ஹரியானாவில் தனியார் நிறுவனங்களில் உள்ளூர் மக்களுக்கு 75% இட ஒதுக்கீடு: உயர்நீதிமன்ற இடைக்கால தடையை ரத்து செய்து உச்சநீதிமன்றம் உத்தரவு

டெல்லி: ஹரியானாவில் உள்ள தனியார் நிறுவனங்களில் உள்ளூர் மக்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கும் சட்டத்திற்கு பஞ்சாப், ஹரியானா உயர் நீதிமன்றங்கள் இடைக்கால தடை விதித்ததை உச்சநீதிமன்றம் ரத்துச் செய்துள்ளது. ஹரியானா மாநிலத்தில் உள்ள தனியார் நிறுவனங்களில் உள்ளூர் மக்களுக்கு 75 விழுக்காடு இட ஒதுக்கீடு வழங்கும் வகையில் அந்த மாநில அரசு சட்டம் இயற்றியது. அந்த சட்டத்திற்கு பஞ்சாப், ஹரியானா ஆகிய உயர் நீதிமன்றங்கள் இடைக்கால தடை விதித்தன. இந்த உத்தரவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, ஏற்ற காரணங்களின்றி உயர் நீதிமன்றம் இந்தச் சட்டத்தை தடை செய்ததை ஏற்கமுடியாது என உச்ச நீதிமன்றம் தெரிவித்தது. இது குறித்த வழக்கை பஞ்சாப், ஹரியானா ஆகிய மாநில உயர் நீதிமன்றங்கள் 4 வாரங்களுக்குள் மீண்டும் விசாரிக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. மேலும், உரிய உத்தரவு வரும் வரை தற்போது பணியாற்றும் ஊழியர்கள் தொடர்பாக ஹரியானா அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கக்கூடாது என உச்ச நீதிமன்றம் தெரிவித்தது.உள்ளூர் மக்களுக்கு 75% இட ஒதுக்கீடு வழங்கும் சட்டத்திற்கு பஞ்சாப், ஹரியானா உயர் நீதிமன்றங்கள் இடைக்கால தடை விதித்ததை உச்சநீதிமன்றம் ரத்துச் செய்துள்ளது. முன்னதாக, இச்சட்டம் குறித்து விளக்கம் தந்த ஹரியானா அரசு, ‘ஹரியானாவில் வணிகம், உற்பத்தி, சேவை சார்ந்த தனியார் நிறுவனங்கள், சங்கங்கள், அறக்கட்டளைகள், வரையறுக்கப்பட்ட பொறுப்பு கூட்டாண்மை நிறுவனங்கள், கூட்டாண்மை நிறுவனங்களுக்கும் 10 அல்லது அதற்கு மேற்பட்ட நபர்களை சம்பளம், ஊதியம் அல்லது பிற ஊதியத்தில் பணியமர்த்துபவர்களுக்கும் இந்த சட்டம் பொருந்தும்’ எனக் குறிப்பிட்டது. இந்த சட்டம் ஆயிரக்கணக்கான இளைஞர்களுக்கு வேலை வாய்ப்புக்கான புதிய வழிகளைத் திறக்கும் என ஹரியானா துணை முதல்வர் துஷ்யந்த் சௌதாலா தெரிவித்திருந்தார்.   …

Related posts

வயநாட்டை தொடர்ந்து அடுத்த மேகவெடிப்பு; இமாச்சலும் உருக்குலைந்தது: 5 பேர் பலி:50 பேர் மாயம்

இதுபோன்ற ஒரு பேரழிவை இந்திய ராணுவம் பார்த்ததில்லை: மேஜர் ஜெனரல் வினோத் மேத்யூ பேட்டி

புதையுண்ட கிராமங்களில் மீட்பு பணி தீவிரம்; வயநாட்டில் நிலச்சரிவு பலி 300ஐ தாண்டியது: 300க்கும் மேற்பட்டோரை இன்னமும் காணவில்லை