15 இடங்களில் அமலாக்கத்துறை திடீர் ரெய்டு; கேரளாவில் ரூ10,000 கோடி ஹவாலா பணப்புழக்கம்: திடுக்கிடும் தகவல் அம்பலம்

திருவனந்தபுரம்: கேரளாவில் நேற்று இரவு தொடங்கி விடிய விடிய நடந்த அமலாக்கத்துறை சோதனையில் ரூ.10 ஆயிரம் கோடிக்கும் மேல் ஹவாலா பணப்புழக்கம் இருந்துள்ள தகவல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கேரள மாநிலத்துக்கு பல்வேறு நாடுகள், வெளி மாநிலங்களில் இருந்து பெருமளவு ஹவாலா பணம் வருவதாக கடந்த பல வருடங்களுக்கு முன்பு மத்திய அமலாக்கத்துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதைத் தொடர்ந்து கடந்த 3 வருடங்களாக, அமலாக்கத்துறை அதிகாரிகள் கேரளா முழுவதும் ரகசியமாக கண்காணிப்பில் ஈடுபட்டு வந்தனர். எர்ணாகுளம், கோட்டயம் ஆகிய பகுதிகளில் தான் ஹவாலா பணம் மூலம் பெருமளவு வர்த்தகம் நடைபெறுவது தெரியவந்தது. ஆகவே இந்த பகுதிகளில் அமலாக்கத் துறையினர் தொடர்ந்து தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வந்தனர்.

இதில் செல்போன், எலக்ட்ரானிக், அழகு சாதனங்கள், துணிகள் உள்பட மொத்த விற்பனை கடைகளில் தான் பெருமளவு ஹவாலா வர்த்தகம் நடக்கிறது என்பது தெரியவந்தது. இந்த இடங்களில் ஒரே நேரத்தில் அதிரடியாக சோதனை நடத்த மத்திய அமலாக்கத் துறை அதிகாரிகள் திட்டமிட்டு இருந்தனர். அதன்படி நேற்று இரவே எர்ணாகுளம், கோட்டயம் ஆகிய இடங்களில் சந்தேகத்திற்கு இடமான நிறுவனங்கள் என்று மொத்தம் 15 இடங்களில் அமலாக்கத் துறையினர் அதிரடியாக இந்த சோதனையை தொடங்கினர். அதைத்தொடர்ந்து அந்த பகுதியில் உள்ள செல்போன், எலக்ட்ரானிக், அழகு சாதன பொருட்கள், டிராவல் ஏஜென்சி நிறுவனங்கள், துணிகள் விற்பனை செய்யும் மொத்த விற்பனை நிறுவனங்களில் இந்த சோதனை தொடர்ந்து நடந்து வருகிறது. சுமார் 15க்கும் மேற்பட்ட இடங்களில் நேற்று இரவு தொடங்கி இன்று காலை வரை விடிய விடிய சோதனை தொடர்ந்து நடந்து வருவது குறிப்பிடத்தக்கது.

எர்ணாகுளம் நகரின் மையப்பகுதியில் உள்ள ஒரு வணிக வளாகத்தில் உள்ள செல்போன் மற்றும் உதிரிப் பாகங்கள் மொத்த விற்பனைக் கடையில் மட்டும் ஒரு நாளைக்கு ₹50 கோடிக்கு ஹவாலா பண வர்த்தகம் நடைபெறுவது தெரியவந்து உள்ளது. 50க்கும் மேற்பட்ட நாடுகளில் இருந்து கேரளாவுக்கு ஹவாலா பணம் வருவது தெரியவந்து உள்ளது. இதுவரை ₹10 ஆயிரம் கோடிக்கு மேல் ஹவாலா பணப்புழக்கம் நடந்து உள்ளது கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது என்றும், சோதனையின் முடிவில் இது மேலும் பல மடங்கு அதிகரிக்கலாம் என்றும் அமலாக்கத்துறை வட்டாரங்கள் தெரிவித்து உள்ளன.

Related posts

திருப்பூர் பின்னலாடை நிறுவனத்தில் பயங்கர தீ

உ.பி.யில் 121 பேர் பலியான சம்பவம் எதிரொலி; ஆக்ராவில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த போலே பாபாவின் 2 நிகழ்ச்சிகள் ரத்து

விக்கிரவாண்டி இடைத்தேர்தல்; விழுப்புரம் மாவட்டத்தில் 4 நாட்கள் டாஸ்மாக் கடைகள் மூடல்!