ஷவர்மா சாப்பிட்டதால் பள்ளி ஆசிரியை உயிரிழப்பா?

பூந்தமல்லி, செப். 19: மதுரவாயல் அடுத்த நூம்பல் பகுதியை சேர்ந்தவர் சுவேதா(22). இவர் அப்பகுதியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து வந்தார். இந்நிலையில், கடந்த 7ம் தேதி போரூரில் உள்ள கிறிஸ்தவ தேவாலயத்திற்கு அவரது சகோதரியுடன் சென்று விட்டு வீடு திரும்பினார். அப்போது போரூரில் உள்ள ஒரு கடையில் ஷவர்மா சாப்பிட்டு விட்டு வீட்டிற்கு வந்துள்ளார். பின்னர் வீட்டில் மீன் குழம்பும் சாப்பிட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து தொடர்ந்து வாந்தி, மயக்கம் ஏற்பட்டதால் போரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சுவேதா சிகிச்சை பெற்று வந்தார். பின்னர் மேல் சிகிச்சைக்காக இரு நாட்களுக்கு முன்பு அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.
இந்நிலையில் நேற்று காலை சுவேதா சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து மதுரவாயல் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு வந்த மதுரவாயல் போலீசார் இறந்து போன சுவேதா உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரித்து வருகின்றனர். இளம் பெண் சுவேதா ஷவர்மா சாப்பிட்டதால் உடல்நலம் பாதிக்கப்பட்டு இறந்து போனாரா அல்லது வேறு ஏதேனும் காரணமா என்பது குறித்து மதுரவாயல் போலீசார் விசாரித்து வருகின்றனர். மேலும் பிரேத பரிசோதனை அறிக்கை வந்த பிறகே உண்மையான காரணம் தெரிய வரும் என போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

மணல் கடத்திய டிராக்டர் டிப்பர் பறிமுதல்

உளுந்தூர்பேட்டையில் அக். 2ம் தேதி விசிக மது ஒழிப்பு மகளிர் மாநாடு ஆயத்தப் பணி

ஆசிரியரை பீர் பாட்டிலால் தாக்கி கொலை மிரட்டல்