வேலூரில் 25.8 மி.மீ மழை பதிவு கன மழையால் காவலர் குடியிருப்புக்குள் புகுந்த வெள்ளம்-காவல்நிலையத்தையும் சூழ்ந்தது

வேலூர் : வேலூரில் நேற்று மாலை பெய்த பலத்த மழையால் காவலர் குடியிருப்புக்குள் மழைநீர் புகுந்தது. தெற்கு காவல்நிலையத்தையும் வெள்ளம் சூழ்ந்தது.தமிழகத்தில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி மற்றும் தென்மேற்கு பருவமழை காரணமாக பல்வேறு மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய பலத்த மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்தது. அதன்படி வேலூர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. நேற்று முன்தினம் மாவட்டத்தில் பரவலாக மழை பெய்தது. இந்நிலையில், நேற்றும் பகல் 2 மணியளவில் வேலூர் மாவட்டத்தில் வேலூர், பாகாயம், குடியாத்தம் உள்ளிட்ட பல பகுதிகளில்  திடீரென பலத்த மழை கொட்டியது. இதனால் இதனால் தாழ்வான பகுதிகளில் மழைநீர் சூழ்ந்தது. சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. ஸ்மார்ட் சிட்டி திட்ட பணிகளுக்கு பல்வேறு இடங்களில் பள்ளங்கள் தோண்டியதால் சேறும், சகதியாக உள்ளது. வேலூரில் பெய்த பலத்த மழையால் வேலூர் வடக்கு காவல் நிலையம் அருகே காவலர் குடியிருப்புக்குள் மழை வெள்ளம் புகுந்தது. இதனால் அங்கிருந்தவர்கள் மிகவும் அவதிப்பட்டனர். அதேபோல், வேலூர் அண்ணா சாலையில் தெற்கு காவல் நிலையம் முன்பு, வேலூர்- ஆரணி சாலையில் மழை நீர் குட்டை போல் தேங்கி காவல்நிலையத்தை சூழ்ந்தது. இதனால் அந்த சாலையில் வாகன ஓட்டிகள் ஊர்ந்தபடி சென்றனர். வேலூர் மேயர் சுஜாதா, கமிஷனர் அசோக்குமார் ஆகியோர் உத்தரவின் பேரில் வேலூர் சம்பத் நகர், வேலூர் அம்பேத்கர் நகரில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் தேங்கியிருந்த மழைநீரை நகர்நல அலுவலர் முருகன் தலைமையிலான மாநகராட்சி ஊழியர்கள் மழைநீரை அகற்றும் பணியில் ஈடுபட்டனர். நேற்று முன்தினம் மாவட்டத்தில் அதிகபட்சமாக வேலூரில் 25.8 மி.மீ மழை பதிவாகி உள்ளது. மற்ற இடங்களில் பெய்த மழை நிலவரம்: குடியாத்தம்-14.8 மி.மீ, காட்பாடி-7.2, மேல் ஆலத்தூர்-2.2, வேலூர் சர்க்கரை ஆலை-7.8 மி.மீ. மழை பதிவாகியுள்ளது. மொத்தம் 96.30 மி.மீ, சராசரியாக 16.06 மி.மீ ஆகும். வேலூர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருதால் நீர்நிலைகளுக்கு நீர்வரத்து அதிகரிக்க தொடங்கி உள்ளது. பாலாற்றிலும் நீர்வரத்தும் அதிகரித்துள்ளது. இந்த தொடர் மழையால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். …

Related posts

செட்டிகுளம் முருகன் கோயிலில் புரட்டாசி கிருத்திகை விழா கோலாகலம்: வெள்ளி தேர் இழுத்து பக்தர்கள் தரிசனம்

சென்னை கிண்டியில் 118 ஏக்கர் பரப்பளவில் தோட்டக்கலை மிகச் சிறந்த பூங்கா, பசுமைவெளி உருவாக்கப்படும்: தமிழ்நாடு அரசு அரசாணை

சிவகங்கை இளையான்குடியில் நேற்று விஷவாயு தாக்கி 2 பேர் உயிரிழந்ததற்கு நிவாரணம் கோரி உறவினர்கள் மறியல்