ஆக்ரமிப்புகளை அகற்ற அக்.31ல் அளவீடு பழையாற்றை சீரமைக்க ₹350 கோடியில் திட்டம்

*அரசுக்கு கருத்துரு அனுப்பி வைப்பு

நாகர்கோவில் : நாகர்கோவில் வழியாக பாயும் பழையாற்றை சீரமைக்க ₹350 கோடியில் கருத்துரு அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது என்று நீர்வளத்துறை தெரிவித்துள்ளது.
மேற்கு தொடர்ச்சி மலையடிவாரத்தில் இருந்து வருகின்ற ஓடைகளில் இருந்து சேகரமாகும் தண்ணீர் பழையாறு ஆக உருவெடுத்து சுமார் 35 கி.மீ தூரம் பாய்ந்தோடி மணக்குடியில் கடலுடன் கலக்கிறது. இந்த ஆற்றின் வாயிலாக 16 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.

13 கிளை கால்வாய்கள் உள்ள இந்த ஆற்றின் வாயிலாக 97 குளங்கள் பாசன வசதி பெறுகிறது. குமரி மாவட்டத்தில் பருவமழை காலங்களில் இந்த ஆற்றில் தண்ணீர் கரைபுரண்டோடி ஆற்றில் கலப்பது வழக்கமாக இருந்து வருகிறது. நாகர்கோவில் மாநகர பகுதியில் உள்ள சாக்கடை கழிவுகள் அனைத்தும் இந்த கால்வாயில் கலக்கிறது. இதனால் பழையாறு சுசீந்திரம் பகுதிகளில் செல்லும்போது சாக்கடையாக மாறி விடுகிறது. கோடை காலங்களில் ஆற்றின் நிலைமை சுகாதாரக்கேடு நிறைந்து மேலும் மோசமடைந்துவிடும்.

பழையாற்றை பாதுகாக்க வேண்டும் என்பது பொதுமக்களின் நீண்டகால கோரிக்கையாக இருந்து வருகிறது. பழையாற்றில் பல பகுதிகளிலும் மண் திட்டுகள் நிறைந்து காணப்படுகிறது. பல பகுதிகளிலும் புதர்கள், செடிகொடிகள் நிறைந்து காணப்படுகிறது.ஆக்ரமிப்புகளும் பல பகுதிகளில் நிறைந்துள்ளதால் ஆறு சில இடங்களில் கால்வாய் போன்று சுருங்கியும் காணப்படுகிறது. பழையாற்றை சீரமைப்பது தொடர்பாக விவசாயிகள், பொதுமக்கள் தரப்பில் கோரிக்கைகள் இருந்து வரும் நிலையில் இது தொடர்பாக குமரி மாவட்ட நீர்வளத்துறை அதிகாரிகள் கூறியதாவது:

தோவாளை தாசில்தாரால் பழையாறு எல்லை நிர்ணயம் செய்யப்பட்டு நாகர்கோவில் ஆர்டிஒ செயல்முறை ஆணை மூலம் நீர் போக்கிற்கு இடையூறாக உள்ள மரங்களை வெட்டி அகற்றிட ஆணை பிறப்பிக்கப்பட்டிருந்து. அதனை தொடர்ந்து நீர்போக்கிற்கு இடையூறாக அமைந்துள்ள மரங்களுக்கு நீர்வளத்துறையின் அழிவறிக்கை ஒப்புதல் பெறப்பட்டு நீர்வளத்துறையின் மூலம் ஏலமிடப்பட்டு இருந்தது. ஆற்றின் கரையோர பகுதிகளில் ஏலம் இடப்படாத மரங்களுக்கு நீர்வளத்துறையின் மூலம் தனியாக நீலவர்ணம் போடப்பட்டுள்ளது. மேலும் ஏலமிடப்படாத மரங்கள் வெட்டாதவாறு துறை பணியாளர் மூலம் கண்காணிக்கப்பட்டு வருகிறது.

மேலும் காவல்துறை மூலம் கண்காணித்து நடவடிக்கை எடுக்க பூதப்பாண்டி, ஆரல்வாய்மொழி காவல்நிலைய இன்ஸ்பெக்டர்களுக்கு கடிதம் எழுதப்பட்டுள்ளது. மரங்களுக்கு எண்கள் இடுதல் தொடர்பாக வருவாய்துறை அலுவலர்களுடன் கூட்டு புலத்தணிக்கை மேற்கொள்வதற்கு ஏதுவாக உரிய வழிவகை செய்திட தோவாளை தாசில்தாருக்கு கடிதம் எழுதப்பட்டுள்ளது. எனவே கூட்டு புலத்தணிக்கை மேற்கொண்டு ஊர்ஜிதப்படுத்தப்படுத்தியதும் நடவடிக்கை எடுக்கப்படும்.

ஆற்றின் உட்பகுதியில் உள்ள மண் திட்டுகளை அகற்ற துறையின் பராமரிப்பு நிதியாதாரம் போதுமானதாக இல்லாத காரணத்தினால் சிறப்பு நிதி கிடைக்கும்பட்சத்தில் பணிகள் செயல்படுத்தப்படும். பழையாற்றை தூர்வாரி பாதிக்கப்பட்ட கரையை சரி செய்ய ₹350 கோடிக்கு கருத்துரு அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அரசிடம் இருந்து உரிய நிர்வாக அனுமதி பெற்றும், நிதி ஒதுக்கீடு கிடைக்கப்பெற்றதும் பணிகள் மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும்.

பழையாற்றின் ஆரம்ப பகுதிகளில் தெரிசனங்கோப்பு முதல் வீரநாராயணமங்கலம் வரையில் பழையாற்றில் தென்னை மரங்கள் நட்டு ஆக்ரமிப்பு செய்யப்பட்டுள்ளது. ஆக்ரமித்து நடப்பட்ட மரங்களை அகற்ற கோரியது தொடர்பாக மண்டல துணை தாசில்தார், குறுவட்ட வருவாய் ஆய்வாளர், குறுவட்ட நில அளவர் மற்றும் உதவியாளர் பொதுப்பணித்தறை பாசன பிரிவு ஆகியோர் முன்னிலையில் வரும் 31ம் தேதி அளவீடு செய்யப்படும்.

மேலும் தெரிசனங்கோப்பு முதல் வீரநாராயணமங்கலம் வரையிலும் பழையாற்றில் தென்னை மரம் நட்டு ஆக்ரமிப்பு செய்துள்ளதை எல்கை நிர்ணயம் செய்து தருமாறு தோவாளை தாசில்தாருக்கு கடிதம் எழுதப்பட்டுள்ளது என்று நாகர்கோவில் நீர்வளத்துறை உதவி செயற்பொறியாளர் தெரிவித்துள்ளார்.மேலும் தாசில்தாரால் எல்கை நிர்ணயம் செய்யப்பட்டு ஆக்ரமிப்பு குறித்த விபரங்கள் அடங்கிய படிவம் 1 மற்றும் வரைபடம் கிடைக்கப்பெற்றதும் ஆக்ரமிப்புகள் அகற்றப்படும். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

Related posts

ஹரியானா, காஷ்மீரில் காங்கிரஸ் ஆட்சியை பிடிக்கும் என தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பில் தகவல்

ஹரியானா மாநில சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நிறைவு

சாம்சங் தொழிலாளர்கள் போராட்ட விவகாரத்தில் விரைந்து தீர்வு காண வேண்டும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தல்