வேலை செய்த நிறுவனத்தில் ரூ.47.80 லட்சம் மோசடி கணவன், மனைவி கைது: ஆன்லைன் சூதாட்டத்தில் இழந்ததாக வாக்குமூலம்

சென்னை: வேலை செய்த நிறுவனத்தில் ரூ.47.80 லட்சம் மோசடி செய்த கணவன், மனைவியை போலீசார் கைது செய்தனர். புதுவண்ணாரப்பேட்டை திருவொற்றியூர் நெடுஞ்சாலையில் உள்ள தனியார் நிறுவனத்தின் மேலாளர் ராஜகணேஷ் (36), புதுவண்ணாரப்பேட்டை காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்தார். அதில், எங்களது நிறுவனத்தில் பணிபுரிந்து வந்த தீபன்ராஜ் (32) என்பவர்  ரூ.47.80 லட்சத்தை மோசடி செய்துவிட்டு தப்பி சென்று விட்டார். அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், என தெரிவித்து இருந்தார். போலீசார் விசாரணையில், அதே நிறுவனத்தில் பல வருடங்களாக வேலை பார்த்து வந்த திரவிய சுந்தரம் (61) என்பவரின் மகன்தான் தீபன்ராஜ் என்பதும்,  திரவியசுந்தரமும், தீபன்ராஜும் சென்னையை அடுத்த வேப்பம்பட்டு பகுதியில் தனித்தனியாக வசித்து வந்ததும், தந்தையின் சிபாரிசு மூலம் தீபன்ராஜ் கடந்த 2014ம் ஆண்டு இந்த நிறுவனத்தில் வேலைக்கு சேர்ந்ததும், பின்னர் அங்கு கணக்காளராக பணியாற்றி வந்த யுவராணி (32) என்பவரை காதலித்து கடந்த 2015ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டதும், திருமணம் செய்துகொண்ட பிறகு வேப்பம்பட்டு பகுதியில் கடந்த 2017ம் ஆண்டு வங்கி மூலம் ரூ.26 லட்சம் லோன் வாங்கி தனியாக வீடு கட்டி வசித்து வந்ததும் தெரியவந்தது. இதையடுத்து, தீபன்ராஜ் அவருடைய மனைவி மற்றும் தந்தை ஆகியோரை போலீசார் தேடி வந்தனர். இந்நிலையில், தீபன்ராஜ் முழு ஊரடங்கை பயன்படுத்தி வெளியூருக்கு தப்பிச்செல்ல இருப்பதாக தனிப்படை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. உடனடியாக தனிப்படை போலீசார் ஊரடங்கு நாளான நேற்று வட சென்னையின் அனைத்து பகுதிகளிலும் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது பாரிமுனை சென்னை கடற்கரை ரயில்நிலையம் உள்ள ராஜாஜி சாலையில் சென்ற வாகனத்தை போலீசார் மடக்கி சோதனை செய்தனர். அப்போது  அதில் தீபன்ராஜ் அவரது குடும்பத்துடன் இருந்தது தெரியவந்தது. உடனடியாக அவர்களை காவல் நிலையம் அழைத்து வந்து போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.அதில், தீபன்ராஜ் தான் வேலை பார்த்த நிறுவனத்தில் ரூ.47.80 லட்சத்தை கையாடல் செய்ததை ஒப்புக்கொண்டார். அதே நிறுவனத்தில் கணக்காளராக வேலை பார்த்து வந்த அவரது மனைவி யுவராணி, மோசடிக்கு உதவியாக இருந்ததை ஒப்புக்கொண்டார். மேலும் விசாரணையில், கையாடல் செய்த பணத்தை ஆன்லைன் விளையாட்டில் இழந்து விட்டதாகவும் தெரிவித்துள்ளனர். பணம் கையாடல் செய்தது குறித்து நிறுவனத்தினர் காவல் நிலையத்தில் புகார் அளித்ததை அறிந்த தீபன்ராஜ், தனது சொந்த ஊரான விருதுநகர் மாவட்டம் திருச்சுழி பகுதிக்கு தப்பிச் சென்றதும், முழு ஊரடங்கை பயன்படுத்தி, தீபன்ராஜ் சென்னை வந்து, தனது குடும்பத்தார் அனைவரையும் விருதுநகர் அழைத்துச் செல்ல திட்டமிட்டு, அவ்வாறு தப்பி சென்றபோது, பாரிமுனையில் போலீசிடம் சிக்கியதும் தெரியவந்தது. இதையடுத்து, தீபன்ராஜ் மற்றும் அவரது மனைவியை கைது செய்து,  புழல் சிறையில்  அடைத்தனர். தீபன்ராஜ் மோசடிக்கு உதவிய அவருடைய தந்தை  திரவியசுந்தரம், சகோதரி ஹேமதிவ்யா ஆகியோரிடம் போலீசார் தொடர்ந்து விசாரிக்கின்றனர்….

Related posts

மீஞ்சூர் அருகே தோட்டக்காடு பகுதியில் முன்பகை காரணமாக ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேருக்கு அரிவாள் வெட்டு

சுரண்டையில் கிரைண்டர் செயலி மூலம் வாலிபரை மிரட்டி பணம் பறித்த 9பேர் கைது

திருச்சி அருகே பயங்கரம் இரும்பு கம்பியால் அடித்து பாட்டி கொலை