100 சதவீத தொழிலாளர்களுடன் ஏற்றுமதி நிறுவனங்கள் இயக்கம்

திருப்பூர் :  பனியன் ஏற்றுமதி நிறுவனங்கள் 100 சதவீத தொழிலாளர்களுடனும், உள்நாட்டு ஆடை உற்பத்தி நிறுவனங்கள் 33 சதவீத தொழிலாளர்களுடனும் நேற்று முதல் இயக்கத்தை துவங்கின.திருப்பூர் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பின்னலாடை நிறுவனங்கள் மற்றும் அதனை சார்ந்த ஜாப்-ஒர்க் நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. இந்த நிறுவனங்களில் சுமார் 5 லட்சத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலை செய்து வருகிறார்கள். இந்நிலையில், கொரோனா பரவல் ஊரடங்கு காரணமாக மே 10ம் தேதி முதல் திருப்பூரில் பின்னலாடை உற்பத்தி மற்றும் ஜாப்-ஒர்க் நிறுவனங்களின் இயக்கம் முழுமையாக நிறுத்தப்பட்டது.  ஊரடங்கில் தளர்வு அளித்ததையடுத்து கடந்த 7ம் தேதி முதல் திருப்பூரில் ஏற்றுமதி ஆடை உற்பத்தி மற்றும் ஏற்றுமதி சார்ந்த ஜாப்-ஒர்க் நிறுவனங்கள் மட்டும் 10 சதவீத தொழிலாளர்களுடன் இயக்கத்தை துவக்கின. தொடர்ந்து கடந்த 21ம் தேதி முதல் 50 சதவீத தொழிலாளருடன் ஏற்றுமதி நிறுவனங்கள் இயங்க அனுமதி அளிக்கப்பட்டது. அதேநேரம், உள்நாட்டுக்கான ஆடை உற்பத்தி மற்றும் அதுசார்ந்த ஜாப்-ஒர்க் நிறுவனங்கள் மீண்டும் இயங்க அனுமதி அளிக்கப்படவில்லை. இந்நிலையில், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கை, வரும் ஜூலை 5ம் தேதி வரை நீட்டித்து அறிவிப்பு வெளியிட்டார். இந்த அறிவிப்பில் வகை-1 பட்டியலில் உள்ள 11 மாவட்டங்களில் ஏற்றுமதி நிறுவனங்கள் 100 சதவீத தொழிலாளருடன் இயங்கவும், இதர தொழிற்சாலைகள் 33 சதவீத தொழிலாளருடன் இயங்கவும் அனுமதி அளிக்கப்பட்டது. அதன்படி நேற்று முதல் திருப்பூரில் ஏற்றுமதி நிறுவனங்கள் 100 சதவீத தொழிலாளர்களுடனும், உள்நாட்டுக்கான ஆடை உற்பத்தி நிறுவனங்கள் 33 சதவீத தொழிலாளர்களுடனும் தங்களது இயக்கத்தை தொடங்கின. இதனால் தொழில்துறையினர் மற்றும் தொழிலாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இது குறித்து அதிகாரிகள் கூறியதாவது: ஏற்றுமதி நிறுவனங்கள் 100 சதவீத தொழிலாளர்களுடனும், உள்நாட்டு ஆடை உற்பத்தி நிறுவனங்கள் 33 சதவீத தொழிலாளர்களுடனும் இயக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. தொழிலாளர் வருகை விவரங்களை பதிவு செய்ய வேண்டும். அனைத்து தொழிலாளரும் முகக்கவசம் அணியவேண்டும். சமூக இடைவெளி பின்பற்றப்பட வேண்டும். தொழிலாளர் பணிக்கு வரும்போதும், பணி முடித்து செல்லும்போதும் ஆக்சிஜன் அளவு, உடல் வெப்பநிலை பரிசோதிக்க வேண்டும். அதற்கான மருத்துவ கருவிகள் கட்டாயம் இருக்க வேண்டும். தொற்று அறிகுறிகள் தென்பட்டால், அவ்விவரங்களை உடனடியாக தெரிவிக்கவேண்டும். பிற மாவட்டங்களிலிருந்து தினமும் தொழிலாளர் வந்து செல்வதை தவிர்க்க வேண்டும். நிறுவனங்களில் திடீர் ஆய்வுகள் நடத்தப்படும். தொற்று தடுப்பில் அலட்சியமாக செயல்படும் நிறுவனங்களுக்கு ‘சீல்’ வைப்பது போன்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என நிறுவனங்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது என்றனர்….

Related posts

வெயில் தாக்கம் அதிகரிப்பால் உப்பு உற்பத்தி தீவிரம்

ஒகேனக்கலுக்கு நீர்வரத்து 10,000 கன அடியாக அதிகரிப்பு

மெரினாவில் நாளை விமான சாகச நிகழ்ச்சி: போக்குவரத்து மாற்றம்