Monday, October 7, 2024
Home » ஸ்ருதியும் லயமும் பேசுகின்றன..!

ஸ்ருதியும் லயமும் பேசுகின்றன..!

by kannappan
Published: Last Updated on

நன்றி குங்குமம் தோழிஇசை சகோதரிகள்அஞ்ஜனிக்கு 22 வயது. தன் 9 வயதிலேயே மேடை ஏறி வீணை வாசித்துள்ளார். இவருக்கு சளைத்த வரல்ல இவரின் தங்கை அஸ்வினி. இவர் ஒரு படி மேலே. 7 வயதில் இருந்தே மிருதங்கம் வாசிக்க துவங்கியுள்ளார். 1500 கச்சேரிகளில் சேர்ந்தும், தனியாகவும் மேடையேறி உள்ளனர். 12 ஆம் வகுப் பில் சமஸ்கிருத பாடத்தில் மாநில அளவில் முதல் மதிப்பெண் பெற்ற இவர்கள், பள்ளியில் எப்போதுமே முதலிடம் தான். விருதுகளால் நிறைந்திருக்கும் இவர் களது வீட்டில், இன்னும் பல விருதுகளை வைக்க இடமில்லாமல், உள் அலமாரியில் பத்திரமாக பாதுகாத்து வைத்துள்ளனர் ஒருவரை தொடர்ந்து மற்றொருவர் பேசத் துவங்கினர்…இதே “சின்க்” தான் மேடையிலும் இருப்பதாக சொல்லி இருவரும் சேர்ந்து நகைத்தனர். “அம்மா பாட்டு டீச்சர். பயிற்சிக்கு வரும் குழந்தைகளுடன் நாங்களும் சேர்ந்து பாட்டு கத்துக்கிட்டோம். அம்மாவின் நண்பர், அவருக்கு வீணை ஒன்றை பரிசாக கொடுத்திருந்தார். ஆனா அம்மா அதை பயன்படுத்தாம பரன் மேல அப்படியே பத்திரமா வச்சிருந்தாங்க. அம்மாவிடம் பாட்டு பயிற்சி எடுக்க வந்தவர் வீணையை பார்த்திட்டு அதை எப்படி வாசிக்கணும்ன்னு சொல்லிக் கொடுத்தார். அது மட்டும் இல்லாமல் சில புள்ளிகள் வைத்து குறியீடுகள் குறித்து கொடுத்திருந்தார். பள்ளி முடிந்து மாலை வீடு திரும்பியதும் அம்மா, சில பேஸிக்ஸ் சொல்லித் தந்த போது ஆர்வம் கூடியது. பின் நானே ஒவ்வொரு பாடல்களின் ஸ்வரங்கள் கண்டறிந்து வீணையில் இசைக்கத் தொடங்கினேன். வீணை மேல் ஏற்பட்ட அதீத பிரியத்தால் வீட்டுக்கு வரும் விருந்தினருக்கும் வாசித்துக்காட்ட ஆரம்பிச்சேன். அப்படி ஒரு முறை ‘இசைமழை’ குழுவின் நிறுவனர் ராம்ஜி வீட்டுக்கு வந்திருந்தார். அவர் நான் வாசிப்பதை பார்த்துவிட்டு, நன்றாக வாசிக்கிறாய்… முறையாக வீணை பயிற்சி எடுன்ன சொன்னார். சொன்னது மட்டும் இல்லாமல் புகழ்பெற்ற இசைக்கலைஞர் திருமதி கமலா அஸ்வத்தாமாவிடம் என்னை அறிமுகம் செய்து வைத்தார். என் குருவை எனக்கு அறிமுகம் செய்து வைத்த பெருமை அவருடையது” என்ற அஞ்ஜனியை தொடர்ந்து, தங்கை அஸ்வினி பேசினார். “சிறு வயதில் கைக்கு கிடைக்கும் டப்பாக்களில் எல்லாம் இசை வாசிப்பது என் வழக்கம். அதை பார்த்து தான் எனக்குள் மிருதங்க ஆர்வம் இருப்பதை அம்மா கண்டுபிடித்தார். அந்த வயதில் அதன் பெயர் மிருதங்கம் என்று கூட எனக்கு தெரியாது. அம்மாவிடம், நடுவில் கருப்பு வட்டம் இருக்கும் வாத்தியத்தை வாங்கித்தரச் சொல்லி கேட்டிருக்கிறேன். அம்மாவும் நான் மிருதங்கத்தைதான் கேட்கிறேன் என்று புரிந்து கொண்டு வாங்கித் தந்தார். ஒரு நிகழ்ச்சியில், எம்.எஸ்.சுப்புலட்சுமி அம்மா வுக்கு, அறுபது ஆண்டுகளாக வாசித்த இசை நட்சத்திரம் டி.கே.மூர்த்தி, அவர்களை சந்திக்கும் வாய்ப்பு கிடைச்சது. என் ஆர்வம் பற்றி அவரிடம் அம்மா விளக்கியதும், ‘குழந்தையை அழைத்து வாருங்கள்’ என்று கூறினார். அவர் வீட்டிற்கு போனதும், என்னை பார்த்தவர் பெண் குழந்தைக்கு மிருதங்கம் வேண்டுமா? வேறெதாவது வாசிக்கலாமே எனக் கூறாமல், என்னை அவர் மாணவியாக ஏற்றுக்கொண்டார்.” சகோதரிகள் இருவரும் மாறி மாறி, மற்றவரின் புகழை பெருமையாக பேசத் தொடங்கினர். முதலில் பேசிய அஞ்ஜனி, “அஸ்வினி சின்ன வயசுலயே கமல் சார், ரஜினி சார் வீட்டுல வாசிச்சிருக்கா. நவராத்திரி கொண்டாட்டத்தில் இசையமைப்பாளர் இளையராஜா சார் வீட்டுலேயும் வாசிச்சிருக்கா. அங்கு யுவன் சாருடன், பலர் இவள் வாசிப்பதை பார்த்து இவளை ஆசீர்வதித்துள்ளனர்.” இருவரும் இசை நிகழ்ச்சிக்கு முன் கடுமையான பயிற்சி எதுவும் எடுப்பதில்லையாம். இதை விவரித்த அஸ்வினி, “அக்கா என்ன வாசிக்க போறானு அவ கண் அசைவிலேயே கண்டுபுடிச்சு அதற்கு ஏற்றவாரு வாசித்து விடுவேன். கல்யாண நிகழ்ச்சிகளில் வாசிக்கும் போது, சிலர் திடீரென ஒரு பாட்டு வாசிக்க சொல்லி கேட்பார்கள். அவர்களிடம் முடியாது அல்லது இது தெரியாதுன்னு சொல்ல முடியாது. அக்கா உடனே சரி என வாசிக்க ஆரம்பிப்பாள், அவளை தொடர்ந்து  நானும் வாசிப்பேன்” என்றார். வெளிநாடுகளுக்கு சென்று வாசித்த அனுபவங்கள் பற்றி கேட்ட போது, “கிடார், ட்ரம்ஸ், கீபோர்ட் போன்ற இசைக்கருவிகள் மட்டுமே பார்த்த வெளிநாட்டவருக்கு, வீணையும், மிருதங்கமும் விசித்திரமாகவும், புதிதாகவும் இருந்தது. அவர்கள் நிகழ்ச்சி முடிந்ததும் அருகில் வந்து, “இது என்ன? எப்படி வாசிப்பது? இதை கொஞ்சம் தொட்டு பார்க்கலாமா?” என்றெல்லாம் கேட்பார்கள். அயல் நாட்டவரிடம் நம் பாரம்பரிய இசை வாத்தியங்களின் சிறப்பை விளக்கும் போது, பெருமையாக இருக்கும்.” இவர்களது இந்த, 15 வருட அனுபவத்தில் அவர்களுக்கு கிடைத்த பாராட்டுகள் பற்றி கேட்ட போது, “பல முறை இசை நிகழ்ச்சி முடிந்ததும், பெரியவர்கள் சிலர் எங்கள் கால்களில் விழுந்து நமஸ்காரம் செய்திருக்கிறார்கள். அதை கண்டு திகைத்தோம். நாங்கள் அப்போது குழந்தைகள். அவர்களோ அறுபது வயதில் இருப்பவர்கள். பார்வையாளர்கள் பலர் இசை நிகழ்ச்சியின் போது, அப்படியே அழுதுவிடுவார்கள். சிலர் கையில் இருக்கும் ஐந்து ரூபாயோ, ஐந்தாயிரம் ரூபாயோ, எவ்வளவு இருக்கிறதோ அதை அப்படியே கொடுத்துவிடுவார்கள். இது போன்றவர்களின் ஆசீர்வாதமும், அன்பும்தான் எங்களை தொடர்ந்து முன் நகர்த்தி ஊக்குவிக்கிறது” என்றனர். பொதுவாக ஆண்கள் வாசிக்கும் மிருதங்கத்தை தேர்ந்தெடுத்ததற்கான காரணத்தை அஸ்வினியிடம் கேட்டபோது, “முதலில் எனக்கும் வீணை கற்றுத்தர முயற்சித்தார்கள். ஆனால், அதில் எனக்கு சுத்தமாக ஈடுபாடில்லை. எதில் இவளுக்கு ஆர்வம் இருக்கிறது என, அம்மா ஆராய்ந்த போது மிருதங்கத்தில் இருக்கும் ஆர்வம் தெரிந்தது. மிருதங்கம், தோல் வாத்தியம். மிகவும் கனமானது. அதை பராமரிப்பதிலும் சிரமம். இதனால்தான் பெண்கள் இந்த கருவியை பொதுவாக இசைப்பதில்லை. பல கச்சேரிகளில் நான் மிருதங்கம் இசைப்பதையும், ஒரே ஒரு பெண்ணாக மட்டும் அந்த குழுவில் இருப்பதையும் பலர் அதிசயத்துடன் பார்ப்பதுண்டு. மிருதங்கத்தை ஓங்கி அடித்து விடாது இசைக்க வேண்டும். உடலில் தெம்பு இல்லாதபோது, உடனே சோர்வாகி கைகளிலும் காப்பு கட்டி விடும். அனைத்து வாத்தியங்களிலும் ஏதாவது ஒரு சவால் இருக்கும். வீணையும் கூட அப்படித்தான். அதன் எடை அதிகம். நினைத்த இடத்திற்கு எல்லாம் எளிதில் எடுத்து செல்ல முடியாது. அஞ்ஜனிக்கும் அடிக்கடி விரல்களில் வெட்டு விழும். இசைக்கும் போது இந்த வலிகள் எதுவுமே எங்களுக்குத் தெரியாது. காயங்களுடன் வாசிப்போம். இசையில் மூழ்கி போனால் பசி, வலி என எதுவும் தெரியாது. இதுவும் ஒரு விதமான போதைதான்” என்கிறார். சகோதரிகள் சேர்ந்து வாசிப்பதில் இருக்கும் மகிழ்ச்சி பற்றி கேட்டதில், “சின்ன வயது முதலே சேர்ந்து வாசிப்பதால், எங்களுக்குள் அபாரமான ஒத்திசைவு இருக்கும். இது எங்களின் மிகப் பெரிய பலம். ஒருவரை ஒருவர் ஆழமாக புரிந்து வைத்துள்ளோம். மற்றவர் வாசிக்கும் இசைக்கருவியின் சிறப்பையும் சவால்களையும் நன்கு அறிவோம். இதெல்லாம் இல்லாமல், சகோதரிகள் சேர்ந்து விளையாடும் போது இருக்கும் சந்தோஷம் இன்னும் அதிகமாகவே இருக்கும். இசையின் அனைத்து பிரிவையும் கற்று இசைக்க வேண்டும். கர்நாடக இசை மட்டுமில்லாமல், திருமண நிகழ்ச்சிகளில் மெல்லிசைகளும் இசைப்போம். Instrumental Music இப்போது மிகவும் பிரபலமடைந்து வருகிறது. சினிமா பாடல்களை பாரம்பரிய இசைக்கருவிகளில் இசைக்கும் “Fusion Music” என்ற இசையையும் வாசிக்க முயற்சித்து வருகிறோம். இது மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றிருக்கிறது. பாடலாசிரியர் வைரமுத்துவின் மகன் கபிலன் சாரின் திருமணத்திற்கு இசை நிகழ்ச்சி நடத்தியுள்ளோம். மேலும் பல சினிமா பிரபலங்கள், அரசியல் தலைவர்கள் என பல்வேறு தரப்பினர் நிகழ்வுகளில் இசைத்துள்ளோம்” என்றனர். அடுத்ததாக, அஞ்ஜனி பிரான்ஸில் நடக்கும் ஒரு விழாவில் வாசிக்க இருக்கிறார். 2019 ஆம் ஆண்டில் தமிழக அரசு இளம் கலைஞர்களை ஊக்குவிக்க வழங்கும் கலை வளர் மணி விருது, வீணைக்காக அஞ்ஜனியும், மிருதங்கத்திற்காக அஸ்வினியும் பெறவிருக்கின்றனர். இசைச் சகோதரிகள் மேலும் பல விருதுகளையும் புகழையும் வாரி குவிக்க வாழ்த்துகள் கூறி விடைபெற்றோம்.– ஸ்வேதா கண்ணன் படங்கள் ஏ.டி.தமிழ்வாணன்

You may also like

Leave a Comment

2 × 5 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi