வெளிமாநில வரத்தால் தேங்காய் விலை வீழ்ச்சி

*கடமலை-மயிலையில் விவசாயிகள் கவலை நிர்ணய விலை கிடைக்க அரசுக்கு வலியுறுத்தல்வருசநாடு : வெளிமாநில வரத்தால் உள்ளூர் தேங்காய்க்கு விலை கிடைக்காமல் கடமலை-மயிலை ஒன்றிய விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். தேனி மாவட்டம், கடமலை-மயிலை ஒன்றியத்தில் பல்லாயிரம் ஏக்கரில் தென்னை விவசாயம் நடைபெற்று வருகிறது. இங்கு விளைவிக்கப்படும் தேங்காய் தமிழகம் மட்டுமல்லாமல் கேரளா, கர்நாடகா, மகாராஷ்டிரா மும்பை, டெல்லி உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களுக்கு அனுப்பப்படுகிறது. இந்நிலையில் கடந்த சில நாட்களாக தேங்காய் விலை குறைந்து வருகிறது. இதனால், விவசாயிகள் கவலையில் உள்ளனர். இது குறித்து வருசநாடு விவசாயி லோகேந்திரன் கூறுகையில், ‘கடமலை-மயிலை ஒன்றியத்தில்  தேங்காய் விளைச்சல் அதிகமாக உள்ளது. கடந்த மாதம் தேங்காய்க்கு ரூ.12 முதல் 14 வரை விலை கிடைத்தது. இந்நிலையில், ஆந்திரா, தெலுங்கானா, உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட வெளி மாநிலங்களிலிருந்து தேங்காய் வரத்து அதிகமாக இருப்பதால், தேங்காய் விலை குறைந்துள்ளது. இதனால், விவசாயிகளுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளது. தென்னை மரங்களை பராமரித்து உரமிடுதல், வேலையாட்களுக்கு கூலி என அதிக செலவாகிறது. எனவே, நிர்ணய விலை கிடைக்க தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றார். இது குறித்து கடமலைக்குண்டு தென்னை விவசாயிகள் சங்க நிர்வாகிகளிடம் கேட்டபோது, ‘ ஒரு டன் கொப்பரை தேங்காய் ரூ.28 ஆயிரம் முதல் 29 ஆயிரம் வரை தற்பொழுது விற்பனையாகிறது. மேலும், தேங்காய் விலை குறையும் என வியாபாரிகள் தெரிவித்துள்ளனர். கோவில் விழாக்கள் ரத்து, போக்குவரத்து தடை உள்ளிட்ட காரணங்களால் தேங்காய்க்கு விலை கிடைக்கவில்லை. அனைத்து கோயில்களிலும் பண்டிகைகள் நிறுத்தப்பட்டுள்ளது இதனால், தென்னை விவசாயம் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. எனவே, தேனி மாவட்ட நிர்வாகமும், தமிழக அரசும் உரிய நடவடிக்கை எடுத்து, தேங்காய்களுக்கு நிர்ணய விலை கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றனர்….

Related posts

போலி இ-மெயில் அனுப்பி பணம் பறிக்கும் மோசடி கும்பல்; எச்சரிக்கையாக இருக்க சைபர் போலீஸ் அறிவுறுத்தல்

அரசு உதவிபெறும் பள்ளி இசை ஆசிரியர் பெற்ற கூடுதல் ஊதியத்தை திரும்ப வசூலிக்கும் உத்தரவு செல்லும்: சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு

பரந்தாமன் எம்எல்ஏ உருவாக்கியுள்ள “நம்ம எக்மோர்” செயலி: துணை முதல்வர் தொடங்கி வைத்தார்