வேலூரில் மக்கள் குறைதீர்வு கூட்டம் அரசு வேலை வாங்கி தருவதாக கூறி பணம் மோசடி செய்த அதிமுக பிரமுகர்-நடவடிக்கை எடுக்ககோரி கலெக்டரிடம் புகார் மனு

வேலூர் :வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்வு கூட்டம் நேற்று நடந்தது. கலெக்டர் குமாரவேல்பாண்டியன் தலைமை தாங்கினார். டிஆர்ஓ ராமமூர்த்தி, திட்ட இயக்குனர் ஆர்த்தி மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டு மனுக்களை பெற்றனர்.இதில் பாலமதி பிள்ளையார் கோயில் தெருவைச் சேர்ந்த காசியம்மாள்(67) என்பவர் அளித்த மனுவில், எனது கணவர் பெயர் சுப்பிரமணி, எங்களுக்கு 4 குழந்தைகள். குடும்ப தகராறில் எனது கணவர் சில ஆண்டுகளுக்கு முன் வீட்டை விட்டு வெளியே சென்றுவிட்டார். எனது மகன்களில் ஒருவரான பழனி, என்னை வீட்டை விட்டு வெளியேற்றிவிட்டார். இதனால் நான் தங்க இடமின்றி, உணவுக்கு வழியின்றி கஷ்டப்படுகிறேன். எனது வீட்டை மீட்டுத்தர வேண்டும் என தெரிவித்தார். அணைக்கட்டு அடுத்த புத்தூர் கிராமத்தை சேர்ந்த அர்ஜூனன் என்பவர், வாட்டர் கேனில் டீசல் எடுத்து வந்தார். கலெக்டர் அலுவலக நுழைவாயிலில் சோதனையிட்ட போலீசார் டீசலை பறிமுதல் செய்து கலெக்டரிடம் அழைத்து சென்றனர்.அப்போது அர்ஜூனன், கடந்த 10 ஆண்டுகளாக வீட்டுமனை பட்டா கேட்டு மனு அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால் தற்கொலை செய்து கொள்ள டீசல் ேகனுடன் வந்ததாக கலெக்டரிடம் கூறினார். அவரை எச்சரித்த கலெக்டர், அர்ஜூனனை சத்துவாச்சாரி போலீசில் ஒப்படைத்தார். கணியம்பாடியை சேர்ந்த மகளிர் சுய உதவிக்குழுவினர் அளித்த மனுவில், தமிழ்நாடு மாநில ஊரக மற்றும் நகர்ப்புற வாழ்வாதாரம், மகளிர் திட்டத்தில் கீழ்அரசம்பட்டு கிராமத்தில் 2 மாற்றுத்திறனாளிகள் சிறப்பு குழுவும், 2 முதியோர் சிறப்பு குழு அமைத்து அங்குள்ள தேசிய மயமாக்கப்பட்ட வங்கியில் கணக்கு தொடங்க விவரங்கள் அளித்து 2 மாதமாகிறது. இதுவரை கணக்கு தொடங்கவில்லை. இதற்கிடையில் மகளிர் திட்ட அலுவலகத்தில் இருந்து எங்களிடம் வங்கி கணக்கு விவரங்களை கேட்கின்றனர். வங்கி நிர்வாகம் கணக்கு தொடங்காததால் நாங்கள் நிதி பெறுவதில் சிக்கல் ஏற்படுகிறது. உடனே வங்கி கணக்கை தொடங்கி விவரங்களை தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர். பொன்னையை சேர்ந்த ஏகாம்பரம் என்ற முதியவர் மனுவுடன் கலெக்டர் அலுவலகத்திற்கு வந்து திடீரென தர்ணாவில் ஈடுபட்டார். அப்போது அங்கு வந்த கலெக்டர் விசாரணை நடத்தினார். அப்போது ஏகாம்பரம் கூறுகையில், ‘எனது வீட்டின் சுவரை பக்கத்து வீட்டடில் வசிக்கும் எனது உறவினர்களே இடித்து தள்ளிவிட்டனர். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கும்படி பலமுறை போலீசார் மற்றும் பல்வேறு துறை அதிகாரிகளிடம் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே நடவடிக்கை எடுக்க வேண்டும்’ எனக்கூறினார். இதையடுத்து ஏகாம்பரம் அளித்த புகாரின் மீது உடனே நடவடிக்கை எடுக்க போலீசாருக்கு கலெக்டர் உத்தரவிட்டார்.திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூர் அடுத்த சின்னப்பள்ளிக்குப்பம் கிராமத்தை சேர்ந்தவர் அளித்த மனுவில், ‘முன்னாள் அதிமுக அமைச்சர் கே.சி.வீரமணியின் உதவியாளர் என வேலூர் காகிதபட்டறையை சேர்ந்த சுகுமார் அரசு வேலை வாங்கி வருவதாக ₹1.50 லட்சம் முதல் ₹3 லட்சம் வாங்கி கொண்டு இதுவரை வேலை வாங்கி தரவில்லை. பணத்தை திருப்பி கேட்டால் எந்தவித பதிலுமில்லை. சுகுமார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றனர். தொடர்ந்து ஏராளமானோர் பல்வேறு குறைகள் குறித்து மனு அளித்தனர். முன்னாள் எம்எல்ஏ லதா ஐஎப்எஸ் நிதி நிறுவனம் முறைகேடு தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் என மனு அளித்தார்.புள்ளிங்கோ ஹேர் கட்டிங் வேண்டாம்வேலூர் மக்கள் குறைதீர்வு கூட்டத்தில் நேற்று 2 மகன்களுடன் பெண் ஒருவர் மனு அளிக்க வந்தார். கணவர் இறந்து விட்டதால் குடும்பம் நடத்த வழியில்லை. வேலை வந்த உதவும்படி மனு அளித்தார். மனுவை பெற்றுக்கொண்ட கலெக்டர் குமாரவேல்பாண்டியன், பெண்ணுடன் வந்திருந்த மகன்கள் இருவரும் புள்ளிங்கோ ஹேர் கட்டிங் செய்திருந்தனர். இதை பார்த்த கலெக்டர் நல்ல முறையில் ேஹர் கட்டிங் செய்து கொண்டால் தான் நல்ல பழக்க வழக்கங்கள் வரும் முதலில் இதுபோன்ற ஹேர்கட்டிங் செய்வதை நிறுத்த வேண்டும் என அறிவுரை வழங்கினார்.கருணை அடிப்படையில் 3 பேருக்கு பணி நியமனம்வேலூர் மக்கள் குறைதீர்வு கூட்டத்தில் சத்துணவு திட்டத்தின் கீழ் கருணை அடிப்படையில் 3 பேருக்கு வேலை வாய்ப்பு ஆணைகளையும், மாற்றுத்திறனாளி குழந்தைகள் 5 பேருக்கு ₹5 லட்சம் மதிப்பிலான மருத்துவ காப்பீடு அட்டைகளையும் கலெக்டர் குமாரவேல்பாண்டியன் வழங்கினார்….

Related posts

போலி இ-மெயில் அனுப்பி பணம் பறிக்கும் மோசடி கும்பல்; எச்சரிக்கையாக இருக்க சைபர் போலீஸ் அறிவுறுத்தல்

அரசு உதவிபெறும் பள்ளி இசை ஆசிரியர் பெற்ற கூடுதல் ஊதியத்தை திரும்ப வசூலிக்கும் உத்தரவு செல்லும்: சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு

பரந்தாமன் எம்எல்ஏ உருவாக்கியுள்ள “நம்ம எக்மோர்” செயலி: துணை முதல்வர் தொடங்கி வைத்தார்