ஸ்ரீபெரும்புதூர் தாலுகா அலுவலகத்தில் அவலம் பராமரிக்காத கழிப்பறையால் கடும் துர்நாற்றம்: தொற்றுநோய் பீதியில் ஊழியர்கள், பொதுமக்கள்

ஸ்ரீபெரும்புதூர், மார்ச் 15: ஸ்ரீபெரும்புதூர் தாலுகா அலுவலகத்தில் உள்ள  கழிப்பறையை, முறையாக பராமரிக்காமல் இருப்பதால், அப்பகுதி முழுவதும் கடும் துர்நாற்றம் வீசுகிறது. இதனால், தொற்றுநோய் பரவும் அபாயம் உள்ளதாக, பொதுமக்களும், ஊழியர்களும் புலம்புகின்றனர். ஸ்ரீபெரும்புதூரில் தாலுகாவில் 100க்கும் மேற்பட்ட  கிராமங்கள் உள்ளன. ஸ்ரீபெரும்புதூர் தாலுகா அலுவலக வளாகத்தில் தாசில்தார், சர்வேயர், வட்ட வழங்கல் அலுவலகம், தேர்தல் பிரிவு, இ சேவை மையம், ஆதார் பிரிவு உள்பட பல்வேறு அலுவலகங்கள் இயங்குகின்றன. 1885ம் ஆண்டு முதல் இந்த அலுவலகம், பாழடைந்த கட்டிடத்தில் இயங்கியது. இதையடுத்து, கடந்த ஆண்டு பழைய கட்டிடத்தை இடித்து விட்டு, அதே இடத்தில் புதிய கட்டிடம் கட்டப்பட்டது.தற்போது தேர்தல்தேதி அறிவிக்கபட்டதால்.  இந்த அலுவலகத்தில் தேர்தல் பணியாளர்களுக்கான பயிற்சி மற்றும் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் அடிக்கடி நடக்கிறது. இங்கு, 50க்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணியாற்றுகின்றனர். இங்கு, ஸ்ரீபெரும்புதூர் தாலுகா அலுவலக நுழைவாயிலில் பொதுமக்கள் மற்றும் ஊழியர்கள் பயன்படுத்தும் வகையில் ஆண்கள், பெண்களுக்கு தனித்தனி கழிப்பறை உள்ளது. இந்த கழிவறை கடந்த பல மாதங்களாக முறையாக பராமரிக்கவில்லை. இதனால், அங்கு பாசிபடிந்து கடும் துர்நாற்றம் வீசுகிறது. இதனால், கழிப்பறைக்கு வருபவர்களுக்கு தொற்றுநோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.இந்நிலையில், ஸ்ரீபெரும்புதூர் தாலுகா அலுவலக வளாகத்தில். ஸ்ரீபெரும்புதூர் ஆர்டிஓ முத்துமாதவன் தலைமையில். தேர்தல் பணியாளர்களுக்கான பயிற்சி முகாம் நேற்று நடந்தது. இதில் அரசு ஊழியர்கள் 50க்கும் மேற்பட்டவர்கள் கலந்துகொண்டனர். அலுவலக நுழைவாயில் வந்த அவர்கள், அப்பகுதியில் கடும் துர்நாற்றம் வீசியதை தாங்க முடியாமல், மூக்கை பொத்தியபடி சென்றனர். இதற்கிடையில், பல்வேறு கோரிக்கைகளுக்காக வரும் பொதுமக்களுக்கும் இதே நிலை ஏற்படுகிறது. ஆனால், சம்பந்தப்பட்ட அதிகாரிகள், அதை பற்றி கவலைப்படாமல் உள்ளனர் என சமூக ஆர்வலர்கள் கூறுகின்றனர். எனவே, ஸ்ரீபெரும்புதூர் தாலுகா அலுவலகத்தில் உள்ள கழிப்பறையை தினமும் சுத்தம் செய்ய வேண்டும் என அரசு ஊழியர்களும், பொதுமக்களும் வலியுறுத்துகின்றனர்….

Related posts

சென்னை மெரினாவில் வான்சாகச நிகழ்ச்சி தொடங்கியது

வைகை நதியின் தாய் அணையான பேரணை நூற்றாண்டை கடந்தும் கம்பீர தோற்றம்: புனரமைத்து புராதன சின்னமாக அறிவிக்க கோரிக்கை

சுற்றுலா தலமாக்க பணிகள் நடந்து வரும் மதுரை வண்டியூர் கண்மாய்க்கு வந்த சோதனை; கழிவுநீர் கலப்பதாக புகார்