Wednesday, July 3, 2024
Home » வைட்டமின் டேட்டா

வைட்டமின் டேட்டா

by kannappan
Published: Last Updated on

நன்றி குங்குமம் டாக்டர்உணவியல் நிபுணர் வண்டார்குழலி உணவு ரகசியங்கள்வைட்டமின் ஏ கொழுப்பில் கரையக்கூடிய வைட்டமின்களில் ஒன்றுதான் வைட்டமின் ‘ஏ’. வைட்டமின் ‘ஏ’ கண்டுபிடிப்பானது ஒரே முறையில் நிகழ்ந்தது அல்ல. அது ஒரு தொடர்ச்சியான ஆராய்ச்சியை உள்ளடக்கியது. இதனையொட்டி தொடரப்பட்ட ஆய்வுகளில், பாலில் இருக்கும் ஏதோ  ஒன்று மிக முக்கியப்பொருளாக செயல்படுவதாக 1880-ல் நிக்கோலாய் லுனின் என்பவரும், முட்டை மஞ்சள் கருவில் இருக்கும் கொழுப்பில் கரையக்கூடிய ஒரு பொருள் வளர்ச்சி ஊக்கியாக இருக்கிறது என்று கார்ல் சோசின் என்பவரும் கண்டறிந்து கூறினார்கள். அதனைத் தொடர்ந்து, வளர்ச்சிக்குத் துணைபுரியும் அந்த கொழுப்பில் கரையும் பொருள்தான் வைட்டமின் ‘ஏ’ என்று 1920 ஆம் ஆண்டு பெயரிடப்பட்டது. வகைப்பாடுவைட்டமின் ‘ஏ’ உயிர்ச் சத்தானது ரெடினால், ரெடினாயிக் அமிலம், ரெடினால்டிஹைடு மற்றும் கரோட்டின் என்ற நான்கு வகைகளில் கிடைக்கிறது. ரெடினால் வகைகள் விலங்கு இறைச்சியிலும், கரோட்டின் என்பது தாவர உணவுகளிலும் அடங்கியுள்ளன. கரோட்டினாய்டு என்பது, பீட்டா கரோட்டின், ஆல்பா கரோட்டின், பீட்டா கிரிப்டோஸான்த்தின் என்று மேலும் வகைப்படுத்தப்பட்டு உள்ளது.உணவில் பெறப்படும் பீட்டா கரோட்டினானது, மூன்றில் ஒரு பங்கு மட்டுமே உட்கிரகிக்கப்படுவதாக உலக சுகாதார நிறுவனத்தின் நிபுணர் குழு தெரிவித்துள்ளது. உணவின் வழியாக உடலுக்குள் செல்லும் வைட்டமின் ‘ஏ’ வின் உயிர்வேதியியல் நிகழ்வு அல்லது வளர்சிதை மாற்றம் என்பது எளிமையான ஒன்றல்ல. பலவிதமான புரதங்கள், நொதிகளை உள்ளடக்கிய சிக்கலான செயல்பாடு. இதன் காரணம், ஒரே ஒரு அமைப்பில் இல்லாமல், வேறுவேறு விதமான வடிவங்கள் அல்லது அமைப்புகளைக் கொண்டிருப்பதுதான். வைட்டமின் ‘ஏ’ வினை உடலால் தயாரித்துக்கொள்ள இயலாது என்பதால், உணவு வழியாகத்தான் எடுத்துக்கொள்ள வேண்டும். உடலியங்கியல் செயல்பாடுகள்செல்லின் பாதுகாப்பு அரணாக இருக்கும் செல்சவ்வு வழியாக ஊட்டங்கள் உள்ளேயும் வெளியேயும் சென்று வருவதற்குத் துணைபுரிகிறது வைட்டமின் ‘ஏ’.  உடலுக்கு நோய் எதிர்ப்புச் சக்தியைக் கொடுக்கிறது. கண்கள், நுரையீரல், குடல் மற்றும் இனப்பெருக்க உறுப்புகள் போன்றவற்றில் இருக்கும் சளிசவ்வுப் படலமும் (Mucous membrane) அதில் உற்பத்தியாகும் சளித்திரவமும் (Mucus) அந்த உறுப்புகளைக் கிருமித் தொற்றிலிருந்து பாதுகாக்கின்றன. இந்த கொழகொழப்பான மென்மையான படலம் உருவாவதற்கு ஆதாரமாக இருப்பது வைட்டமின் ‘ஏ’. ஆகவே, வைட்டமின் ‘ஏ’ குறைபாடு இருக்கும் நிலையில், ஒருவருக்கு மிக எளிதில் நோய்த்தொற்று ஏற்படுவது மட்டுமல்லாமல், நோய் வந்தபிறகு குணமாகும் காலமும் அதிகமாகிறது. முகத்தில், தோலுக்கு அடியில் இருக்கும் எண்ணெய்ச் சுரப்பிகள், இறந்த செல்கள் மற்றும் அளவுக்கு அதிகமான எண்ணெய்ச் சுரப்பினால் அடைபட்டு விடுகிறது. இதனால் ஏற்படும் சிறுசிறு பருக்கள் அல்லது கட்டிகளை அக்னி (Acne) என்கிறோம். வைட்டமின் ‘ஏ’ குறைபாடு இருக்கும் நிலையில், இந்த எண்ணெய்ச் சுரப்பிகளில் அதிகப்படியான கெரட்டின் (Keratin) என்ற புரதம் சுரந்து அடைப்பை ஏற்படுத்துகிறது என்று கண்டறிந்துள்ளனர். பெண்ணின் கர்ப்பகாலத்தில், கருவிலிருக்கும் குழந்தையின் எலும்பு மண்டலம், நரம்பு மண்டலம், இதயம், சிறுநீரகம், கண்கள், நுரையீரல் மற்றும் கணையம் போன்ற முக்கிய உறுப்புகளின் உருவாக்கத்திற்கும், வளர்ச்சிக்கும் வைட்டமின் ‘ஏ’ பெரிதும் உதவிபுரிகிறது. உடலிலுள்ள செல்கள் தமக்குத்தாமே எதிர்வினைபுரிந்து புற்றுநோய் செல்களாக மாறுவதைத் தடுக்கும் காரணிகள் ஆன்ட்டிஆக்ஸிடன்ட்ஸ் என்று கூறப்படுகின்றன.  அவ்வகையில் வைட்டமின் ‘ஏ’ ஒரு சிறந்த ஆன்ட்டிஆக்ஸிடன்ட் ஆக செயல்படுகிறது. வைட்டமின் ‘ஏ’ விற்கும் கண் பார்வைக்கும்  உள்ள தொடர்புகண் பார்வையை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவும் ஊட்டச்சத்து என்னவென்று கேட்டால், அனைவருக்கும் தெரிந்த பதில் வைட்டமின் ‘ஏ’ என்பதுதான். இவை இரண்டிற்கும் முக்கிய பிணைப்பு இருக்கிறது. உணவின் மூலம் உட்செல்லும் ரெடினோல், ரெடினாலாக மாற்றப்பட்டு, கண்ணின் விழித்திரைக்கு சென்று ஆப்சின் ((opsin)  என்னும் புரதத்துடன் சேர்ந்து ரொடாப்சின் (Rhodopsin) என்னும் ஊதா நிறப் பொருளை தயாரிக்கிறது. பார்வையின் ஊதாப்பொருளான ரொடாப்சின், விழித்திரையின் உருளை செல்களில் பதிந்துள்ளது. கண்ணில் ஒளிபிம்பம் ஏற்படும்போது, ரொடாப்சினானது மீண்டும் ரெடினாலாகவும் ஆப்சினாகவும் பிரிக்கப்படுகிறது. இது நரம்புத் தூண்டலின் மூலம் மூளைக்கு எடுத்துச் செல்லப்பட்டு பார்வை தெரிவிக்கப்படுகிறது. இந்த சுழற்சி தொடர்ச்சியாக ஏற்படுகிறது. இதற்கு நிரந்தரமாக ரொடாப்சின் தேவைப்படுகிறது. எனவே வைட்டமின் ‘ஏ’ உயிர்ச்சத்தானது ரெடினால் என்ற பொருளாக உணவின் மூலம் தொடர்ந்து கிடைக்கப்பெற்றால்தான் இந்த மாற்றம் ஏற்பட்டு, மங்கலான ஒளியிலும் பார்வை புலப்படுகிறது. எவ்வளவு தேவைஇந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகம் கொடுத்துள்ள பரிந்துரையின்படி, நடுத்தர வயது ஆணுக்கு ரெடினால் 600 மைக்ரோகிராம், பீட்டா கரோட்டின் 2400 மைக்ரோ கிராம் தேவைப்படுகிறது. கர்ப்பிணிப் பெண் மற்றும் பாலூட்டும் தாய்க்கு முறையே 600, 950 மைக்ரோ கிராம் ரெடினால் மற்றும் 2400, 3800 மைக்ரோ கிராம் பீட்டோ கரோட்டின் ஒருநாளைக்குத் தேவைப்படுகிறது. சிறு குழந்தைகளுக்கு ரெடினால் 350 மற்றும் பீட்டா கரோட்டின் 1400 மைக்ரோ கிராம் தேவை. பள்ளிக் குழந்தைகளுக்கும், வளரிளம் பருவத்தினருக்கும் 400, 600 மைக்ரோ கிராம் ரெடினால் மற்றும் 1600, 2400 மைக்ரோ கிராம் பீட்டா கரோட்டின் அவசியமாகிறது. வைட்டமின் ‘ஏ’ குறைபாடும் நோய்களும்வைட்டமின் ‘ஏ’ குறைபாட்டிற்கான நான்கு காரணங்களாகக் கூறப்படுபவை, (i) அம்மை, குடற்புழு, வயிற்றுப்போக்கு (ii) புற்று நோய், சில சிறுநீரக நோய்களில் அதிகப்படியான வைட்டமின் ‘ஏ’வெளியேறுதல் (iii) வைட்டமின் ‘ஏ’ நிறைந்த உணவுகள் என்னென்ன என்ற விழிப்புணர்வு இல்லாமை (iv) வைட்டமின் ‘ஏ’ உள்ள தாவர உணவுகளை அதிக நீரில் நீண்ட நேரம் கொதிக்க வைத்தல் வைட்டமின் அளவைக் குறைத்துவிடும்  என்பதை தெரிந்து கொள்ளாமல் இருப்பது. வைட்டமின் ‘ஏ’ குறைபாடு இருக்கும் நிலையில் தோல் நோய்களான அக்கி, சிரங்கு, படை, ஆரோக்கியமற்ற வறண்ட தோல் போன்றவை மிக எளிதாக ஏற்பட்டுவிடும். மேலும், மாலைக்கண் நோய் (Night blindness); பிட்டாட்ஸ் புள்ளி, கருவிழி வறட்சி, வெண்திரை வறட்சி, கெரடோமலேசியா (keratomalacia) என்னும் கருவிழி மென்மையாகி சிதைவு போன்றவை  வைட்டமின் ‘ஏ’ சத்து குறைபாட்டால் ஏற்படுகிறது. உலக சுகாதார நிறுவனத்தின் அறிக்கையின்படி, ஒவ்வொரு வருடமும், வைட்டமின் ‘ஏ’ குறைபாட்டினால் பாதிக்கப்பட்டு 2,50,000 முதல்  5,00,000 குழந்தைகள் வரையில் கண்பார்வை இழந்து வருவது மட்டுமல்லாமல், அதன் பிறகு ஒரு வருடத்திற்குள் இறந்துவிடுகிறார்கள் என்பது கவனிக்கத்தக்கது….

You may also like

Leave a Comment

12 + four =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi