கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டு திட்டத்தில் ரூ.1.19 கோடியில் குன்னூர் பேருந்து நிலையம் புதுப்பிக்கும் பணி துவக்கம்

*அமைச்சர்கள் சிவசங்கர், ராமச்சந்திரன் பங்கேற்பு

ஊட்டி : கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டுத்திட்டத்தின் கீழ், ரூ.1.19 கோடி மதிப்பீட்டில் குன்னூர் பேருந்து நிலையம் புதுப்பிக்கும் பணிகளை போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் துவக்கி வைத்தார். மேலும் அமைச்சர் ராமச்சந்திரன், எம்பி ஆ.ராசா, கலெக்டர் அருணா பங்கேற்றனர். சிறப்பு பகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ.2.50 கோடி மதிப்பீட்டில் கட்டி முடிக்கப்பட்ட கோத்தகிரி பணிமனை புதிய கட்டிடம் மற்றும் தொழிலாளர் ஓய்வறை கட்டிடம் திறப்பு விழா நடந்தது. இதில், சுற்றுலா துறை அமைச்சர் ராமச்சந்திரன் தலைமை வகித்தார். நீலகிரி எம்பி ராசா, கலெக்டர் அருணா ஆகியோர் முன்னிலை வகித்தார்.

போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் பணிமனை மற்றும் ஓய்வறையை திறந்து வைத்தார். அதனைத் தொடர்ந்து, மகளிர் கட்டணமில்லா விடியல் பயணத்தை விரிவாக்கம் செய்யும் பொருட்டு, குன்னூர் பேருந்து நிலையத்தில் இருந்து 5 பேருந்துகளை பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொடியசைத்து துவக்கி வைத்தனர். இதைத்தொடர்ந்து, தமிழ்நாடு சுற்றுலா துறை அமைச்சர் ராமச்சந்திரன் பேசுகையில், ‘‘தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின், மகளிர் நலன் அந்தந்த குடும்பங்களின் நலன் என்பதை உணர்ந்து, புதுமைப் பெண் திட்டம், கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டம், மகளிர்களுக்கு கட்டணமில்லா பேருந்து பயணம் என மகளிர்களின் வாழ்வாதாரத்தை உயர்த்திட பல்வேறு சிறப்பான திட்டங்களை அறிவித் செயல்படுத்தி வருகிறார்.

குறிப்பாக, கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தின் மூலம் குடும்ப தலைவிகளுக்கு பொருளாதார உதவியும், புதுமை பெண் திட்டம் மூலம் மாணவிகளின் உயர்கல்வியை உறுதி செய்தும் வருகிறார்கள்.

அதேபோல இந்த நிதியாண்டு நிதிநிலை அறிக்கையில் அறிவிக்கப்பட்டுள்ளபடி, மலை பகுதிகளுக்கும் மகளிர் விடியல் பயணம் திட்டம் விரிவாக்கம் செய்து, ஊட்டி மண்டலத்தில் மட்டும் 35 கி.மீ வரை இயக்கப்படும் மலைப்பகுதி 99 பேருந்துகளில் தற்போது பயணிக்கும் 25 ஆயிரத்து 821 மகளிர்கள் மேலும் அதிகரித்து தினமும் 41 ஆயிரத்து 959 மகளிர்கள் இதன்மூலம் பயன்பெறுவார்கள். இதுபோன்ற பல்வேறு திட்டங்கள் அரசால் அறிவித்து, செயல்படுத்தப்பட்டு வருகிறது.

அதனை பொதுமக்கள் தெரிந்து கொண்டு பயன்பெற வேண்டும்’’ என்றார். முன்னதாக, குன்னூர் நகராட்சி நிர்வாகத்தின் சார்பில் கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டுத்திட்டத்தின் கீழ், ரூ.1.19 கோடி மதிப்பீட்டில் குன்னூர் பேருந்து நிலையம் புதுப்பிக்கப்படவுள்ளது. இதற்கான பணிகளை அமைச்சர் ராமச்சந்திரன் மற்றும் சிவசங்கர் ஆகியோர் துவக்கி வைத்தனர். புதுப்பிக்கும் பணியில் தடுப்புச்சுவர் அமைத்தல், முன்பக்கம் கலர்சீட் நீட்டிப்பு, தரை ஓடு பதித்தல், சுவர் ஓடு பதித்தல், கழிப்பறை சீரமைத்தல், மேற்கூரையில் ஓடு பதித்தல், வர்ணம் பூசுதல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளது.

இந்நிகழ்வுகளில், தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழக (கோவை லிட்.,) மேலாண் இயக்குநர் ஜோஸப் டயஸ், தலைமை நிதி அலுவலர் கண்ணன், குன்னூர் வருவாய் கோட்டாட்சியர் சதீஸ், பொது மேலாளர் (ஊட்டி) நடராஜன், ஊட்டி நகராட்சி தலைவர் வாணீஸ்வரி, கூடலூர் நகராட்சி தலைவர் பரிமளம், குன்னூர் நகராட்சி துணை தலைவர் வசீம்ராஜா, ஊராட்சி ஒன்றியத்தலைவர்கள் கீர்த்தனா, சுனிதா நேரு, ராம்குமார், குன்னூர் நகராட்சி ஆணையாளர் பாரிஜான், நகராட்சிப் பொறியாளர் பாலுசாமி, மாவட்ட திட்டக்குழு உறுப்பினர் ராமசாமி உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Related posts

ஒன்றிய அரசின் மெத்தனப்போக்கே தமிழக மீனவர்கள் கைதுக்கு காரணம்: எஸ்டிபிஐ குற்றச்சாட்டு

ஆந்திராவிலிருந்து கடத்தி வரப்பட்ட 700 போதை மாத்திரைகள் பறிமுதல்

ரயில் ஓட்டுநர் பிரச்னைகளை உடனடியாக தீர்க்க வேண்டும்: ஒன்றிய அமைச்சரிடம் திமுக எம்பி வலியுறுத்தல்