₹2.15 கோடியில் புத்துயிர் பெறும் வேலூர் மாவட்ட மைய நூலகம் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது வாசகர்களுக்கு வட்ட வடிவ மேஜைகளுடன்

வேலூர், ஜூன் 8: வாசகர்களுக்கு வட்ட வடிவ மேஜைகளுடன் ₹2.15 கோடியில் வேலூர் மாவட்ட மைய நூலகம் புத்துயிர் பெறுகிறது. இதற்கான பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. வேலூர் மாவட்டத்தில் மாவட்ட மைய நூலகத்தின் கீழ் ஊர்புற நூலகம், நகர்ப்புற நூலகம் என்று நூற்றுக்கும் மேற்பட்ட நூலகங்கள் இயங்கி வருகிறது. இந்த நூலகங்களுக்கு தேவையான நூல்கள் அனைத்து மாவட்ட மைய நூலகங்கள் மூலம் வாங்கப்பட்டு, அந்தந்த நூலகங்களுக்கு பிரித்து அனுப்பி வைக்கப்படுகிறது. இதற்கான புத்தகங்கள் அனைத்து மாவட்ட மைய நூலகத்தில் உள்ள கட்டிடத்தில் தான் வைக்கப்படுகிறது.

மேலும் மாவட்ட மைய நூலகத்தில் தமிழ், ஆங்கிலம், கட்டுரை, கவிதை, வரலாறு, ஆராய்ச்சி புத்தகங்கள், போட்டி தேர்வுகளுக்கான புத்தகங்கள் உட்பட லட்சக்கணக்கான புத்தகங்கள் வாசகர்கள் பயன்பாட்டிற்காக வைக்கப்பட்டுள்ளது. தினமும் நூற்றுக்கும் மேற்பட்ட வாசகர்கள் நூலகத்திற்கு வந்து பயன்பெற்று வருகின்றனர். அந்த வகையில் மாவட்ட மைய நூலகத்தில் சுமார் 5 லட்சத்திற்கும் அதிகமான நூலகங்கள் இருக்கும். இப்படி முக்கியத்துவம் வாய்ந்த இந்த நூலகக்கட்டிடம் மழைக்காலங்களில் சீலிங் வலுவிழந்து மழைநீர் கசிவு ஏற்பட்டது.

அதேபோல் தரைப்பகுதியிலும் மழைநீர் ஈரம் படிந்திருந்தது. எனவே மாவட்ட மைய நூலகத்தை புதுப்பிக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்து வந்தது. இதையடுத்து அரசு உத்தரவின்பேரில் மாவட்ட மைய நூலகத்தினை புனரமைக்க ₹2.15 கோடி நிதி ஒதுக்கப்பட்டது. அதன்படி வேலூர் மாவட்ட மைய நூலகத்தில் சீலிங்க், டைல்ஸ், மின் ஒயர்கள், ஏசி வசதி என்று மாற்றப்பட்டு பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. அதோடு வாசகர்கள் பயில்வதற்கு வட்டவடிவிலான மேஜை என்று புதுப்பொலிவுக்கு மாற்றப்பட்டுள்ளது. விரைவில் அனைத்து பணிகளும் முடிக்கப்பட்டு பயன்பாட்டிற்கு கொண்டுவரப்படும். தற்போது வாசகர்கள் பயில்வதற்கும், போட்டி தேர்வுகளுக்கு என்று பயில்வதற்கு இடவசதியுடன் இயங்கி வருகிறது என்று நூலகப்பிரிவு அதிகாரிகள் தெரிவித்தனர்.

Related posts

தஞ்சாவூர் கலெக்டர் அலுவலகத்தில் இன்று வங்கிக்கடன் முகாம்

நாமக்கலுக்கு சரக்குரயிலில் 1250 டன் அரிசி அனுப்பிவைக்கப்பட்டது

டெல்டாவில் குறுவை சாகுபடியில் மந்தம் தஞ்சாவூர் குந்தவை நாச்சியார் கல்லூரியில் முதலாம் ஆண்டு மாணவிகளுக்கு உற்சாக வரவேற்பு