வேலாயுதம்பாளையம் பகுதியில் மக்களுக்கு இலவச பட்டா வழங்க அதிகாரிகள் நேரில் ஆய்வு

வேலாயுதம்பாளையம், ஏப். 19: கரூர் மாவட்டம் புன்செய் புகளூர் மற்றும் நஞ்சை புகளூர் கிராமங்களில் 50 ஆண்டு காலமாக பட்டா இல்லாமல் வசித்து வரும் பொதுமக்களுக்கு நத்தம் நிலவரித் திட்டத்தின் கீழ் வீட்டு மனை பட்டா 1705 குடும்பங்களுக்கு வழங்கப்படும் என்று வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் கே.கே.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் சட்டப்பேரவையில் அறிவித்தார். அதன் அடிப்படையில் புகழூர் நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகள் மற்றும் நன்செய் புகளூர் ஊராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் பட்டா இல்லாமல் வசித்து வரும் பொதுமக்களுக்கு நத்தம் நில வரி திட்டத்தின் கீழ் இலவச வீட்டுமனை பட்டா வழங்குவது தொடர்பாக கள ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

கரூர் மாவட்ட வருவாய் அலுவலர் கண்ணன் தலைமையில், கரூர் வருவாய் கோட்டாட்சியர் ரூபினா, புகழூர் வட்டாட்சியர் முருகன், புகழூர் நகர்மன்ற தலைவர் ஏ.குணசேகரன், மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் கொண்ட குழுவினர் புகழூர் நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் பட்டா இல்லாமல் வசித்து வரும் மக்களுக்கு நத்தம் நில வரி திட்டத்தின் கீழ் இலவச வீட்டுமனை பட்டா வழங்கல் தொடர்பாக நேரில் ஆய்வு மேற்கொண்டு பட்டா இல்லாத பொது மக்களிடம் விசாரணை நடத்தி பட்டா இல்லாத வீடுகளை சேர்ந்தவர்கள் குறித்து விவரம் சேகரித்தனர்.

இந்நிகழ்வில், நகர்மன்ற உறுப்பினர்கள், வருவாய் துறை அலுவலர்கள் மற்றும் நகராட்சி அலுவலர்கள், பொதுமக்கள் ஆகியோர் உடன் இருந்தனர். இதனால் 50 ஆண்டுகளாக பட்டா இல்லாமல் வசித்து வரும் பொது மக்களுக்கு விரைவில் பட்டா கிடைக்கும் இந்த நம்பிக்கையில் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Related posts

வெளிநாட்டில் வேலை வள்ளியூர் பிரமுகரிடம் ரூ.10 லட்சம் மோசடி: கேரள முதியவர் கைது

சுரண்டை அரசு கல்லூரியில் சேர விண்ணப்பிக்க இன்று கடைசி நாள்

ஒன்றிய தொழிலாளர் அமைச்சகம் மூலம் பீடித் தொழிலாளர்கள் குழந்தைகளுக்கு கல்வி உதவித் தொகை ஆணையர் தகவல்