₹86.25 கோடியில் மறு கட்டமைப்பு தென்பெண்ணையாறு எல்லீஸ்சத்திரம் தடுப்பணையில் மண்ணரிப்பை தடுக்க தடுப்புச்சுவர் அமைக்கப்படும்

* திட்ட மதிப்பீடு தயாரிக்க அலுவலருக்கு உத்தரவு

* ஆய்வுக்கு பின் ஆட்சியர் பழனி தகவல்

விழுப்புரம் : விழுப்புரம் அருகே எல்லீஸ்சத்திரம் தடுப்பணையில் ரூ.86.25 கோடியில் மறு கட்டமைப்பு பணிகளை ஆய்வு செய்த கலெக்டர் பழனி, மண்யரிப்பை தடுக்கும் வகையில் தடுப்புச் சுவர் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். விழுப்புரம் மாவட்டத்தில் முக்கிய நீர் ஆதாரமாக தென்பெண்ணை ஆறு விளங்கி வருகின்றன. இந்த ஆற்றின் குறுக்கே கட்டப்பட்ட தடுப்பணைகள் மூலம் கிளை ஆறுகள் மற்றும் வாய்க்கால்கள் மூலம் ஏரிகளுக்கு தண்ணீர் கொண்டு சென்று நிரப்பப்பட்டு குடிநீர் மற்றும் விவசாய சாகுபடிக்கு பயன்படுத்தப்பட்டு வருகின்றன. அதன்படி விழுப்புரம் எல்லீஸ்சத்திரம் தடுப்பணை மழை வெள்ளத்தில் கடந்த 2021ம் ஆண்டு அடித்துச் செல்லப்பட்டன.

தொடர்ந்து இந்த தடுப்பணையை மறு கட்டமைப்பு பணிகள் மேற்கொள்ள ரூ.86.25கோடி நிதி ஒதுக்கீடு செய்து பணிகள் மேற்கொள்ளப்பட்டு முடிவடைந்துள்ளது. தற்போது பெய்த மழையில் தடுப்பணையில் மழை நீர் வந்தடைந்துள்ளது. இந்நிலையில் தடுப்பணை அருகே மண்அரிப்பு ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் குற்றம் சாட்டினர். இதனை தொடர்ந்து ஆட்சியர் பழனி நேற்று துறை அதிகாரிகளுடன் தடுப்பணையில் ஆய்வு மேற்கொண்டார்.

அப்போது அவர் தெரிவிக்கையில், விழுப்புரம் மற்றும் திருவெண்ணெய்நல்லூர் தாலுகா ஏனாதிமங்கலம் மற்றும் சுப்பூர் கிராமங்களுக்கு இடையே தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே 1949-1950ம் ஆண்டு எல்லீஸ்சத்திரம் அணைக்கட்டு கட்டப்பட்டது. இந்த அணைக்கட்டில் உள்ள வலது புற பிரதான கால்வாய்களான எரளூர், ரெட்டி என இரு வாய்க்கால்கள் மூலம் 12 ஏரிகளுக்கும், இடது புற பிரதான கால்வாய்களான ஆழங்கால், மரகதபுரம் மற்றும் கண்டம்பாக்கம் என மூன்று வாய்க்கால்கள் மூலம் 14 ஏரிகளுக்கும். மொத்தம் 13,100 ஏக்கர் பாசன வசதி பெறுகின்றன.
2021ம் ஆண்டு பெய்த கனமழையின் காரணமாகவும், ஆற்றில் ஏற்பட்ட வெள்ள பெருக்கின் காரணமாகவும், அணைக்கட்டு சேதமடைந்தது.

இதனால் முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவுபடி விவசாயிகளின் துயர்துடைக்கும் வகையில் சேதமடைந்த அணைக்கட்டை சீரமைத்திடும் வகையில், 2023-2024ம் ஆண்டு சட்டமன்ற கூட்டத்தொடரில் நீர்வளத்துறை அமைச்சர் சேதமடைந்த அணைக்கட்டை ரூ.86.25 கோடி செலவில் மறுகட்டுமானம் செய்ய அறிவிக்கப்பட்டு அரசாணை வழங்கப்பட்டதைத் தொடர்ந்து, நிதி ஒதுக்கீடும் வழங்கப்பட்டது.

புதிய அணைக்கட்டின் அருகில் கரைகளின் இருபுறமும் கான்கிரீட் வெள்ளதடுப்பு சுவர் மற்றும் வெள்ளத்தடுப்பு கரை அமைக்கும் பணிகளும் மேற்கொள்ளப்பட்டது.விழுப்புரம் மற்றும் திருவெண்ணெய்நல்லூர் தாலுகாக்கள், ஏனாதிமங்கலம் மற்றும் கப்பூர் கிராமங்களுக்கு இடையே தென்பெண்ணையாற்றின் குறுக்கே எல்லீஸ் சத்திரம் அணைக்கட்டு கட்டும் பணிகள் முழுமையாக முடிக்கப்பட்டுள்ளது.

இந்த அணைக்கட்டின் மூலம் எதிர்வரும் பருவ மழைக்காலத்தில் தென்பெண்ணையாற்றில் பெறப்படும் நீரை வலதுபுற பிரதான கால்வாய்களான எரளுர் மற்றும் ரெட்டி என இரு வாய்க்கால்கள் மூலம் 12 ஏரிகளுக்கும், இடதுபுற பிரதான வாய்க்கால்களான ஆழங்கால், மரகதபுரம் மற்றும் கண்டம்பாக்கம் என மூன்று வாய்க்கால்கள் மூலம் 14 ஏரிகளுக்கும் மொத்தம் 13100 ஏக்கர் பாசன வசதி பெறுகின்றன. இதனால் 36 கிராமங்களின் நிலத்தடி நீர் மட்டம் உயர்வதோடு, விவசாயம் மற்றும் குடிநீர் ஆதாரம் மேம்படும்.

அதனடிப்படையில், ஏனாதிமங்கலத்தில், தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே புதியதாக கட்டப்பட்டு வரும் எல்லீஸ் சத்திரம் அணைக்கட்டு கட்டுமானப்பணி மற்றும் அணையிலிருந்து செல்லும் வாய்க்கால் சீரமைப்பு பணிகளைஆய்வு மேற்கொள்ளப்பட்டது. தற்போதுவரை 99 சதவீதம் அணைகட்டு கட்டுமானப்பணிகள் நிறைவு பெற்றுள்ளது. எஞ்சியுள்ள 1 சதவீதம் பணியானது
10 நாட்களுக்குள் முடிக்கப்பட்டு விடும். ஒவ்வொரு கட்டுமான முடிவிலும் தர நிர்ணயம் செய்யப்பட்டு அடுத்தடுத்த நிலையிலான கட்டுமானப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தற்போது அணைக்கட்டான நல்ல முறையிலும், உறுதியான நிலையிலும் கட்டப்பட்டுள்ளது.

அணையிலிருந்து நீர் வெளியேறும் வாய்க்கால் பகுதிகளில் முதல் 100 மீட்டர் அளவிற்கு கான்கிரிட் வாய்க்கால் அமைக்கப்பட்டுள்ளது. அதற்கு அடுத்த வரக்கூடிய வாய்க்கால் பகுதிகள் 500 மீட்டர் வரை தூர்வாரப்பட்டுள்ளது. தூர்வாரப்பட்ட வாய்க்கால் பகுதிகளில் கரையோரப்பகுதிகளில் மண்கொட்டப்பட்டது. தற்போது பெய்த மழையில் மண் அரிப்பு ஏற்பட்டுள்ளது.
இதனை உடனடியாக நிரந்தரமாக சரிசெய்யும் பணிகள் மேற்கொள்ளப்பட்டது.

மேலும், விவசாயிகள் வைத்த கோரிக்கையின் அடிப்படையில் இரண்டு பக்கங்களில் கரைகள் அமைத்திடவும், பொதுமக்களின் பாதுகாப்பு கருதி அணைக்கட்டில் 500 மீட்டர் அளவிற்கு பாதுகாப்பு தடுப்புச்சுவர் அமைத்திடவும் திட்ட மதிப்பீடு தயார் செய்திட துறை சார்ந்த அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

கிராம மக்கள் முற்றுகையால் பரபரப்பு……

விழுப்புரம் அருகே எல்லீஸ் சத்திரம் தடுப்பனையில் ஆட்சியர் பழனி உள்ளிட்ட அதிகாரிகள் ஆய்வு செய்தபொது ஏனாதிமங்கலம் கிராம மக்கள் திடீரென்று முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது எங்கள் பகுதியில் அமைக்கப்பட்ட தடுப்பணையில் இருபுறமும் 500 மீட்டர் தூரம் சுற்றுச்சுவர் அமைக்கவில்லை. இதனால் எங்கள் கிராமத்திற்குள் தண்ணீர் புகுந்துவிடும்.

சிறுவர், சிறுமிகள் விளையாடும்போதும் அவர்களுக்கு பாதுகாப்பு கேள்விக்குறியாக உள்ளது. தொடர்ந்து அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்திய ஆட்சியர் பழனி உங்கள் கோரிக்கை விரைவில் நிறைவேற்றப்படும். தடுப்பு சுவர் அமைப்பதற்கும் கருங்கல் வைத்து கரையை பலப்படுத்தவும் டெண்டர் விடப்பட்டுள்ளது விரைவில் இந்த பணிகள் மேற்கொள்ளப்படும் என்று கூறியதால் மக்கள் கலைந்து சென்றனர்.

Related posts

திருப்பத்தூரில் கடன் பிரச்சனையால் 2 குழந்தைகள் அடித்துக்கொலை

செப் 20: பெட்ரோல் விலை 100.75, டீசல் விலை 92.34க்கு விற்பனை

மங்களூரு அருகே 2 தலையுடன் பிறந்த கன்றுக்குட்டி