திருப்பதிக்கு தொண்டு நிறுவனத்தினர் அழைத்து வந்தனர் சென்னை மாற்றுத்திறனாளிகள் 1008 பேர் ஏழுமலையான் தரிசனம்

*‘கடவுள் என்னை பார்ப்பார்’ என பார்வையற்ற சிறுவன் உருக்கம்

திருமலை : சென்னையில் இருந்து தொண்டு நிறுவனங்கள் மூலம் அழைத்து வரப்பட்ட மாற்றுத்திறனாளிகள் 1008 பேர் ஏழுமலையானை தரிசனம் செய்தனர். அப்போது பார்வையற்ற சிறுவன், ‘நான் கடவுளை பார்க்காவிட்டாலும், கடவுள் என்னை பார்ப்பார்’ என உருக்கமாக கூறினார்.சென்னை ரோட்டரி கிளப் மற்றும் இதர தொண்டு நிறுவனங்கள் உதவியுடன் திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் சென்னை குழுவுடன் சென்னை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள பல்வேறு மாற்றுத்திறனாளிகள் 1008 பேர் சிறப்பு ரயில் மூலம் சென்னையில் இருந்து ரேணிகுண்டா ரயில் நிலையத்திற்கு நேற்றுமுன்தினம் அழைத்து வரப்பட்டனர்.

ரேணிகுண்டா ரயில் நிலையத்தில் இருந்து பேருந்து மூலம் திருமலைக்கு செல்ல இருந்த பேருந்துகளை திருப்பதி எம்எல்ஏ ஆரணி னிவாஸ் கொடியசைத்து தொடங்கி வைத்தார். அப்போது சுவாமி தரிசனத்திற்கு வந்த குழந்தைகளுடன் எம்எல்ஏ கலந்துரையாடினார். பார்வையற்ற சிறுவனிடம் ‘நீங்கள் வெங்கடேஸ்வர சுவாமியை எப்படி தரிசனம் செய்ய முடியும்’ என்று எம்எல்ஏ கேட்டதற்கு, ‘நான் பார்க்காவிட்டாலும் கடவுள் என்னை பார்ப்பார்’ என உருக்கமாக பதிலளித்தார். வெங்கடேஸ்வர சுவாமி மீது பக்தர்களின் உண்மையான நம்பிக்கை அந்த சிறுவனின் வார்த்தைகளில் வெளிப்பட்டது என்று எம்எல்ஏ கூறினார்.

மேலும் இந்த நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்த சென்னை ரோட்டரி சங்கம், தேவஸ்தானத்தின் சென்னை உள்ளூர் ஆலோசனைக் குழுவும், மனித சேவையே மிகப் பெரிய சேவை என்று நம்பி ரோட்டரி சங்கம் உலகம் முழுவதும் சேவைத் திட்டங்களைச் செய்வதில் மகிழ்ச்சி அளிக்கிறது.

சிறப்பு குழந்தைகளுக்கான சிறப்பு வருகைக்கு ஏற்பாடு செய்த செயல் அதிகாரி ஷியாமளா ராவ் மற்றும் கூடுதல் செயல் அதிகாரி வெங்கையா சவுத்ரி ஆகியோரை பாராட்டுவதாக எம்எல்ஏ ஆரணி னிவாஸ் கூறினார். இந்நிகழ்ச்சியில் தொண்டு நிறுவன அதிகாரிகள் பங்கேற்றனர்.அங்கிருந்து பேருந்துகள் மூலம் திருமலைக்கு அழைத்து செல்லப்பட்ட நிலையில் விரைவு தரிசன ஏற்பாட்டின் அடிப்படையில் அரை மணி நேரத்தில் அனைவரும் ஏழுமலையானை வழிபாடு செய்தனர்.

Related posts

காரில் கடத்திய குட்கா பறிமுதல்: 3 பேர் கைது

முதலமைச்சர் கோப்பைக்கான பள்ளி மாணவர்களுக்கு மண்டல அளவிலான விளையாட்டு போட்டிகள் தொடங்கியது

கேரள மாநிலம் மலப்புரத்தில் குரங்கம்மை அறிகுறியுடன் இளைஞர் ஒருவர் மருத்துவமனையில் அனுமதி