வெளியே தலைகாட்ட முடியாத நிலை ஏற்படும் ஓபிஎஸ் என்னை மிரட்டினால் பல உண்மைகளை வெளியிடுவேன்: எச்சரிக்கை விடுத்து மாஜி அமைச்சர் உதயகுமார் வீடியோ

திருமங்கலம்: என்னை மிரட்டினால் ஓபிஎஸ் குறித்த பல உண்மைகளை வெளியிடுவேன் என முன்னாள் அமைச்சர் உதயகுமார் எச்சரிக்கை விடுத்து வீடியோ வெளியிட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டம், திருமங்கலம் தொகுதி எம்எல்ஏவும், முன்னாள் அமைச்சருமான உதயகுமார் வெளியிட்டுள்ள ஒரு வீடியோ வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. அந்த வீடியோவில் அவர் பேசியதாவது: நான் 2008ல் அதிமுகவில் சேர்ந்ததாக ஓபிஎஸ்சின் கைக்கூலியான கோவை செல்வராஜ் அவதூறாக பேசி இருக்கிறார். அதிமுகவின் வரலாறு தெரியாத கோவை செல்வராஜ் போன்றவர்களை வைத்துக்கொண்டு தலைமை தாங்கும் ஓ.பன்னீர்செல்வத்தின் நிலையை பார்த்தால் பரிதாபமாக உள்ளது. அதிமுக துவங்கிய காலம் முதல் கட்சியின் கொள்கைக்காக உழைத்த குடும்பம் எங்களது குடும்பம் என்பது அவருக்கு தெரியாது. மதுரை சட்டக்கல்லூரியில் பயின்றபோது முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவிற்காக செமஸ்டர் தேர்வு எழுதாமல் போராட்டத்தில் ஈடுபட்டு சிறைக்கு சென்றேன். அதனால் என்னை மாணவர் அமைப்பில் பணியாற்ற உத்தரவிட்டார். ஓ.பன்னீர்செல்வம், என்னை சீண்டி பார்க்க வேண்டாம், பயமுறுத்த வேண்டாம், சொத்து சேர்த்துள்ளதாக மிரட்டி பார்க்க வேண்டாம். திறந்த கதவோடு எத்தனை சோதனைக்கும் தயாராகவே உள்ளேன். கோவை செல்வராஜ் போன்றவர்களை வைத்து ஓபிஎஸ் என்னை மிரட்டி பார்த்தால் அதற்கான பின்விளைவுகளை அவர் சந்திக்க வேண்டியிருக்கும் என எச்சரிக்கை செய்கிறேன். அதிமுக நலனுக்காகவும், எதிர்காலத்திற்காகவும் பேசி வருகிறேன். என்னை மிரட்டி பார்த்தால் ஓபிஎஸ் குறித்து பல உண்மைகளை வெளியிடுவேன். இதனால் வெளியே தலைகாட்ட முடியாத நிலை அவருக்கு ஏற்படும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார். * நான் விலக தயார்? ஓபிஎஸ் தயாரா?உதயகுமார் மேலும் கூறியதாவது : ஓபிஎஸ் வீட்டிலும், எனது வீட்டிலும் சொத்து குவிப்பு குறித்து லஞ்ச ஒழிப்புத்துறை ஒரே நேரத்தில் சோதனை நடத்தட்டும். எனது வீட்டில் வருமானத்திற்கு அதிகமாக சொத்து குவித்ததாக கண்டறியப்பட்டால்,  நான் பொது வாழ்க்கையிலிருந்து விலகிவிடுகிறேன். நீங்கள் சொத்து குவித்ததாக அறிவித்தால் பொது வாழ்க்கையிலிருந்து விலக தயாரா என சவால் விடுகிறேன் என்றார்….

Related posts

ஒரே நாடு ஒரே தேர்தலுக்கு மநீம கடும் எதிர்ப்பு: பொதுக்குழுவில் தீர்மானம்

திமுக பிளக்ஸ் பேனர் கிழிப்பு: அதிமுக நிர்வாகிகள் 6 பேர் கைது

சொல்லிட்டாங்க…