100 சதவீதம் வாக்களிப்போம் என தனியார் தொழிற்சாலை ஊழியர்கள் உறுதிமொழி ஏற்பு

ஸ்ரீபெரும்புதூர்: ஸ்ரீபெரும்புதூர் அடுத்த மாம்பாக்கம் சிப்காட் பகுதியில், நாடாளுமன்ற தேர்தலின்போது 100 சதவீதம் வாக்களிப்போம் என தனியார் தொழிற்சாலை ஊழியர்கள் உறுதிமொழி எடுத்துக்கொண்டனர். நாடாளுமன்ற தேர்தல் வரும் ஏப்ரல் 19ம்தேதி நடைபெறவுள்ளதை முன்னிட்டு, ஸ்ரீபெரும்புதூர் சட்டமன்ற தொகுதியில் 100 சதவீதம் வாக்குப்பதிவு நடைபெறும் வகையில் குன்றத்தூர், ஸ்ரீபெரும்புதூர் வட்டங்களில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை ஸ்ரீபெரும்புதூர் வருவாய் கோட்டாட்சியர் சரவணகண்ணன் தலைமையில் வருவாய்த்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.

அதன் ஒருபகுதியாக, ஸ்ரீபெரும்புதூர் அடுத்த மாம்பாக்கம் சிப்காட் பகுதியில் இயங்கி வரும் தனியார் தொழிற்சாலை ஊழியர்களுக்கு, 100 சதவீதம் வாக்களிப்பதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் நிகழ்ச்சி ஸ்ரீபெரும்புதூர் வருவாய் கோட்டாட்சியர் சரவணகண்ணன் தலைமையிலும், வட்டாட்சியர் சுந்தரமூர்த்தி முன்னிலையிலும் நேற்று நடைபெற்றது. இந்த தொழிற்சாலையில் பணிபுரியும் சுமார் 300க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் கலந்துக்கொண்டு, நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலில் 100 சதவீதம் வாக்களிப்போம் என உறுதிமொழி எடுத்துக்கொண்டதோடு, கையெப்பமிட்டனர். நிகழ்வின்போது, மண்டல துணை வட்டாட்சியர் புவனேஸ்வரி, வருவாய் ஆய்வாளர் முரளி, கிராம நிர்வாக அலுவலர் நளினி, தனியார் நிறுவனத்தின் மனிதவள மேலாளர்கள் சரவணன், மாரிமுத்து உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

Related posts

தி.நகர் சட்டமன்ற தொகுதியில் குடிநீர் பிரச்னைக்கு விரைவில் தீர்வு: ஜெ.கருணாநிதி எம்எல்ஏ கேள்விக்கு அமைச்சர் கே.என்.நேரு பதில்

தனிநபருக்கு எத்தனை பாட்டில் விற்கலாம்? மது விற்பனைக்கு விதிமுறை பணியாளர்கள் கோரிக்கை

இன்று காலை 6-9 மணி வரை அண்ணாநகர் பகுதியில் போக்குவரத்து மாற்றம்: காவல் துறை அறிவிப்பு