₹52 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்டு வந்த திருத்தணி புறவழிச்சாலை பணி நிறைவு : ஆடிக்கிருத்திகை விழாவையொட்டி வாகன சேவை தொடங்க கோரிக்கை

திருத்தணி, ஜூலை 18 : திருத்தணியில் ₹52 கோடி மதிப்பீட்டில் புறவழிச்சாலை திட்டப்பணிகள் முடிந்து நிலையில் போக்குவரத்து சேவைக்கு தயார் நிலையில் உள்ளது. இதனால், திருத்தணியில் நிலவி வந்த வாகன நெரிசல் குறைய உள்ளது. மேலும், போக்குவரத்து சேவை தொடங்க வேண்டும் என்று வாகன ஓட்டிகள் அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளனர். திருவள்ளூர் மாவட்டத்தில் சுற்றுலா நகரமான திருத்தணியில் சிறப்பு பெற்ற முருகன் கோயில் உள்ளது. மேலும் ஏராளமான திருமண மண்டபங்கள் இருப்பதால், தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் வாகனங்களில் திருத்தணிக்கு வந்து செல்கின்றனர்.

குறிப்பாக விழாக்கள், சுப முகூர்த்த நாட்களில் வாகன நெரிசல் அதிகரித்து வாகனங்கள் சாலைகளில் வரிசை கட்டி நிற்கின்றது. இதனால், திருத்தணி நகரில் போக்குவரத்து பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வாகன ஓட்டிகள், வியாபாரிகள், பொதுமக்கள் அவதிப்பட்டு வந்தனர்.இதனை தொடர்ந்து, திருத்தணியில் போக்குவரத்து நெரிசல் தடுக்கும் வகையில் திருத்தணி புறவழிச்சாலை திட்டம் கொண்டுவரப்பட்டது. இதற்காக நெடுஞ்சாலைத்துறை சார்பில் ஒருங்கிணைந்த சாலை மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ₹52 கோடி மதிப்பீட்டில் சென்னை – திருப்பதி தேசிய நெடுஞ்சாலையிலிருந்து அரக்கோணம் சாலை சந்திப்பு வரை 3.2 கிலோ மீட்டர் தூரம் சாலை அமைக்கும் பணிகள் கடந்த 2018ல் தொடங்கப்பட்டது.

சுமார் 6 ஆண்டுகள் நடைபெற்று வந்த இந்த சாலைப்பணிகள் மற்றும் சாலைக்கு இடையில் ரயில்வே மேம்பாலம் மற்றும் நந்தி ஆறு இடையில் உயர்மட்ட பாலம் அமைக்கும் பணிகள் நிறைவு பெற்றுள்ளது. இந்நிலையில், திருத்தணி முருகன் கோயிலில் வரும் 29ல் ஆடிக்கிருத்திகை விழா நடைபெற உள்ள நிலையில் லட்சக்கணக்கான பக்தர்கள் திருத்தணிக்கு வருகை தருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால், விழா தொடங்கும் முன்பாக தயார் நிலையில் உள்ள திருத்தணி புறவழிச்சாலையில் போக்குவரத்து சேவை தொடங்க வேண்டும் என்று வாகன ஓட்டிகள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related posts

சிஐடி எஸ்ஐயை தாக்கிய வழக்கில் 7 பேர் கைது

பனையம்மன் கோயிலில் தேர்த்திருவிழாl திரளான பக்தர்கள் வடம் பிடித்து தேர் இழுத்தனர்

பள்ளி மாணவர்கள் இடையே மோதல் வேலூர் அண்ணா சாலையில் பரபரப்பு