1.85 கோடி கடன் தொகையை 14 லட்சத்தில் முடிப்பதா? வங்கி அதிகாரி மீது ஏன் லஞ்ச ஒழிப்பு நடவடிக்கை கூடாது?: தானாக முன்வந்து விசாரித்த உயர் நீதிமன்றம் கேள்வி

சென்னை: விருதுநகர் மாவட்டம் மணப்புரத்தில் பாண்டியன் எக்ஸ்ட்ராக்‌ஷன் என்ற நிறுவனம் உள்ளது. இந்த நிறுவனம் கொல்கத்தாவில் உள்ள இன்டஸ்ட்ரீயல் இன்வெஸ்ட்மென்ட் வங்கியில் (ஐஐபிஐ) கடந்த 1992ல் ₹62 லட்சம் கடன் வாங்கியது. அதற்கு ஈடாக 2 சொத்துகளுக்கான ஆவணங்களை நிறுவனம் வங்கியிடம் கொடுத்துள்ளது.கடன் திரும்ப செலுத்தப்படாததால் வங்கி கடன் வசூல் தீர்ப்பாயத்தில் கடந்த 2000ம் ஆண்டு வழக்கு தொடர்ந்தது. வழக்கை விசாரித்த தீர்ப்பாயம், வங்கிக்கு ₹1 கோடியே 85 லட்சத்தை தருமாறு நிறுவனத்திற்கு உத்தரவிட்டது.  இந்நிலையில், இந்த கடனை ஒருமுறை செட்டில்மென்ட் என்ற வகையில் ₹14 லட்சம் தர சம்மதம் தெரிவித்து நிறுவனம் வங்கியிடம் அந்த தொகைக்கான செக்கை கொடுத்துள்ளது. இதையடுத்து, 2010ல் நிறுவனத்தின் கோரிக்கையை வங்கி ஏற்றது. இந்நிலையில், ஒன்றிய நிதி அமைச்சகத்தின் குழு அதை ஏற்கவில்லை.இதையடுத்து, ஒருமுறை செட்டில்மென்ட் தொகையை ஏற்குமாறும், சொத்து ஆவணங்களை திரும்ப தருமாறும் வங்கிக்கு உத்தரவிடக்கோரி நிறுவனம் உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது. இந்த மனுவை விசாரித்த உயர் நீதிமன்ற நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம், 1992ல் ₹62 லட்சம் கடன் பெற்றும் 2010ல் ₹14 லட்சத்தை மட்டும் வாங்கிக்கொண்டு கடனை சரிசெய்வதை ஏற்க முடியாது. பொதுமக்களின் வரிப்பணத்தை அதிகாரிகள் பாதுகாக்க வேண்டும். தொழிற்சாலைகளின் வளர்ச்சிக்காகத்தான் ஒன்றிய அரசு இதுபோன்ற வங்கிகளில் முதலீடு செய்கிறது. ஆனால், இதுபோன்று மிக குறைந்த தொகையை பெற்று கடனை முடித்துவிடுவது கண்டிக்கத்தக்கது. வங்கியின் இந்த நடவடிக்கையை நிதி அமைச்சகத்தின் குழு ஏற்கவில்லை.எனவே, கடன் வசூல் தீர்ப்பாயம் உத்தரவிட்ட தொகையை மனுதாரர் நிறுவனம் கட்ட வேண்டும். எனவே, இந்த வழக்கு தள்ளுபடி செய்யப்படுகிறது என்று கடந்த 2021 டிசம்பரில் உத்தரவிட்டிருந்தார்.இந்த உத்தரவை எதிர்த்து நிறுவனம் மேல்முறையீடு செய்தது. இந்த வழக்கு தலைமை நீதிபதி முனீஸ்வர் நாத் பண்டாரி, நீதிபதி பரத சக்கரவர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது.வழக்கை விசாரித்த நீதிபதிகள், இந்த வழக்கில் வங்கியின் செயல்பாடு அதிர்ச்சியளிக்கிறது. உயர் நீதிமன்றம் உத்தரவிட்டும் கடனை வசூலிக்க வங்கி நடவடிக்கை எடுக்கவில்லை. இந்த விஷயத்தை நீதிமன்றம் தானாக முன்வந்து விசாரிக்கிறது. நிறுவனத்தின் செட்டில்மென்ட்டிற்கு ஒப்புதல் அளித்த வங்கி அதிகாரி யார், அவர் மீதும் நிறுவனத்தின் மீதும் ஏன் லஞ்ச ஒழிப்பு விசாரணை நடத்தக்கூடாது, நிறுவனத்தின் 2 சொத்துகள் வங்கியிடம் இருக்கும்போது ஏன் கடன் தொகையை வசூலிக்க முடியவில்லை. இதில் உள்நோக்கம் உள்ளது. எனவே, இதுகுறித்து விசாரணை நடத்த விசாரணையை வரும் 23ம் தேதிக்கு தள்ளிவைக்கிறோம்….

Related posts

தி.நகர் சட்டமன்ற தொகுதியில் குடிநீர் பிரச்னைக்கு விரைவில் தீர்வு: ஜெ.கருணாநிதி எம்எல்ஏ கேள்விக்கு அமைச்சர் கே.என்.நேரு பதில்

தனிநபருக்கு எத்தனை பாட்டில் விற்கலாம்? மது விற்பனைக்கு விதிமுறை பணியாளர்கள் கோரிக்கை

இன்று காலை 6-9 மணி வரை அண்ணாநகர் பகுதியில் போக்குவரத்து மாற்றம்: காவல் துறை அறிவிப்பு