₹8 கோடி மதிப்பீட்டில் ஒளிரும் தோட்டம் மரகத பூங்காவில் சுற்றுலாத்துறை முதன்மை செயலாளர் நேரில் ஆய்வு

மாமல்லபுரம், நவ.23: மாமல்லபுரம் மரகத பூங்கா மற்றும் சுற்றுலா வளர்ச்சி கழக விடுதி ஆகியவற்றை சுற்றுலாத்துறை முதன்மை செயலாளர் நேரில் ஆய்வு செய்தார். மாமல்லபுரம் பழைய சிற்பக்கலை கல்லூரி சாலையில் உள்ள மரகத பூங்காவில் சுற்றுலாத்துறை மற்றும் தனியார் பங்களிப்புடன் ₹8 கோடி மதிப்பில் 10 லட்சம் மின் விளக்குகள் மூலம் ஒளிரும் விளக்குகள், வண்ணமயமாக ஒளிரும் பூக்கள், ஒளிரும் மரங்கள், செல்பி, புகைப்படம் எடுக்கும் இடங்கள், செயற்கை நீருற்று, மினி 5டி அனிமேஷன், ஒளிரும் நீர் பூங்கா, உணவு அரங்குகள் என 2.47 ஏக்கரில் பிரமாண்டமாக ஒளிரும் தோட்டம் அமைய உள்ளது. இந்நிலையில், மரகத பூங்காவில் ஒளிரும் தோட்டம் அமைய உள்ள இடத்தை, சுற்றுலாத்துறை முதன்மை செயலாளர் காகர்லா உஷா நேற்று மாலை நேரில் ஆய்வு செய்தார்.

இதையடுத்து, தலசயன பெருமாள் கோயில் வளாகத்தில் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகம் சார்பில், ₹5 கோடி மதிப்பில் 3டி அனிமேஷன் மேப்பிங் திட்டம், கடற்கரை கோயில் செல்லும் வழியில் உள்ள தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழக பழைய விடுதி, நாட்டிய விழா நடைபெறும் இடம் ஆகியவற்றை பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்த ஆய்வின்போது, சுற்றுலாத்துறை மண்டல மேலாளர் வெங்கடேசன், மாமல்லபுரம் சுற்றுலா அலுவலர் சக்திவேல், தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழக மேலாளர் பிரபுதாஸ், உணவு பாதுகாப்பு மாவட்ட நியமன அலுவலர் அனுராதா ஆகியோர் உடனிருந்தனர். அப்போது, முதன்மை செயலாளர் காகர்லா உஷா கூறுகையில், ‘மாமல்லபுரம் மரகத பூங்காவில் ₹8 கோடியில் ஒளிரும் தோட்டம் அமைக்கும் பணி சில தினங்களில் தொடங்கும். கடற்கரைக்கு செல்லும் வழியில் 40 ஏக்கர் பரப்பளவில் பழைய சுற்றுலா வளர்ச்சிக் கழக விடுதி பாழடைந்து காணப்படுகிறது. இங்கு, அதிகமான பயணிகளை வரவழைக்க சுவ்தேஷ் தர்ஷன் 2.0 திட்டம் மூலம் பணிகள் மேற்கொள்ளப்படும். ஆண்டுதோறும், டிசம்பர் முதல் ஜனவரி வரை நடைபெறும் நாட்டிய விழாவுக்கு இந்தாண்டு சிறப்பான ஏற்பாடுகளை செய்ய உள்ளோம்’ என்றார்.

Related posts

வெளிநாட்டில் வேலை வள்ளியூர் பிரமுகரிடம் ரூ.10 லட்சம் மோசடி: கேரள முதியவர் கைது

சுரண்டை அரசு கல்லூரியில் சேர விண்ணப்பிக்க இன்று கடைசி நாள்

ஒன்றிய தொழிலாளர் அமைச்சகம் மூலம் பீடித் தொழிலாளர்கள் குழந்தைகளுக்கு கல்வி உதவித் தொகை ஆணையர் தகவல்