ஹில்குரோவ் ரயில் நிலையத்தில் கேன்டீன் மீண்டும் திறப்பு

 

ஊட்டி, நவ.20: நீலகிரி மலை ரயில் சர்வதேச அளவில் பிரசித்தி பெற்றது. ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் கடந்த 1899ம் ஆண்டு ஜூன் மாதம் 15ம் தேதி மேட்டுபாளையம் – குன்னூர் இடைேய மலை ரயில் இயக்கப்பட்டது. அதன் பின் 9 ஆண்டுகள் கழித்து குன்னூரில் இருந்து ஊட்டி நகரம் வரை மலை ரயில் சேவை நீட்டிக்கப்பட்டது. மேட்டுப்பாளையம் முதல் ஊட்டி வரை 46 கி.மீ தூரத்திற்கு ரயில் இயக்கப்படுகிறது. மேட்டுபாளையத்தில் இருந்து ஊட்டி வரை மேல் நோக்கி பயணிக்க 4 மணி நேரம் 50 நிமிடங்களும், ஊட்டியில் இருந்து கீழ்நோக்கி பயணிக்க 3 மணி நேரம் 35 நிமிடங்களும் எடுத்து கொள்கின்றன.

யுனெஸ்கோவின் பாரம்பரிய அங்கீகாரம் பெற்ற இந்த மலை ரயிலில் பயணிக்க அனைத்து தரப்பு சுற்றுலா பயணிகளும் ஆர்வம் காட்டுகின்றனர். பல மாதங்களுக்கு முன்பே முன்பதிவு செய்து பயணித்து மகிழ்கின்றனர். இதனிடையே குன்னூர் – மேட்டுப்பாளையம் இடையே உள்ள ஹில்குரோவ் ரயில் நிலையத்தில் உள்ள கேன்டீன் கடந்த 4 ஆண்டுகளுக்கும் மேலாக மூடப்பட்டது. இதனால் ரயிலில் பயணிக்கும் பயணிகள் தின்பண்டம், டீ, காபி போன்றவற்றை வாங்க முடியாமல் சிரமடைந்து வருகின்றனர்.

எனவே இந்த கேன்டீனை மீண்டும் திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என நீலகிரி மலை ரயில் ரத அறக்கட்டளை வலியுறுத்தி வந்தது. இந்த சூழலில் சுற்றுலா பயணிகளின் கோரிக்கையை ஏற்று ஹில்குரோவ் ரயில் நிலையத்தில் மீண்டும் கேன்டீன் திறக்கப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து, நேற்று மலை ரயிலில் பயணித்த சுற்றுலா பயணிகள் திண்பண்டங்கள் வாங்கி மகிழ்ந்தனர்.

Related posts

கர்நாடகாவில் கொலை குற்றவாளி கைது

மாடிக்கு கம்பியை எடுத்து சென்றபோது மின்சாரம் தாக்கி தொழிலாளி பலி

ஏற்காட்டில் குற்றச்சம்பவங்களை தடுக்க டிஎஸ்பி தலைமையில் போலீசார் வாகன தணிக்கை