₹10 ஆயிரம் கோடி தங்கம் இருக்கு… தங்கவயல் தங்கச்சுரங்கத்தை ஒன்றிய அரசு நடத்தணும்…பொருளாதார நிபுணர் ஸ்ரீகாந்த்கூபே வலியுறுத்தல்

பெங்களூரு : தங்கவயலில் குவித்து வைத்துள்ள சைனாட் மண்ணில் மட்டும் ₹10 ஆயிரம் கோடி மதிப்பிலான தங்கம் இருப்பதாக நிபுணர் குழு ஆய்வு செய்து அறிக்கை கொடுத்துள்ளதை அடிப்படையாக வைத்து தங்கச்சுரங்கத்தை ஒன்றிய அரசு நடத்த வேண்டும் என்று பொருளாதார நிபுணர் ஸ்ரீகாந்த்கூபே வலியுறுத்தி உள்ளார். இந்திய பொருளாதாரத்தின் ஏற்ற, தாழ்வுகள் என்ற தலைப்பில் பெங்களூருவில் நடந்த கருத்தரங்கில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு பொருளாதார நிபுணர் காந்த்கூபே பேசியதாவது:நமது நாட்டின் பொருளாதாரத்திற்கு முதுகெலும்பாக தங்கவயலில் இயங்கி வந்த நூற்றாண்டு பழமையான பாரத தங்கச்சுரங்கம் விளங்கியது. பண்டித் ஜவஹர்லால் நேரு பிரதமராக இருந்தபோது அறிமுகம் செய்யப்பட்ட ஐந்தாண்டு திட்டத்திற்கு தேவையான நிதியை உலக வங்கியிடம் கடனாக பெற்றபோது, தங்கச்சுரங்கத்தில் வெட்டி எடுக்கப்பட்ட தங்கத்தை முதலீடாக வைத்துள்ளார். கடந்த 1880 முதல் 2001ம் ஆண்டு வரை தங்கச்சுரங்க நிறுவனத்தில் சுமார் ₹45 ஆயிரம் கோடி மதிப்புள்ள 804 டன் தங்கம் வெட்டி எடுக்கப்பட்டு நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு துணையாக இருந்துள்ளது. மத்திய அரசின் கனிம வளத்துறை அமைச்சகத்தின் கீழ் இயங்கி வந்த பொதுத்துறை நிறுவனமான பாரத தங்கச்சுரங்க நிறுவனம், தங்கம் இல்லை என்ற சொத்தையான காரணம் கூறி கடந்த 20 ஆண்டுகளுக்கு முன் மூடப்பட்டது. தங்கச்சுரங்கத்தை நவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்தி நல்ல லாபத்தில் நடத்த முடியும் என்றும், கடந்த நூறாண்டுகளில் குவித்து வைத்துள்ள சைனாட் மண்ணில் மட்டும் ₹10 ஆயிரம் கோடி மதிப்பிலான தங்கம் இருப்பதாகவும் நிபுணர் குழு ஆய்வு செய்து அறிக்கை கொடுத்துள்ளது. உலகளவில் தற்போது தங்கத்தின் தேவை அதிகம் உள்ளது. இந்த காலகட்டத்தில் மத்திய அரசு ₹500 கோடி முதலீடு செய்தால், மூடியுள்ள தங்கச்சுரங்கத்தை மீண்டும் திறந்து நல்ல லாபத்தில் நடத்த முடியும். தங்கச்சுரங்கத்தை மத்திய அரசு தனியாரிடம் ஒப்படைக்காமல், மத்திய அரசே ஏற்று நடத்த வேண்டும் என்று கர்நாடக உயர் நீதிமன்றம் ஏற்கனவே ஆலோசனை வழங்கியுள்ளது. அதை ஏற்று குளோபல் டெண்டர் மூலம் தனியாரிடம் ஒப்படைப்பதை தவிர்த்து, மத்திய அரசே ஏற்று நடத்த வேண்டும் அல்லது மத்திய அரசு கடந்தாண்டு அறிமுகம் செய்துள்ள எம்எம்டிஆர்-2015 திட்டத்தின் கீழ் கர்நாடக மாநில அரசு ஏற்று நடத்துவதற்கான வசதிகள் செய்து கொடுக்க வேண்டும். நாட்டின் தற்போதைய பொருளாதாரத்தை உயர்த்த வேண்டுமானால், மூடியுள்ள தங்கச்சுரங்கத்தை மீண்டும் திறக்க வேண்டியது காலட்டத்தின் கட்டாயமாகும். இந்த கோரிக்கையை முன்வைத்து மாநிலத்தை சேர்ந்த எம்.பிக்கள், அரசியல் கட்சி தலைவர்கள், தங்கச்சுரங்கத்தை கர்நாடக உயர் நீதிமன்ற ஆலோசனையின்படி ஒன்றிய அரசு அல்லது மாநில அரசு ஏற்று நடத்த வேண்டும் என்ற கோரிக்கை மனுவை தயாரித்து டெல்லி சென்று ஒன்றிய அரசிடம் கொடுக்க வேண்டும். உலகில் தங்கத்தின் தேவை அதிகரித்து வரும் சமயத்தில் மூடிய தங்கச்சுரங்கம் திறக்க வேண்டியது காலத்தின் கட்டாயம் என்பதை மத்திய அரசு புரிந்துகொள்ள வேண்டும். இவ்வாறு அவர் கூறினார். …

Related posts

மத்தியப்பிரதேசத்தில் நடந்த சாலை விபத்தில் 7 பேர் உயிரிழப்பு!!

உத்திரப்பிரதேசத்தில் உயர்அழுத்த மின் கம்பி அறுந்து 20 பேர் காயம்

உத்திரபிரதேச மாநிலம் மதுரா அருகே நிலக்கரி ஏற்றிச் சென்ற சரக்கு ரயில் தடம் புரண்டு விபத்து