வேதிப் பொருள்கள் வெடிக்க வாய்ப்புள்ளதாக எச்சரிக்கப்பட்ட நிலையில் செர்னோபில் அணுசக்தி நிலையத்தில் கதிரியக்க கசிவு?.. உக்ரைனிடம் மீண்டும் ஒப்படைத்துவிட்டு ரஷ்யப் படைகள் ஓட்டம்

கீவ்: செர்னோபில் அணு உலையில் உள்ள வேதிப் பொருள்கள் வெடிக்க வாய்ப்பு இருப்பதாக எச்சரிக்கப்பட்டது. அதையடுத்து தங்களது கட்டுக்குள் வைத்திருந்த செர்னோபில் அணுசக்தி நிலையத்தை மீண்டும் உக்ரைனிடம் ரஷ்யப் படைகள் ஒப்படைத்துவிட்டு சென்றுள்ளன. இதனால், கதிரியக்க கசிவின் அச்சத்தால் ரஷ்யப் படைகள் அங்கிருந்து விலகியதாக கூறப்படுகிறது. உக்ரைன் மீதான ரஷ்யாவின் தாக்குதல் ஒரு மாதத்தைக் கடந்துள்ள நிலையில், தலைநகர் கீவைக் கைப்பற்ற ரஷ்யா தொடந்து முயற்சி செய்து வருவதால் இரு தரப்பிலும் உயிரிழப்புகள் ஏற்பட்டு வருகின்றன. துருக்கியில் நடந்த உக்ரைன் – ரஷ்யா இடையிலான பேச்சுவார்த்தையில் தலைநகர் கீவிலிருந்து படைகளைக் குறைத்துக் கொள்வதாக ரஷ்யா அறிவித்தது. ஆனால், குறிப்பிட்ட பகுதிகளை தவிர மற்ற இடங்களில் ரஷ்யப் படைகள் தொடர் தாக்குதலில் ஈடுபட்டு வருகின்றன. இந்நிலையில், செர்னோபில் அணு உலையைச் சுற்றி ரஷியப் படைகள் ஆயுதங்களை வைத்திருப்பதால், தாக்குதலின்போது அணு உலையில் உள்ள வேதிப் பொருள்கள் வெடிக்க வாய்ப்பு இருப்பதாகவும், அதனால் ரஷ்யா படைகளை அங்கிருந்து வெளியேற்ற வேண்டும் என உக்ரைன் துணை பிரதமர் இரினா வெரஷ்சுக் எச்சரிக்கை விடுத்திருந்தார். கடந்த பிப்ரவரி 24ம் தேதி முதல் செயல்படாத செர்னோபில் அணுசக்தி நிலையத்தை தங்களது கட்டுக்குள் வைத்திருந்த ரஷ்யப் படைகள், தற்போது ெசர்னோபில் அணுசக்தி நிலையத்தை உக்ரைன் நிர்வாகத்திடம் படைகள் மீண்டும் ஒப்படைத்துள்ளது. இதுகுறித்து சர்வதேச அணுசக்தி நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில், ‘தங்களது கட்டுப்பாட்டில் செர்னோபில் அணுசக்தி நிலையத்தை வைத்திருந்த ரஷ்யப் படைகள், தற்போது அதனை உக்ரைன் அதிகாரிகளிடம் முறைப்படி ஒப்படைத்தது. இதுதொடர்பாக எழுத்துப்பூர்வமான கடிதத்தை கொடுத்துள்ளது. அப்பகுதியில் நிலை நிறுத்தப்பட்ட ரஷ்யப் படைகள், வடக்கே கிரெம்ளினுடன் இணைந்த பெலாரஸை நோக்கி நகர்ந்து வருகின்றன. செர்னோபில் அணுசக்தி நிலைய பகுதியானது விலக்கு மண்டல பகுதியாக அறிவிக்கப்பட்ட நிலையில், தற்போது அங்கு அதிக கதிரியக்கம் வெளியாவதாக கூறப்படுகிறது. அதனால் ரஷ்யப் படைகள் தங்களது கட்டுப்பாட்டில் இருந்த அணுசக்தி நிலையத்தை மீண்டும் உக்ரைனிடம் கொடுத்துள்ளதாக கூறும் தகவலை உறுதிப்படுத்த முடியவில்லை’ என்று தெரிவித்துள்ளது. இத்தனை நாட்களாக தங்களது கட்டுப்பாட்டில் செர்னோபில்லை வைத்திருந்த ரஷ்யப் படைகள், திடீரென அவற்றை உக்ரைனிடம் ஒப்படைத்துவிட்டு சென்றதால் திடீர் பதற்றம் ஏற்பட்டுள்ளது. முன்னதாக கடந்த 1986ம் ஆண்டு ஏப்ரல் 26ம் தேதி செர்னோபிலின் நான்காம் அணு உலை வெடித்தது, இதனால் நூற்றுக்கணக்கான மக்கள் பலியாகினர். கதிரியக்க மாசுபாடு காரணமாக இவர்கள் பலியாகினர். இந்த கதிரியக்க தாக்குதல் ஐரோப்பா முழுவதும் பரவியது என்பது குறிப்பிடத்தக்கது. இதுகுறித்து உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி வெளியிட்ட வீடியோ பதிவில், ‘தெற்கு மற்றும் கிழக்கு டான்பாஸ் பகுதியில் ரஷ்யப் படைகள் முகாமிட்டுள்ளன. அப்பகுதியின் நிலைமை மிகவும் மோசமான நிலையில் உள்ளது. மரியுபோல் நகரை சுற்றிவளைத்தது போல், ரஷ்ய படைகள் அங்கேயும் குவிக்கப்பட்டுள்ளது. ரஷ்யப் படைகளை எதிர்த்து தொடர்ந்து போராடுவோம். ஆக்கிரமிப்பாளர்களைத் தடுக்கவும், அவர்களின் முட்டாள்தனமான நடவடிக்கைகளில் இருந்து எங்கள் நாட்டை பாதுகாப்போம். உக்ரைனின் பாதுகாப்பிற்கு துருக்கி உத்தரவாதம் அளிக்க தயாராக உள்ளது. அமைதி நடவடிக்கை குறித்து துருக்கி அதிபர் ரெசெப் தையிப் எர்டோகனுடன் ஆலோசனை நடத்தினேன். அப்போது இஸ்தான்புல்லில் நடந்த உக்ரைன் மற்றும் ரஷ்ய பிரதிநிதிகளின் பேச்சுவார்த்தை தொடர்பாக எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்தும் விவாதிக்கப்பட்டது. உக்ரைனின் தேசிய பாதுகாப்பு சேவையில் பணியாற்றி வந்த இரண்டு ஜெனரல்கள், ராணுவ விதிமுறைகளை மீறியதால் அவர்களை சஸ்பெண்ட் செய்துள்ளோம். இவர்களை போன்று துரோக வேலைகளை செய்வோர், அவர்கள் தங்களது பதவிகளை இழக்க நேரிடும்’ என்று தெரிவித்துள்ளார்.ஐரோப்பிய – சீன உச்சி மாநாடுஉக்ரைன் மீது ரஷ்யப் படைகளின் தாக்குதல்களை சீனா கண்டிக்கவில்லை. மாறாக இருதரப்பும் அமைதி பேச்சுவார்த்தையில் ஈடுபட வேண்டும் என்று சீனா கூறியது. ஐ.நா சபையில் ரஷ்யாவுக்கு எதிரான வாக்கெடுப்பு தீர்மானத்தின் போதும் கூட, ரஷ்யாவுக்கு எதிராக சீனா வாக்களிக்கவில்லை. சில இடங்களில் ரஷ்யாவுக்கு ஆதரவான கருத்தை சீனா வெளியிட்டு வந்தது. இதனால் ஐரோப்பிய நாடுகள் சீனாவின் மீது கடும் கோபத்தில் உள்ளன. இந்நிலையில் ஐரோப்பிய ஒன்றியம் – சீனா நாடுகளுக்கு இடையிலான உச்சி மாநாடு இன்று நடக்கிறது. கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகளுக்கு பின்னர் ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் சீனாவின் தலைவர்கள் இன்று நடக்கும் உச்சிமாநாட்டில் சந்திக்க உள்ளனர். அப்போது உக்ரைன் போர் நிலவரம் குறித்து விவாதிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அப்போது உக்ரைன் விவகாரத்தில் சீனாவின் நிலைப்பாடு என்ன என்பது மில்லியன் டாலர் கேள்வியாக இருப்பதாக ஐரோப்பிய ஒன்றிய அதிகாரிகள் தெரிவித்தனர்.ரஷ்யப் படைகள் தடுமாற்றம்அமெரிக்க அதிபர் ஜோ பிடன் செய்தியாளர்களிடம் கூறுகையில், ‘உக்ரைன் மீதான ரஷ்யாவின் படையெடுப்பு தடுமாற்றத்தை கண்டு வருகிறுது. ரஷ்ய அதிபர் புடின் தனது ராணுவ ஆலோசகர்களிடமிருந்து விலகி உள்ளார். சுயமாக தன்னை அவர் தனிமைப்படுத்திக் கொண்டதாக தெரிகிறது. அவர் தனது ஆலோசகர்களில் சிலரை சஸ்பெண்ட் செய்துள்ளார் அல்லது அவர்களை வீட்டுக் காவலில் வைத்துள்ளார் என்பதற்கான ஆதாரங்கள் எங்களிடம் உள்ளன. இருந்தும் உறுதியான ஆதாரங்கள் இல்லாததால், இந்த நேரத்தில் அதனை வெளிப்படுத்த முடியாது’ என்றார். ரஷ்ய அதிபர் புடின், தனது ஆலோசகர்களில் சிலரை சிறையில் அடைத்துள்ளதாக பிடன் கூறிய கருத்து குறித்து முக்கிய நிபுணர்கள் சிலர் கூறுகையில், ‘உக்ரைனில் நடக்கும் போரை கவனித்து வரும் ரஷ்ய வெளிநாட்டு புலனாய்வுப் பிரிவின் தலைவர் கர்னல் செர்ஜி பெசேடா மற்றும் அவரது துணை தலைவர் அனடோலி பொலியுக் ஆகியோர் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர். ஆனால் ரஷ்ய ஊடகங்கள் இந்த தகவலை வெளியிடவில்லை. காரணம் அங்கு ஊடகங்களுக்கான கடுமையான கட்டுப்பாடுகள் உள்ளதால், ரஷ்யா தரப்பில் இந்த செய்தி குறித்த தகவல்கள் வெளியாக வில்லை. அதனால், இந்த வகையான தகவலை உறுதிப்படுத்துவது மிகவும் கடினம்’ என்று தெரிவித்தனர்.அமெரிக்கர்களுக்கு எச்சரிக்கைஅமெரிக்க வெளியுறவுத்துறை  செய்தித் தொடர்பாளர் நெட் பிரைஸ் வெளியிட்ட அறிக்கையில், ‘ரஷ்யா மற்றும் உக்ரைனில் தங்கியுள்ள அமெரிக்கர்கள் உடனடியாக அந்த இரு நாடுகளையும் விட்டு வெளியேற வேண்டும். ரஷ்யா மற்றும் உக்ரைனில் உள்ள அதிகாரிகள், அங்கு தங்கியுள்ள அமெரிக்க குடிமக்களை குறிப்பிட்டக் காரணங்களுக்காக அவர்களை தனிமைப்படுத்த வாய்ப்புள்ளது’ என்று தெரிவித்துள்ளார். 1,34,500 பேர் சேர்ப்புரஷ்ய பாதுகாப்பு அமைச்சர் செர்ஜி ஷோய்கு வெளியிட்ட அறிக்கையில், ‘ரஷ்ய ராணுவத்தில் ஏப். 1ம் தேதி 1,34,500 பேர் சேர்க்கப்படவுள்ளனர். இவர்கள் உக்ரைனில் நடக்கும் போருக்கு அனுப்ப கட்டாயப்படுத்தப்பட மாட்டார்கள். குறிப்பாக அவர்களில் எவரும் ‘ஹாட் ஸ்பாட்’களுக்கு அனுப்பப்பட மாட்டார்கள்’ என்று கூறினார்….

Related posts

ஆட்சி அமைக்கப் போவது யார்? இங்கிலாந்தில் இன்று பொதுத்தேர்தல்: சுனக் – ஸ்டார்மர் இடையே கடும் போட்டி

டிரம்புடன் நடந்த நேரடி விவாதத்தில் தூங்கி விட்டேன்: ஜோ பைடன் ஒப்புதல்

ஜோ பைடனுக்கு மூளை பாதிப்பு நோய் உள்ளதாக தகவல்? அதிபர் தேர்தலில் பைடனுக்கு பதிலாக கமலா ஹாரிசை நிறுத்துங்கள்: அமெ. மூத்த ஊடகவியலாளர் வலியுறுத்தல்