ஹோட்டல் மேனேஜ்மென்ட் கேட்டரிங் டெக்னாலஜி படிப்புக்கு தாழ்த்தப்பட்ட மாணவர்களிடம் விண்ணப்பங்கள் வரவேற்பு

திருவாரூர், ஏப். 21: திருவாரூர் மாவட்டத்தில் 10 மற்றும் 12ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற தாழ்த்தப்பட்ட மாணவர்கள் தாட்கோ திட்டத்தின் கீழ் சென்னையில் ஹோட்டல் மேனேஜ்மென்ட் கேட்டரிங் டெக்னாலஜி இன்ஸ்டிட்யூட்டில் சேர்ந்து படிப்பதற்கு விண்ணப்பிக்கலாம் என கலெக்டர் சாரு தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது,
தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் (தாட்கோ) மூலமாக 10ம் வகுப்பு மற்றும் 12ம் வகுப்பு முடித்த ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இனத்தைச் சார்ந்தவர்களுக்கு ஹோட்டல் மேனேஜ்மென்ட் கேட்டரிங் டெக்னாலஜி இன்ஸ்டிட்யூட்டில் பி.எஸ்.சி 3 வருட முழு நேர பட்டபடிப்பு மற்றும் பட்டயப்படிப்பு சேர்ந்து படித்திடவும் படிப்பு முடித்தவுடன் வேலைவாய்ப்பிற்கு வழிவகை செய்யப்படும்.

சென்னை தரமணியில் ஒன்றிய அரசின் சுற்றுலா துறையின் கீழ் இயங்கி வரும் நிறுவனத்தில் ஒன்றறை ஆண்டு முழுநேர உணவு தயாரிப்பு பட்டயப்படிப்பும், 10ம் வகுப்பு முடித்தவர்களுக்கு ஒன்றறை ஆண்டுகள் உணவு தயாரிப்பு மற்றும் பதனிடுதல் கைவினைஞர் படிப்பும் வழங்கப்படும். படிப்பு முடிந்தவுடன் நட்சத்திர விடுதிகள், விமானம் நிறுவனம், கப்பல் நிறுவனம், சேவை நிறுவனங்கள் மற்றும் உயர் தர உணவகங்கள் போன்ற இடங்களில் வேலைவாய்ப்பு பெற்று தரப்படும். இதற்கான தகுதிகள் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இனத்தை சார்ந்தவராக இருக்க வேண்டும்.

10ம் வகுப்பு மற்றும் 12ம் வகுப்பில் 45 சதவீதம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். குடும்ப வருமானம் ஆண்டிற்கு ரூ.3 லட்சத்திற்குள் இருக்கவேண்டும். 3 வருட முழு நேர பட்டபடிப்பு பயில ஒன்றிய அரசின் நுழைவு தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். இந்நுழைவுத் தேர்வுகக்கான பயிற்சி, தாட்கோ மூலம் சென்னையில் வழங்கப்படும் நிலையில் 2023-&24ம் ஆண்டிற்கு நடத்தப்படும் நுழைவு தேர்விற்கு விண்ணப்பிக்க கடைசிதேதி வரும் 27ந் தேதி ஆகும். இப்படிப்பிற்கான செலவீனம் தாட்கோவால் ஏற்கப்படும். ஆரம்ப கால மாத ஊதியமாக ரூ.25 ஆயிரம் முதல் ரூ.35 ஆயிரம் வரை பெறலாம்.

பின்னர் திறமைக்கேற்றவாறு ரூ.50 ஆயிரம் முதல் 70 ஆயிரம் வரை பதவி உயர்வின் அடிப்படையில் மாத ஊதியமாக பெறலாம். இத்திட்டத்தில் பதிவு செய்வதற்கு தாட்கோ இணையதளமான www.tahdco.com என்ற இணையதளத்தில் பதிவு செய்ய வேண்டும். மேலும் விவரங்களுக்கு திருவாரூர் பைபாஸ் சாலையில் இயங்கி வரும் தாட்கோ மாவட்ட மேலாளர் அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு கலெக்டர் சாரு தெரிவித்துள்ளார்.

Related posts

கர்நாடகாவில் கொலை குற்றவாளி கைது

மாடிக்கு கம்பியை எடுத்து சென்றபோது மின்சாரம் தாக்கி தொழிலாளி பலி

ஏற்காட்டில் குற்றச்சம்பவங்களை தடுக்க டிஎஸ்பி தலைமையில் போலீசார் வாகன தணிக்கை