100 நாள் வேலைதிட்ட பணியாளர்களை விவசாய பணிகளுக்கு பயன்படுத்த அறிவுறுத்தப்படுமா?: எதிர்பார்ப்பில் விவசாயிகள்

ராஜபாளையம்: 100 நாள் வேலை திட்ட பணியாளர்களை விவசாய பணிகளுக்கு பயன்படுத்த வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். விருதுநகர் மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள பகுதிகளில் நீர்நிலைகளின் பயன்பாடு அதிகளவில் இருப்பதால் நன்செய் நிலங்கள் அதிகம் உள்ளது. இவற்றில் கண்மாய் ஒட்டிய பகுதிகளில் நெல் விவசாயமும், தண்ணீர் குறைந்த பகுதிகளில் பருத்தி, மிளகாய், கீரை காய்கறி பயிர்கள் சாகுபடி அதிகம் நடைபெற்று வருகிறது. இவ்வகை பயிர்களுக்கான விதைப்பு முதல் அறுவடை வரை விவசாய தொழிலாளர்கள் அதிகம் தேவைப்படுகின்றனர். பாத்தி கட்டுவதில் தொடங்கி, நாற்று நடுவது, களை எடுப்பது, அறுவடை, தண்ணீர் பாய்ச்சுதல் போன்ற பணிகளுக்கு ஆண், பெண் தொழிலாளர்கள் தேவைப்படுவர். நல்ல விளைச்சலைத் தரும் நிலங்கள் இருந்தும் விவசாயப் பணிகளை தொடர முடியாத சூழ்நிலை உள்ளது.

தற்போது கிராம பகுதிகளில் அதிக அளவு தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தில் கூலி தொழிலாளர்கள் தங்கள் பெயர்களை பதிந்து சென்று விடுவதால் குறிப்பிட்ட பருவ காலங்களில் களை பறித்தல், தினமும் காய்கறிகள் பறிப்பு போன்ற அத்தியாவசிய பணிகளுக்கான ஆட்கள் பற்றாக்குறை ஏற்படுவதாக விவசாயிகள் கூறுகின்றனர். ஊரக வேலை உறுதி திட்டத்தின் நோக்கங்களாக ஊரகப் பகுதிகளை வேலை வாய்ப்பு அதிகரிக்கவும், குடும்பத்தில் ஒருவருக்கு வேலையை உறுதி செய்யவும், ஊரட்சி அமைப்பை வலுப்படுத்தும் நோக்கில் தொடங்கப்பட்டது.

ஆனால் இதற்கு மாறாக பல்வேறு பகுதிகளிலும் விவசாய பணிகள் அந்தந்த பருவ காலங்களில் தேவைக்கேற்ப வேலை ஆட்கள் கிடைக்காமல் அல்லாடும் சூழல் ஏற்பட்டு பெரும்பாலானோர் கூலி அதிகமாக கொடுத்து பல்வேறு பகுதிகளில் இருந்து ஆட்களை வாகனங்கள் மூலம் அழைத்து வர வேண்டி உள்ளது. இதற்காக அவர்கள் செலவழிக்கும் தொகை என்பது மேலும் சிக்கலை ஏற்படுத்துகிறது. இப்பிரச்னைகளால் விவசாய தொழிலை கைவிடுவோர் எண்ணிக்கை அதிகரித்த படி உள்ளது. இந்த சூழ்நிலையில் தான் கடந்த சில மாதங்களுக்கு முன்பாக ராஜபாளையம் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் இரண்டாம் பருவ விவசாயத்தில் நாற்று நடும் பணிகளுக்கு ஆள் பற்றாக்குறை ஏற்பட்டது.

அப்போது நெல் நாற்றை பிடுங்கி கட்டுதல் சுமந்து வருவது நாற்று நடுவது என ஒவ்வொரு வேலைக்கும் தனித்தனியாக கூலி வழங்க வேண்டிய நிலை இருந்தது. இதனால் விவசாய பணிகள் தாமதமாக நடைபெறுவதாக கூறினர். இதனை சரி செய்யும் வகையில் ராஜபாளையம் பகுதியில் வடமாநிலத்தை சேர்ந்த தொழிலாளர்கள் பலர் விவசாய பணியில் ஈடுபடுத்தப்படுத்தியிருந்தனர். இவர்கள் ஏக்கர் ஒன்றுக்கு ரூ. 5700 ஊதியமாக வாங்குகின்றனர். நாள் ஒன்றுக்கு எட்டு ஏக்கர் வரை நடுகை செய்து வருகின்றனர். இப்பகுதியில் வட மாநில தொழிலாளர்களுக்கு போதிய ஊதியம், உண்ண உணவு, தங்கும் வசதி கொடுக்கப்பட்டுள்ளது.

இப்பகுதியில் சிறந்த முறையில் விவசாயம் செய்ய விவசாய நிலங்கள் அதிகம் இருப்பதால் அதிகப்படியான வட மாநிலத் தொழிலாளர்கள் விவசாயப் பணிகளுக்கு ஈடுபடுத்தப்பட உள்ளதாகவும் தெரிவித்திருந்தனர். மேலும் விவசாய நில உரிமையாளர்கள் பலரும் வரவேற்று இருந்தனர். ஆனால் அனைத்து சீசன்களுக்கு வடமாநிலத்தை சேர்ந்தவர்களை பணியமர்த்த முடியுமா என்ற கேள்வி உள்ளது.

எனவே அண்டை மாநிலத்தில் உள்ளது போல ஊரக வேலை உறுதி திட்ட தொழிலாளர்களை வேளாண் பணிகளுக்கு ஈடுபடுத்த அனுமதிப்பதுடன், ஆட்கள் அதிகம் தேவைப்படும் வேளாண் பணிகளில் இயந்திர மயமாக்களை புகுத்த வேண்டும். என்பதே பெரும்பாலான விவசாயிகளின் எதிர்பார்ப்பாக உள்ளது.

இதனை அரசு உரிய ஆலோசனைகளை நடத்தி இப்பகுதியில் நல்ல விளைச்சலை தரக்கூடிய நிலங்களை தரிசு நிலங்களாக மாறுவதற்கு முன் விவசாயிகள் வேண்டுகோளை ஏற்று அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்து வருகின்றனர்.

Related posts

அக்டோபர் 2ம் தேதி திருப்பதி திருக்குடை ஊர்வலத்தை ஒட்டி காலை 10 மணி முதல் முக்கிய இடங்களில் போக்குவரத்து மாற்றம்!

எடப்பாடி பழனிசாமிக்கு தமிழ்நாடு அரசு கண்டனம்

கொடைக்கானலில் தொடரும் இ-பாஸ் நடைமுறை!