₹10.79 கோடியில் வளர்ச்சித்திட்டப்பணிகள்

சேலம், மே 13: ஏற்காட்டை மேம்படுத்த பல்வேறு துறைகளின் மூலம் ₹10.79 கோடியில் பல்வேறு வளர்ச்சித்திட்டப்பணிகள் மேற்கொண்டு வருவதாக கலெக்டர் கார்மேகம் தெரிவித்துள்ளார். சேலம் மாவட்டம் ஏற்காடு ஊராட்சி ஒன்றியத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு வளர்ச்சி திட்டப்பணிகளை நேற்று, மாவட்ட கலெக்டர் கார்மேகம் பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்த ஆய்விற்கு பின் கலெக்டர் கார்மேகம் கூறியதாவது: மலைவாழ் மக்களுக்கு சாலை வசதி, குடிநீர் வசதி, மின்சார வசதி, போக்குவரத்து வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகளை முழுமையாக செய்து கொடுக்க மாவட்ட நிர்வாகம் தனிக்கவனம் செலுத்தி வருகிறது. அந்தவகையில், ஏற்காடு ஊராட்சி ஒன்றியத்தில் கொட்டச்சேடு-கே.நார்த்தஞ்சேடு வரை 2.66 கி.மீ., நீளத்திற்கு புதிய சாலை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. 2022-23ம் நிதியாண்டில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் சார்பில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித்திட்டத்தில் ₹26 லட்சம் மதிப்பீட்டிலான பணிகளும், நமக்கு நாமே திட்டத்தில் ₹37 லட்சம் மதிப்பீட்டில் 4 பணிகளும், கள்ளக்குறிச்சி எம்பியின் தொகுதி மேம்பாட்டு நிதியின் மூலம் ₹13 லட்சத்தில் ஒரு பணியும், பொதுநிதியின் கீழ் ₹2.36 கோடி மதிப்பீட்டில் 54 பணிகளும், 15வது நிதிக்குழு மானியத்திட்டத்தில் ₹4.01 கோடியில் 123 பணிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

மேலும், பள்ளிகள் உட்கட்டமைப்பு மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ₹4 லட்சம் மதிப்பீட்டில் 3 பணிகளும், அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தில் ₹1.05 கோடியில் 10 பணிகளும், கிராமப்புற நூலகங்கள் சீரமைக்கும் திட்டத்தில் ₹4.69 லட்சத்தில் 3 பணிகளும், தூய்மை பாரத இயக்கம் (ஊரகம்) மூலம் ₹1.57 லட்சத்தில் புதிய பணிகளும், புதிய மற்றும் கூடுதல் வகுப்பறைகள் கட்டும் திட்டத்தின் மூலம் ₹1.55 கோடியில் 5 பணிகளும் என நடப்பு நிதியாண்டில் ஏற்காட்டை மேம்படுத்தும் வகையில் ₹10.79 கோடி மதிப்பீட்டிலான 222 வளர்ச்சி திட்டப்பணிகள் நடந்து வருகிறது. இந்த பணிகள் அனைத்தையும் குறிப்பிட்ட கால அளவிற்குள் முடித்து, மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வந்திடவும், மலைவாழ் மக்களுக்கு தேவையான சாலை, குடிநீர், மின்சாரம், போக்குவரத்து வசதியை நிறைவேற்றித்தர துறை சார்ந்த அலுவலர்கள் முனைப்போடு பணியாற்றிட வேண்டும் என அறிவுறுத்தியுள்ளேன். இவ்வாறு கலெக்டர் கார்மேகம் தெரிவித்தார். முன்னதாக நடந்த ஆய்வின்போது, ஏற்காடு தாசில்தார் தாமோதரன், ஏற்காடு வட்டார வளர்ச்சி அலுவலர் அன்புராஜன், வட்டார போக்குவரத்து அலுவலர் கல்யாணக்குமார், உதவிப்பொறியாளர் சதீஷ் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.

Related posts

நெல்லை- சென்னை வந்தே பாரத்துக்கு திருச்செந்தூரில் இருந்து இணைப்பு ரயில் நாசரேத் வியாபாரிகள் சங்கம் வலியுறுத்தல்

உடன்குடியில் நாளை வருமுன் காப்போம் திட்ட முகாம்

வேப்பங்காடு பள்ளி ஆண்டுவிழா