வேடசந்தூர் திமுக பிரமுகர் கொலை வழக்கில் முன்விரோதத்தில் கொன்றது அம்பலம்

வேடசந்தூர், செப். 28: வேடசந்தூர் திமுக பிரமுகர் கொலை வழக்கு தொடர்பாக 2 பேர் வாடிபட்டி போலீஸ் ஸ்டேஷனில் சரணடைந்துள்ளனர். திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூர் அருகே குன்னம்பட்டியை சேர்ந்தவர் மாசி என்ற மாசி பெரியண்ணன் (40). திமுக வேடசந்தூர் தெற்கு ஒன்றிய பொருளாளர். மனைவி முத்துமாரி நாகம்பட்டி ஒன்றிய கவுன்சிலராக உள்ளார். நேற்று முன்தினம் இரவு பெருமாள் கவுண்டன்பட்டியில், மாசியை மர்ம நபர்கள் வழிமறித்து அரிவாளால் வெட்டி படுகொலை செய்தனர். மாசியின் உடல் திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. நேற்று காலை திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில், குவிந்த அவரது உறவினர்கள், குற்றவாளிகளை கைது செய்யக்கோரி சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். பேச்சு வார்த்தைக்கு பின் உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

இதனிடையே இக்கொலை வழக்கு தொடர்பாக மதுமோகன் (23), சரவணன் (23) ஆகிய 2 பேர், வாடிபட்டி போலீஸ் ஸ்டேஷனில் சரணடைந்துள்ளனர். அதனைத்தொடர்ந்து வேடசந்தூர் போலீசார், இருவரையும் காவலில் எடுத்து விசாரணை நடத்தி வருகின்றனர். விசாரணையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு வேடசந்தூரில் உள்ள ஒரு பாரில் மது அருந்திய மாசி தரப்பை சேர்ந்தவர்களுக்கும், மற்றொரு தரப்பை சேர்ந்த மதுமோகன், சரவணன் ஆகியோருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது மதுமோகன், சரவணனை, மாசி கடுமையாக கண்டித்ததாக கூறப்படுகிறது. இதனால் கோபம் அடைந்த இருவரும், மாசியை கொலை செய்தது போலீஸ் விசாரணையில் தெரிய வந்துள்ளது.

Related posts

பேனர் வைத்தவர்கள் மீது வழக்கு

மணல் சிற்பத்தில் புதுவை; ஆயி மண்டபம், முதல்வர் முகம்

பெண்ணிடம் கந்துவட்டி கொடுமை வீட்டை பூட்டி வெளியேற்றிய அவலம்