதிகளும், தொண்டர்களும் கலந்துகொண்டனர். ஒவ்வொரு ஆண்டும் எம்ஜிஆர் பிறந்தநாள் விழா சென்னையில் உள்ள அதிமுக கட்சி தலைமை அலுவலகத்தில் மிக பிரமாண்டமாக கொண்டாடப்படும்.

ஜெயலலிதா பொதுச்செயலாளராக இருக்கும்போது ஒவ்வொரு ஆண்டும் தவறாமல் கட்சி தலைமை அலுவலகம் வந்து எம்ஜிஆர் சிலைக்கு மாலை அணிவித்து, அதிமுக கொடியை ஏற்றி வைத்ததுடன், பிறந்தநாள் கேக் வெட்டி கொண்டாடுவது வழக்கம். இந்த நிகழ்ச்சியில் சென்னை உள்ளிட்ட அனைத்து மாவட்டங்களில் இருந்தும் கட்சி மூத்த நிர்வாகிகள், தொண்டர்கள் என ஏராளமானோர் கலந்து கொள்வார்கள். ஆனால் இன்று எம்ஜிஆர் பிறந்தநாள் விழா எடப்பாடி பழனிசாமி அதிமுக பொதுச்செயலாளராக அறிவிக்கப்பட்ட பிறகு நடைபெறும் கட்சியின் முக்கிய நிகழ்வாக பார்க்கப்படுகிறது. ஆனால், இந்த நிகழ்ச்சியில் அதிமுக முன்னாள் அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், தங்கமணி, வேலுமணி, ஜெயக்குமார், வளர்மதி, கோகுலஇந்திரா, ஆர்.பி.உதயகுமார், பொன்னையன் மற்றும் சென்னை, புறநகர் பகுதி மாவட்ட செயலாளர்கள் மட்டுமே கலந்து கொண்டனர்.

அதிமுக முன்னாள் மூத்த அமைச்சர்களான கே.பி.முனுசாமி, நத்தம் விஸ்வநாதன், செங்கோட்டையன், செல்லூர் ராஜு, சி.வி.சண்முகம், கே.பி.அன்பழகன், எம்.சி.சம்பத், ஓ.எஸ்.மணியன், காமராஜ், சி.விஜயபாஸ்கர், எம்.ஆர்.விஜயபாஸ்கர், கே.சி.வீரமணி, கடம்பூர் ராஜு மற்றும் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த மாவட்ட செயலாளர்கள், முக்கிய நிர்வாகிகள் இன்று எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெற்ற எம்ஜிஆர் பிறந்தநாள் விழாவில் கலந்து கொள்ளவில்லை. குறிப்பாக, எடப்பாடி பழனிசாமிக்கு மிகவும் நெருக்கமாக உள்ள தலைவர்கள் மட்டுமே கலந்து கொண்டனர். அவர் மீது அதிருப்தியில் உள்ள தலைவர்கள் கலந்துகொள்ளவில்லை என்றே கூறப்படுகிறது. நாடாளுமன்ற தேர்தலுக்கு இன்னும் 2 மாதங்களே உள்ள நிலையில், அதிமுகவில் எடப்பாடி பழனிசாமி மீது அவரது கட்சியினர் பலரும் அதிருப்தியில் உள்ளது இதன்மூலம் தெரியவந்துள்ளது.

முன்னதாக, எம்ஜிஆரின் 107வது பிறந்தநாளை முன்னிட்டு தமிழ்நாடு அரசின் சார்பில் சென்னை, கிண்டியில் உள்ள தமிழ்நாடு டாக்டர் எம்ஜிஆர் மருத்துவ பல்கலைக்கழக வளாகத்தில் அமைந்துள்ள அவரது திருவுருவ சிலைக்கு அருகில் அலங்கரித்து வைக்கப்பட்டுள்ள திருவுருவ படத்திற்கு அமைச்சர்கள் தா.மோ.அன்பரசன், பி.கே.சேகர்பாபு, சென்னை மாநகராட்சி மேயர் பிரியா, தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை செயலாளர் ஆர்.செல்வராஜ், தமிழ்நாடு டாக்டர் எம்ஜிஆர் மருத்துவ பல்கலைக்கழக துணைவேந்தர் கே.நாராயணசாமி மற்றும் அரசு உயர் அதிகாரிகள் மலர்தூவி மரியாதை செலுத்தினார்கள்.

எம்ஜிஆர் பிறந்தநாளையொட்டி தமிழகத்தில் பல்வேறு இடங்களில் அதிமுக நிர்வாகிகள் முக்கிய இடங்களில் எம்ஜிஆர் படத்தை அலங்கரித்து மாலை அணிவித்து, அவரது திரைப்பட பாடல்கள் ஒலிபரப்பி பிறந்தநாளை கொண்டாடினார்கள். சில இடங்களில் அதிமுக தொண்டர்கள் அன்னதானம் வழங்கியும் சிறப்பித்தனர்.

Related posts

மராட்டியம், உ.பி., தெலங்கானா, குஜராத் சோதனையில் ரூ.327 கோடி மதிப்பு போதைப்பொருள் பறிமுதல்: 15 பேரை கைது செய்து குற்றப்பிரிவு போலீசார் விசாரணை

ஜிஎஸ்டி ரசீதுகளின் அடிப்படையில் 15 நிமிடங்களில் கடன்!.. குறு, சிறு நிறுவனங்களுக்கு ரூ.1 லட்சம் கடன் வழங்கும் எஸ்பிஐ..!!

அரசின் நலத்திட்டங்கள் குறித்து பயனாளிகளிடம் வீடியோ காலில் கேட்டறிந்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்