100 நாள் வேலைத்திட்ட குறைதீர்வாளர்கள் நியமனத்துக்கு தமிழக அரசு நடவடிக்கை வரும் 31ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் ராணிப்பேட்டை உட்பட 14 மாவட்டங்களில்

வேலூர், ஜூலை 7: தமிழகத்தில் காலியாக உள்ள 14 மாவட்ட 100 நாள் வேலைத்திட்ட குறைதீர்வாளர்கள் பணியிடத்தை உடனடியாக நிரப்புவதற்கான பணிகளை தமிழக அரசு மேற்கொண்டுள்ளது. இதற்காக வரும் 31ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் ஊரகப்பகுதிகளில் விவசாயம் இல்லாத நாட்களில் கிராமப்புற விவசாய தொழிலாளர்கள் வேலையின்றி தவிக்கும் நிலைக்கு முற்றுப்புள்ளி வைக்க, கடந்த 1995ம் ஆண்டு ஒன்றிய அரசால் நடைமுறைப்படுத்தப்பட்டது. நீர்வரத்துக்கால்வாய்கள், பாசனக்கால்வாய்கள், ஏரி, குளம், குட்டைகள் சீரமைத்தல், கசிவுநீர் குட்டைகள், பண்ணைக்குட்டைகள் அமைத்தல் போன்ற பணிகள் ஆரம்பகாலத்தில் 100 நாள் ேவலைத்திட்ட தொழிலாளர்களால் மேற்கொள்ளப்பட்டன. தற்போது இப்பணிகளுடன் தூய்மை பணிகளும், திடக்கழிவு மேலாண்மைத்திட்டப்பணிகளும் கூட இத்தொழிலாளர்களால் மேற்கொள்ளப்படுகின்றன.

100 நாள் வேலைத்திட்ட தொழிலாளர்களுக்கு அதற்கான அடையாள அட்டையும் வழங்கப்பட்டுள்ளது. இவர்களுக்கு தற்போது நாளொன்றுக்கு ₹319 கூலியாக வழங்கப்படுகிறது. தற்போது முழுமையாக ஆன்லைன் மூலமே இவர்களுக்கான ஊதியம் அவர்களின் வங்கி கணக்கில் செலுத்தப்படுகிறது. மேலும் ஒவ்வொரு நாளும் பணிக்கு வருபவர்களின் புகைப்படம் எடுக்கப்பட்டு பதிவேற்றப்படுகிறது. இத்திட்டத்தில் நடந்து வரும் முறைகேடுகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க முடியும் என்பதற்காக மேற்கண்ட நடைமுறைகள் கொண்டு வரப்பட்டன.

ஆனாலும் இத்திட்டத்தில் தவறுகள், புகார்களை களையவும், 100 நாள் வேலைத்திட்ட தொழிலாளர்களின் குறைகளை கேட்டு நிவர்த்தி செய்யவும், ஒவ்வொரு ஊராட்சியிலும் இத்திட்டத்திற்கான தணிக்கையை மேற்கொள்ளவும் ‘ஆம்பட்ஸ்பெர்சன்’ என்ற குறைதீர்வாளர் அலுவலர் ஒவவொரு மாவட்டத்துக்கும் நியமிக்கப்பட்டுள்ளார். அதன்படி, 38 மாவட்டங்களில் தேனி, கடலூர், திண்டுக்கல், ஈரோடு, கள்ளக்குறிச்சி, நாகப்பட்டினம், பெரம்பலூர், புதுக்கோட்டை, ராணிப்பேட்டை, தென்காசி, நீலகிரி, திருநெல்வேலி, விழுப்புரம், விருதுநகர் ஆகிய 14 மாவட்டங்களில் காலியாக உள்ள மகாத்மாகாந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டமான 100 நாள் வேலைத்திட்ட குறைதீர்வாளர் அலுவலர் பணியிடங்களை நிரப்புவதற்கான பணிகளை தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சித்துறை மேற்கொண்டுள்ளது.

அதற்கான இணையதளத்தில் அரசின் உத்தரவுடன் மாதிரி விண்ணப்பப்படிவங்களுடன், ஆட்கள் நியமனத்துக்கான முழு விவரங்களையும் இணைத்துள்ளது. அதன்படி, 10 ஆண்டு அனுபவத்துடன் அரசின் பொது நிர்வாகம், சட்டம், கல்வி, சமூகப்பணி அல்லது மக்கள் அல்லது சமுதாய அமைப்புகளுடன் தொடர்புடையவர்கள் இப்பதவிக்கு தகுதியானவர்கள் என்றும், அங்கீகரிக்கப்பட்ட ஏதாவது ஒரு பல்கலைக்கழகத்தில் பட்டப்படிப்புடன், எந்த அரசியல் கட்சி சாராதவராகவும் இருத்தல் வேண்டும். பிரச்னைகளை அமைதியான முறையில் அணுகி சுமூக தீர்வு காண்பவராகவும் இருத்தல் வேண்டும். எந்தவித குற்ற வழக்குகள் நாட்டின் எந்த நீதிமன்றத்திலும் விசாரணையில் இருக்காதவராகவும் இருக்க வேண்டும் என்பது போன்ற விதிகளுடன் 68 வயது வரையுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் என்றும், பணிக்காலம் அதிகபட்சமாக 2 ஆண்டுகள் என்றும், விண்ணப்பங்களை வரும் 31ம் தேதிக்குள் அனுப்பி வைக்க வேண்டும் என்றும் அரசின் உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

Related posts

மணல் கடத்திய டிராக்டர் டிப்பர் பறிமுதல்

உளுந்தூர்பேட்டையில் அக். 2ம் தேதி விசிக மது ஒழிப்பு மகளிர் மாநாடு ஆயத்தப் பணி

ஆசிரியரை பீர் பாட்டிலால் தாக்கி கொலை மிரட்டல்