(வேலூர்) மதுபாட்டில்களை கடத்தி சென்ற வாலிபர் கைது 45 பாட்டில்கள் பறிமுதல் பள்ளிகொண்டா அருகே கள்ளச்சந்தையில் விற்க

 

பள்ளிகொண்டா, செப்.2: பள்ளிகொண்டா அருகே கள்ளச்சந்தையில் விற்க மதுபாட்டில்களை கடத்தி சென்ற வாலிபரை போலீசார் கைது செய்து 45 பாட்டில்களை பறிமுதல் செய்தனர். பள்ளிகொண்டா அடுத்த பள்ளிகுப்பம்-ஒடுகத்தூர் சாலையில் இன்ஸ்பெக்டர் சுப்பிரமணி உத்தரவின் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் சின்னப்பன், தலைமைக்காவலர்கள் பிரகாசம், தனஞ்செழியன் ஆகியோர் நேற்று வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அகரம்சேரியிலிருந்து ஒடுகத்தூர் நோக்கி வந்த இருசக்கர வாகனத்தை நிறுத்தி சோதனை செய்தபோது, பிளாஸ்டிக் பையில் சுமார் 45 குவார்ட்டர் பாட்டில்கள் இருந்தது தெரியவந்தது.

இதையடுத்து பைக்கில் வந்தவரிடம் விசாரணை மேற்கொண்டதில் அவர் ஒடுகத்தூர் அடுத்த தோளப்பள்ளி கிராமம் கெங்கையம்மன் கோயில் தெருவை சேர்ந்த மணிகண்டன்(37) என்பதும், காலை, இரவு நேரத்தில் அரசு மதுபானத்தை பதுக்கி வைத்து கூடுதல் விலைக்கு விற்று வந்ததும் தெரியவந்தது. இதனை தொடர்ந்து 45 பாட்டில்களை பறிமுதல் செய்த போலீசார் மணிகண்டனை காவல் நிலையம் அழைத்து சென்றனர். தகவலறிந்து வந்த வேலூர் டிஎஸ்பி பிருத்விராஜ் சவுகான் மணிகண்டனை கைது செய்ய போலீசாருக்கு உத்தரவிட்டார். அதன்படி, மணிகண்டன் மீது வழக்கு பதிந்த போலீசார் அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும், பள்ளிகொண்டா சுற்றுவட்டார பகுதிகளில் இதுபோன்ற மதுபானத்தை கள்ளச்சந்தையில் விற்பவர்களை கண்டறிந்து அவர்களை கைது செய்து நடவடிக்கை எடுக்க டிஎஸ்பி போலீசாருக்கு உத்திரவிட்டார்.

Related posts

பதுக்கிய பட்டாசுகள் பறிமுதல்

மது அருந்த பணம் தராததால் தற்கொலை

கல்லூரி விடுதியில் மாணவி மாயம்