1000 பேருக்கு மஞ்சப்பை, மரக்கன்றுகள்: கலெக்டர் வழங்கினார்

 

திருவள்ளூர், ஜன. 28: சட்டசபையில் ‘பிளாஸ்டிக்களுக்கு எதிரான மக்கள் பிரசாரம்” செயல்படுத்தப்பட வேண்டும் என்றும், தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் மூலம் ஒவ்வொரு மாவட்டத்திலும் பங்குதாரர்களை அழைத்து இது குறித்து பொதுமக்களிடையே பிரசாரம் தொடங்கப்படும் என்றும் அறிவித்தது. இதற்கிடையில் தமிழ்நாடு முதலமைச்சர் கடந்த 23.12.2021 அன்று சென்னை கலைவாணர் அரங்கில் ‘மீண்டும் மஞ்சப்பை’ என்ற மக்கள் பிரச்சாரத்தை தொடங்கி வைத்தார்.

மாநிலம் முழுவதும் பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், மாவட்ட அளவில் ‘மீண்டும் மஞ்சப்பை’ பிரச்சாரத்தை அந்தந்த மாவட்ட அமைச்சர்கள் மற்றும் மாவட்ட கலெக்டர்கள் தலைமையில் உள்ளாட்சி அமைப்புகள் மற்றும் பல்வேறு அமைப்புகளுடன் நடத்த மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது. இதனையடுத்து திருவள்ளூர் மாவட்டத்தில் ஒருமுறை பயன்படுத்தி தூக்கி எறியப்படும் பிளாஸ்டிக் பைகள் நடமாட்டத்தை குறைக்க நகராட்சி, பேரூராட்சி, மாநகராட்சி அதிகாரிகள் கடை கடையாக சென்று பிளாஸ்டிக் பைகளை பறிமுதல் செய்து அபராதமும் விதித்து வருகின்றனர்.

இதனால் பொது மக்கள் வீட்டிலிருந்தே மஞ்சப்பை அல்லது வேறு ஏதானும் பையை கொண்டு வந்து பொருட்களை வாங்கி செல்லும் சூழ்நிலை ஏற்பட்டதுள்ளது.  இந்நிலையில் திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் நடைபெற்ற குடியரசு தின விழாவில் கலந்து கொண்ட அனைத்து துறை அலுவலர்கள், கலை நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மாணவ, மாணவிகள், அணிவகுப்பில் கலந்து கொண்ட காவலர்கள் சாரண, சாரணியர்கள், விழாவினை கண்டு களிக்க வருகை தந்த உள்ளாட்சி பிரதிநிதிகள்,

பொது மக்கள் அனைவருக்கும் மாவட்ட நிர்வாகம் மற்றும் தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியத்தின் சார்பில் மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர் ப.ரவிச்சந்திரன் ஏற்பாட்டில் தமிழநாடு அரசால் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகளை ஒழிக்கும் வகையில் மீண்டும் மஞ்சப்பை என்கிற திட்டத்தின் அடிப்படையில் 1000 மஞ்சப்பைகள் மற்றும் 1000 மரக்கன்றுகளை மாவட்ட கலெக்டர் த.பிரபுசங்கர் வழங்கினர்.

இந்த நிகழ்ச்சியின் போது மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பா.சீபாஸ் கல்யாண், மாவட்ட வருவாய் அலுவலர் ஆ.ராஜ்குமார், கூடுதல் கலெக்டர், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட அலுவலர் என்.ஓ.சுகபுத்திரா, சப் கலெக்டர் (பயிற்சி) வெங்கட் வத்ஸவ், கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) காயத்ரி சுப்பிரமணி, பொதுப்பணித்துறை) விஜய் ஆனந்த், ஊரக வளர்ச்சி முகமை செயற்பொறியாளர் வ.ராஜவேல், சுற்றுச்சூழல் உதவி செயற்பொறியாளர் த.மணிமேகலை உதவி பொறியாளர் சு.சபரிநாதன், கி.ர.ஸ்ரீலேகா உட்பட பலர் உடனிருந்தனர்.

Related posts

15 ஆண்டுகளை கடந்த அரசு வாகனங்கள் பதிவுச்சான்று புதுப்பிப்பு ஓராண்டு நீட்டிப்பு தமிழக அரசு உத்தரவு

ஒருமுறை பயன்படுத்திய 76 ஆயிரம் லிட்டர் சமையல் எண்ணெய் பயோ டீசலாக மாற்றம் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் தகவல்

பெண் டாக்டரிடம் ₹1 லட்சம் மோசடி பேர்ணாம்பட்டு போலீஸ் நிலையத்தில் புகார் பார்சலில் தடை செய்யப்பட்டுள்ள பொருள் அனுப்பியதாக கூறி