மோகனூர்-நாமக்கல்-சேந்தமங்கலம்-ராசிபுரத்தில் ₹280.73 கோடி மதிப்பில் தரம் உயர்த்தப்பட்ட இருவழிச்சாலை

*முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்

ராசிபுரம் : நெடுஞ்சாலைத் துறை சார்பில் ₹280 கோடியே 73 லட்சம் செலவில் தரம் உயர்த்தப்பட்ட சாலையை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று திறந்து வைத்தார்.பொருளாதாரத்தின் அங்கங்களான விவசாயம், தொழில், வணிகம், சுற்றுலா போன்ற துறைகளின் மேம்பாட்டிற்கு சாலை உட்கட்டமைப்பு முக்கிய பங்கு வகிக்கிறது. மாநிலத்தில் புதிய சாலைகள் மற்றும் பாலங்கள் அமைத்தல், சாலைகள் மற்றும் பாலங்களை பராமரித்தல், கிராமப்புறங்களுக்கு இணைப்புச் சாலைகள் அமைத்தல் போன்ற முக்கியப் பணிகளை நெடுஞ்சாலைத் துறை மேற்கொண்டு வருகிறது. இதன்மூலம், தமிழ்நாடு அரசு, நெடுஞ்சாலைத் துறை வாயிலாக தரமான மற்றும் பாதுகாப்பான சாலை கட்டமைப்பினை சிறந்த முறையில் உருவாக்கி, பராமரித்து வருகிறது.

சென்னை -கன்னியாகுமரி தொழிற்தட திட்டத்தின் கீழ், ஆசிய வளர்ச்சி வங்கியின் நிதி உதவியுடன் ₹280 கோடியே 73 லட்சம் செலவில், நாமக்கல் மாவட்டம், மோகனூர்-நாமக்கல்-சேந்தமங்கலம்-ராசிபுரம் சாலையில் (மா.நெ – 95) 31.50 கிலோ மீட்டர் நீளத்திற்கு, கடின புருவங்களுடன் கூடிய இருவழித்தடமாக தரம் உயர்த்தப்பட்ட சாலையை, முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.

இத்திட்டத்தில், 5 புறவழிச்சாலைகள், மழைநீர் வடிகால்கள், 53 குறு மற்றும் 3 சிறு பாலங்கள், சாலைப் பாதுகாப்பை உறுதிசெய்ய தெருவிளக்குகள், சிசிடிவி கேமராக்கள் மற்றும் பொதுமக்களின் வசதிக்காக பேருந்து நிறுத்தங்களில் குடிநீர் மற்றும் கழிப்பறை வசதிகள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும், இத்திட்டத்தில், முத்துகாப்பட்டி, சேந்தமங்கலம், காளப்பநாயக்கன்பட்டி, பேளுக்குறிச்சி மற்றும் சிங்களாந்தபுரம் ஆகிய முக்கிய ஊர்களுக்கு புறவழிச்சாலை அமைக்கப்பட்டுள்ளதால் கனரக வாகனங்கள் போக்குவரத்து நெரிசல் மற்றும் பயண நேரம் குறையும். நாமக்கல்லின் முக்கிய சுற்றுலா தலமான கொல்லிமலைக்கு சென்னை, பெங்களூரு மற்றும் கோயம்புத்தூர் நகரங்களில் இருந்து வரும் வாகனங்கள் எளிதாக செல்ல முடியும். நாமக்கல் மாவட்டத்தில் உள்ள 21க்கும் மேற்பட்ட கிராமங்களில் இருந்து விவசாய விளைபொருட்களை எளிதாக எடுத்துச்செல்ல முடியும்.

இதே போல், திருப்பூர் மாவட்டம், பல்லடம் – தாராபுரம் சாலை இருவழித்தடத்திலிருந்து நான்கு வழித்தடமாக ₹53 கோடியே 40 லட்சம் ரூபாய் செலவில் அகலப்படுத்தி மேம்படுத்தப்பட்ட சாலையையும், கோயம்புத்தூர் நகரில், தேசிய நெடுஞ்சாலை எண்.67ல் (நாகப்பட்டினம் – கூடலூர் – மைசூர் சாலை) கோயம்புத்தூர்-மேட்டுப்பாளையம் சாலை மற்றும் கணபதி மணியகாரம்பாளையம் சாலை சந்திப்பில் 658 மீட்டர் நீளத்திற்கு ₹41 கோடியே 88 லட்சம் செலவில் அமைக்கப்பட்டுள்ள மேம்பாலத்தையும் முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று திறந்து வைத்தார்.

இந்நிகழ்ச்சியில், அமைச்சர்கள் எ.வ.வேலு, கயல்விழி செல்வராஜ், தலைமைச் செயலாளர் சிவ் தாஸ் மீனா, நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை செயலாளர் பிரதீப் யாதவ், தமிழ்நாடு சாலை மேம்பாட்டுத் திட்ட இயக்குநர் பிரபாகர், நெடுஞ்சாலைத் துறை கட்டுமானம் மற்றும் பராமரிப்பு அலகு தலைமை பொறியாளர் சந்திரசேகர் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Related posts

கென்யாவில் அரசுக்கு எதிராக போராட்டம்: 39 பேர் பலி

நாமக்கல் முட்டை விலை ரூ.5.15 ஆக நீடிப்பு

நீட் முறைகேடு – குஜராத் பள்ளி உரிமையாளர் கைது