வெள்ள நிவாரண உதவி தொகை வாங்காதவர்கள் ரேஷன் கடைகளில் இன்று பெறலாம் கலெக்டர் அறிவிப்பு

நாகர்கோவில், ஜன. 3 : குமரியில் இதுவரை வெள்ள நிவாரண உதவி தொகை வாங்காதவர்கள் இன்று ரேஷன் கடைகளில் நிவாரண உதவி தொகை பெறலாம் என்று கலெக்டர் கூறி உள்ளார். குமரி மாவட்டத்தில் கடந்த 17.12.2023 மற்றும் 18.12.2023 ஆகிய இரண்டு நாட்கள் பெய்த பருவமழையின் காரணமாக பாதிக்கப்பட்ட அனைத்து குடும்ப அட்டைத்தாரர்களுக்கும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெள்ள நிவாராணத் தொகையாக தலா a1000 வழங்கப்படும் என அறிவித்தார். இதை தொடர்ந்து குமரி மாவட்டத்திற்குட்பட்ட 5,77,803 குடும்ப அட்டைத்தாரர்களுக்கு வெள்ள நிவாரண உதவித்தொகை கடந்த 29.12.2023 முதல் அனைத்து கூட்டுறவு கடன் சங்கங்கள் மற்றும் நியாயவிலைக்கடைகள் வாயிலாக வழங்கப்பட்டு வருகிறது. கடந்த 31ம் தேதி வரை 85 சதவீத குடும்ப அட்டைகளுக்கு நிவாரண உதவி தொகை வழங்கப்பட்டு இருந்தது.

நேற்று முன் தினம் 1ம் தேதி விடுமுறை என்பதால் வெள்ள நிவாரணம் வழங்கப்பட வில்லை. நேற்று (2ம்தேதி) வெள்ள நிவாரணம் வழங்கப்பட்டது. ரேஷன் கடைகளில் மாதாந்திர பொருட்களுடன் வெள்ள நிவாரண தொகையையும் ரேஷன் கடை பணியாளர்கள் வழங்கினர். இதுநாள் வரை நிவாரணத்தொகை வாங்காத விடுபட்ட குடும்ப அட்டைத்தாரர்களுக்கு இன்று (3.1.2024)ம் வழங்கப்படும் என கலெக்டர் தர் கூறி உள்ளார். எனவே விடுபட்ட குடும்ப அட்டைத்தாரர்கள் தங்கள் பகுதிகளில் உள்ள கூட்டுறவு கடன் சங்கங்கள் மற்றும் நியாயவிலைக்கடைகளுக்கு இன்று சென்று தங்களது நிவாரண உதவித்தொகையினை பெற்று கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். முன்னதாக கலெக்டர் தர் நேற்று, தேரூர் பேரூராட்சிக்குட்பட்ட பகுதியில் அமைந்துள்ள தேரூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் மற்றும் தேரூர் நியாயவிலைக்கடையின் கீழ் உள்ள குடும்ப அட்டைத்தாரர்களுக்கு a1000 நிவாரணத்தொகை வழங்கும் பணியை பார்வையிட்டார். அகஸ்தீஸ்வரம் தாசில்தார் கண்ணன் உட்பட பலர் உடன் இருந்தனர்.

Related posts

பட்டாசு திரிகள் பறிமுதல்

2 மாதமாக மூடி கிடக்கும் நிறுவனம் சீட்டு பணம் வசூலித்து மோசடி: ஏமாந்தவர்கள் புகார் மனு

பள்ளியில் அடிப்படை வசதி வேண்டும் பெற்றோர் ஆசிரியர் கழகம் மனு