மரக்காணம் கடலில் 100 விநாயகர் சிலைகள் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் கரைப்பு

மரக்காணம் : விநாயகர் சதுர்த்தி விழா நாடு முழுக்க கடந்த 7ம் தேதி மிகச் சிறப்பாக கொண்டாடப்பட்டது. இந்நிகழ்ச்சியை முன்னிட்டு மரக்காணம், திண்டிவனம் உள்ளிட்ட பகுதிகளில் இருக்கும் கிராமங்களில் காவல்துறையின் அனுமதியுடன் 300க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகளை வைத்து பிரதிஷ்டை செய்தனர். இதுபோல் பிரதிஷ்டை செய்யப்பட்ட விநாயகர் சிலைகளுக்கு கடந்த 2 நாட்களாக பல்வேறு சிறப்பு பூஜைகள், அபிஷேகங்கள் செய்யப்பட்டது.

இந்நிகழ்ச்சிகளை தொடர்ந்து ஆகம விதிப்படி விநாயகர் சதுர்த்தி நாளிலிருந்து 3ம் நாள் முதல் பிரதிஷ்டை செய்யப்பட்ட விநாயகர் சிலைகளை கடல், ஆறுகள் உள்ளிட்ட நீர் நிலைகளில் காவல்துறையினர், வருவாய்த்துறையினர் மற்றும் சம்பந்தப்பட்ட துறைகளை சார்ந்த அதிகாரிகளின் அனுமதியோடு கரைப்பது வழக்கம்.

இந்நிலையில் நேற்று விநாயகர் சதுர்த்தி முடிந்து 3ம் நாள் என்பதால் மரக்காணம், திண்டிவனம் உள்ளிட்ட பகுதிகளில் பிரதிஷ்டை செய்யப்பட்ட விநாயகர் சிலைகளை வாகனங்களில் ஏற்றிக்கொண்டு தாரை தப்பட்டை முழங்க குத்தாட்டங்களுடன் ஊர்வலமாக, அரசு அதிகாரிகள், போலீஸ் பாதுகாப்புடன் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த எக்கியர்குப்பம், அனுமந்தை, கூனிமேடு உள்ளிட்ட மீனவ கிராமங்களுக்கு எடுத்து சென்றனர்.

அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்புடன் மீனவ கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் மற்றும் இளைஞர்கள் விநாயகர் சிலைகள் ஊர்வலத்துடன் சென்றவர்களை கடலில் இறங்க விடாமல் தடுத்தனர். இதனை தொடர்ந்து விசைப்படகுகள் மூலம் விநாயகர் சிலைகளை தரைப்பகுதியில் இருந்து எடுத்து சென்று கடலில் கரைத்தனர்.

Related posts

கூல் லிப் பயன்பாடு: 3 நிறுவனங்களுக்கு நோட்டீஸ் அனுப்ப உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு

பழனி பஞ்சாமிர்தம் காலாவதி தேதி 30 நாட்களாக உயர்வு..!!

SIPCOT-ல் அமையும் கண்ணாடி உற்பத்தி தொழிற்சாலை!