வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு சென்னையில் பார்த்தசாரதி, பிரசன்ன வெங்கடேச பெருமாள் கோயில்களில் சொர்க்கவாசல் திறப்பு

சென்னை: வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு, இன்று அதிகாலை திருவல்லிக்கேணி பார்த்தசாரதி பெருமாள் கோயில், திருநீர்மலை ரங்கநாத பெருமாள் கோயில், தி.நகர் பிரசன்ன வெங்கடேச பெருமாள் கோயில்களில் சொர்க்கவாசல் திறக்கப்பட்டது. பக்தர்கள் கோவிந்தா கோவிந்தா என பக்தி பரவசத்துடன் முழக்கமிட்டனர். மார்கழி மாதம் வளர்பிறை ஏகாதசியை, வைகுண்ட ஏகாதசி உற்சவமாக வைணவர்கள் கொண்டாடி வருகின்றனர். அன்று திருமாலின் இருப்பிடமான வைகுண்டத்தின் கதவுகள் திறக்கப்படும் என்பது வைணவர்களின் நம்பிக்கையாகும். வைணவ ஸ்தலங்களில் பகல் பத்து, ராப்பத்து என்று சொல்லக்கூடிய பகல் பத்து முடிந்து ராப்பத்து தொடங்கும் நாளான வைகுண்ட ஏகாதசி அன்று சொர்க்கவாசல் திறக்கப்பட்டு அதன் வழியாக பக்தர்களுக்கு காட்சி கொடுப்பது வழக்கம். அதை தொடர்ந்து முக்கிய நிகழ்வான வைகுண்ட ஏகாதசியான இன்று அனைத்து வைணவ தலங்களிலும் பெருமாள் சொர்க்கவாசல் வழியாக வருவார். ஏகாதசி என்ற சொல்லுக்கு மந்நாராயணருக்குரிய பதினோராவது நாள் என்பது பொருள். இதை முப்பத்து முக்கோடி தேவர்களும் கடைபிடிப்பதால் முப்பத்து முக்கோடி ஏகாதசி என்றும் குறிப்பிடுவர். ஒரு ஆண்டில் 24 அல்லது 25 ஏகாதசிகள் வருகின்றன. இவற்றில் மூன்று மிகவும் சிறப்புமிக்கவை. ஆனி மாத சயன ஏகாதசி, கார்த்திகை மாத கைசிக ஏகாதசி, மார்கழி மாத வைகுண்ட ஏகாதசி. இந்த நாட்களில் பெருமாளை தரிசிப்பது சிறப்பு. இதிலும் வைகுண்ட ஏகாதசியே மிக விசேஷம். சாதாரண ஏகாதசி நாட்களில் விரதமிருக்க இயலாதவர்கள் கூட வைகுண்ட ஏகாதசியன்று விரதமிருப்பது அவசியம். அன்று அதிகாலையில் கோயில்களில் நடக்கும் சொர்க்கவாசல் வைபவத்தை தரிசிக்க வேண்டும். இதையொட்டி பெருமாள் கோயில்களில் சொர்க்கவாசல் திறக்கப்பட்டு சிறப்பு  வழிபாடுகள் நடைபெறுவது வழக்கம். அதன்படி, திருவல்லிக்கேணி பார்த்தசாரதி பெருமாள் கோயிலில்  ஆண்டுதோறும் வைகுண்ட ஏகாதசி உற்சவம் வெகு விமரிசையாக நடைபெறும். கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா பாதிப்பு காரணமாக எந்த ஒரு  நிகழ்ச்சிகளும் நடைபெறாமல் இருந்தது, தற்பொழுது அனுமதிக்கப்பட்ட நிலையில்  ஏராளமானோர் கலந்து கொண்டனர். திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயிலில் இன்று அதிகாலை 4.30 மணிக்கு சொர்க்கவாசல் திறக்கப்பட்டது.  சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளிய பெருமாளை, ஆயிரக்கணக்கான பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று தரிசனம் செய்தனர். அதன் பிறகு அதிகாலை 5.30 மணி முதல் இரவு 10.30 மணி வரை கட்டண தரிசனம் மற்றும் பொது தரிசனம் நடைபெறும் என கோயில் நிர்வாகம் தெரிவித்தது.சொர்க்கவாசல் விழாவை முன்னிட்டு 500க்கும் மேற்பட்ட போலீசார் கோயில் உள்ளேயும் வெளியேயும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். பக்தர்களுக்கு ஏற்ப சிறப்பு பாதைகள் குடிநீர் வசதிகள் செய்யப்பட்டிருந்தது. பக்தர்களின் பாதுகாப்பிற்காக தீயணைப்பு வாகனம், அவசர ஊர்தி போன்றவை கோயிலுக்கு வெளியே நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. இதேபோன்று, தி.நகர் பிரசன்ன வெங்கடேச பெருமாள் கோயிலில் அதிகாலை 5.30 மணிக்கு சொர்க்கவாசல் திறக்கப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர். இதற்கான ஏற்பாடுகளை கோயில் நிர்வாகம் செய்திருந்தது. பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருந்ததால் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர். இதேபோன்று, வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு, 108 திவ்யதேசங்களில் ஒன்றான திருநீர்மலை ரங்கநாத பெருமாள் கோயிலில் இன்று அதிகாலை சொர்க்க வாசல் திறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. கோவிந்தா கோஷங்களுடன் ஆயிரக்கணக்கான பக்தர்கள் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர். இக்கோயிலில் நின்றான், இருந்தான், கிடந்தான், நடந்தான் என்ற 4 திருக்கோலங்களில் ரங்கநாதப் பெருமாள், சாந்த நரசிம்மர், நீர்வண்ணப் பெருமாள், விக்ரமர் ஆகிய 4 நிலைகளில் காட்சி தருகிறார் என்பது கூடுதல் சிறப்பு. இது, திருமங்கையாழ்வாரால் பாடல்பெற்ற திருத்தலமாகும். இதேபோன்று தமிழகம் முழுவதும் உள்ள 108 வைணவ தலங்கள் மற்றும் பிரசித்தி பெற்ற பெருமாள்  கோயில்களில் சொர்க்கவாசல் திறப்பு விமரிசையாக நடைபெற்றது….

Related posts

மாநில கல்லூரியில் ரூ.21 கோடி மதிப்பீட்டில் மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு லிப்ட் வசதியுடன் பிரத்யேக விடுதி: விரைவில் பயன்பாட்டிற்கு வருகிறது

சென்னையில் வடகிழக்கு பருவ மழையின்போது மீட்பு பணிகளில் ஈடுபட 10,000 பேருக்கு பயிற்சி: பேரிடர் மேலாண்மை துறை திட்டம்

தூய்மை பணியாளர்களுக்கு சிறப்பு மருத்துவ முகாம்: இ.கருணாநிதி எம்எல்ஏ தொடங்கி வைத்தார்