Sunday, October 6, 2024
Home » வெற்றி நாயகியாக சாதித்தவர் சரோஜாதேவி

வெற்றி நாயகியாக சாதித்தவர் சரோஜாதேவி

by kannappan

நன்றி குங்குமம் தோழி செல்லுலாய்ட் பெண்கள்பா.ஜீவசுந்தரி -7650களில் தமிழ்த் திரைக்குள் நுழைந்து எம்.ஜி.ஆர் என்னும் மாய மோதிரக் கையால் குட்டுப்பட்டு, 60களில் உலகம் வியக்கும் உச்ச நட்சத்திரமாகி, திருமண பந்தத்துக்குப் பின்னும் குறையாத திரை வாய்ப்புகளுடன் என்றும் எப்போதும் மங்காப் புகழுடன் நம்மிடையே வாழ்ந்து கொண்டிருப்பவர் சரோஜாதேவி. தெலுங்கையும் மலையாளத்தையும் தாய்மொழியாகக் கொண்ட அஞ்சலி தேவி, பானுமதி, பத்மினி, சாவித்திரி என திறமை மிக்க நடிகைகள் தமிழ்த் திரையைப் பளபளப்பாக்கிக் கோலோச்சிக் கொண்டிருந்த காலத்தில் கன்னடம் பேசும் கொஞ்சு மொழிக் குமரியாகத் தமிழுக்கு வந்து வளம் சேர்த்தவர் சரோஜா தேவி. புதிதாகச் சேர்க்கப்பட்ட இளவரசி ரத்னாவாக சரோஜாதேவி எம்.ஜி.ஆர். தன் ஒட்டுமொத்த சம்பாத்தியத்தையும் மூலதனமாக்கி, அவரே தயாரித்து இயக்கிய திரைப்படம் ‘நாடோடி மன்னன்’. அதற்காக முன்னதாக ஒப்புக்கொண்ட பல படங்களையும் பாதியில் நிறுத்தி விட்டார். அதில் ‘திருடாதே’ படமும் ஒன்று. அப்படத்திலும் சரோஜாதேவி தான் கதாநாயகி. இந்தப் படம் ஜெயித்தால் நான் மன்னன்; இல்லையென்றால் நான் நாடோடி என வெளிப்படையாக அறிவித்து விட்டுத்தான் ‘நாடோடி மன்னன்’ பட வேலைகளில் மும்முரமாக ஈடுபட்டார். கதைப்படி இரு நாயகர்கள். இரட்டை வேடமாக அவரே அதனை ஏற்றார். இரு நாயகர்கள் என்றால், நாயகிகளும் இருவர் அல்லவா! அதில் ஒருவர் மன்னனின் மகாராணியாக எம்.என்.ராஜம்; நாடோடியின் காதலியாக பி.பானுமதி. படம் வளர வளர, எம்.ஜி.ஆருக்கும் பானுமதிக்கும் இடையில் கருத்து மோதல்களும் வளர்ந்தன. சுதந்திர மனப்பான்மையும் பிடிவாத குணமும் கொண்ட பானுமதி பாதிப் படத்தில் விலகிக் கொண்டார். ஏறக்குறைய எம்.ஜி.ஆரின் குணாதிசயமும் இதுதான். அவரே இதை ஒப்புக் கொண்டுள்ளார். விளைவு பாதி படத்துக்கு மேல் முடிந்து போன நிலையில் கதையில் சில மாற்றங்களுடன், புதிய கதாநாயகியையும் இணைக்க வேண்டிய சூழல். யாரைக் கதாநாயகியாக்குவது என்ற சிந்தனை ஓடியது. பலரும் அதற்குள் வந்து போனார்கள். அப்போதுதான் ஏற்கனவே விஜயா – வாஹினி ஸ்டுடியோவில் கே.சுப்பிரமணியம் இயக்கத்தில் ‘கச்ச தேவயானி’ கன்னடப் படத்தில் நடிப்பதற்காக வந்திருந்த அந்தக் கருத்த அழகுப் பெண் சரோஜாதேவியின்; நினைவு வர, அவரையே நாயகியாக ஒப்பந்தம் செய்து படத்தையும் எடுத்து முடித்தார் எம்.ஜி.ஆர். அதுவரை கருப்பு வெள்ளையில் எடுக்கப்பட்ட படம், புதிய கதாநாயகியின் வரவுக்குப் பின் கலருக்கு மாறியது. சரோஜா தேவிக்கும் ஒரு கலர்ஃபுல் எதிர்காலம் திரையுலகில் ஏற்பட்டது. படமும் ஓஹோவென்று 25 வாரங்கள் ஓடி வெற்றியையும் வசூலையும் வாரிக் குவித்தது. அதன் பிறகு பத்தாண்டுகளுக்கு எம்.ஜி.ஆர். படங்களில் தவிர்க்க முடியாத நாயகியாக சரோஜாதேவி முன்னணியில் இருந்தார். ;‘நாடோடி மன்னன்’ வெற்றி விழாவுக்கென வெளியிடப்பட்ட மலரில் ‘கதாநாயகியாக சரோஜா தேவியைத் தேர்வு செய்தது ஏன்?’ என்பதுபற்றி கீழ்க்கண்டவாறு எம்.ஜி.ஆர். எழுதியிருக்கிறார். ‘இளவரசி ரத்னா பாத்திரத்திற்குப் பல புதிய நடிகைகளையும், இன்று விளம்பர மடைந்திருக்கும் ஒரு சிலரையும் நடிக்க வைக்க நினைத்ததுண்டு. எப்படியாவது ஒரு புதிய நடிகையை இந்தப் பாத்திரத்தின் மூலம் அறிமுகப்படுத்தப் பெரிதும் முயன்றேன். என் முயற்சி பலவகையிலும் தோல்வியே கண்டது. இரண்டொரு நடிகையரை படமெடுத்தும் பார்த்தேன். சரியாயில்லை. பிறகுதான் சரோஜாவை நடிக்கச் செய்து படமெடுத்தேன்.இது ஒரு புதிய விசித்திர அனுபவம் சரோஜாவைக் கொண்டு ‘பாடுபட்டாத் தன்னாலே’ என்ற பாட்டுக்கு நடனமாடச் செய்து முன்பே படமும் எடுக்கப்பட்டுவிட்டது. ஏற்கனவே எடுத்த காட்சியை சந்திரா என்ற வேறொருவரை நடனமாடச் செய்து மீண்டும் படமாக்க நேரிட்டது. சரோஜாதேவி அவர்கள் இப்போது பேசுவதை விடத் தமிழ் உச்சரிப்பு மோசமாக இருந்த நேரம். ஆகவே அவருக்கு ஏற்றாற்போல் வசனங்களை அமைக்கச் செய்தேன். அவருடைய பாத்திரத்தில் குறிப்பிடத்தக்க உணர்ச்சி பாவங்களை வெளிக்காட்ட வேண்டிய அவசியமில்லை. வெளி உலகத்தைப் பற்றியோ, நல்ல பண்பாட்டைப் பற்றியோ எதுவுமே அறியாத ஓர் அப்பாவிப் பெண்ணாக அந்தப் பாத்திரம் அமைக்கப்பட்டது. அந்தப் பாத்திரத்துக்கு சரோஜாதேவி அவர்களும் சரோஜாதேவி அவர்களுக்கு அந்தப் பாத்திரமும் அற்புதமாகப் பொருந்திவிட்டன. சரோஜாதேவி அவர்கள் அந்தப் பாத்திரத்தைத் தனதாக்கிக் கொண்டு நடித்துப் புகழைப் பெற்றுவிட்டார் என்று துணிந்து கூற முடிகிறது. ‘வண்ணுமில்லே சும்மா!’ என்று சொல்லும் கொச்சையான, ஆனால் கருத்தாழம் கொண்ட இயற்கை நடிப்பால் அவர் மக்கள் மனதில் பதிந்துவிட்ட ஒன்று போதுமே, அவர் அந்தப் பாத்திரம் தாங்கி நடித்ததில் வெற்றி பெற்றுவிட்டார் என்பதை நிரூபிக்க’ ;- எம்.ஜி.ராமச்சந்திரன் ;தேவர் படங்களின் தொடர் நாயகியானார் ஏதோ ஒருவித ஈர்ப்பு சக்தி சரோஜா தேவியை நோக்கி எல்லோரையும் கவர்ந்திழுத்தது. தயாரிப்பாளர்கள், முன்னணி நாயகர்கள் என அனைவரும் சரோஜா தேவியே தங்கள் அடுத்த படத்தின் நாயகியாக வேண்டுமென்று விரும்பினார்கள். நாடோடி மன்னன் படம் வெளிவருவதற்குத் தாமதமான இடைவெளியில் சின்னப்ப தேவர், தன் ‘செங்கோட்டை சிங்கம்’ படத்துக்குக் கன்னடக் கதாநாயகன் உதயகுமாரை கதாநாயகனாக்கி, சரோஜாதேவியை நாயகியாக ஒப்பந்தம் செய்து படத்தையும் எடுத்து முன்னதாகவே ரிலீஸ் செய்து விட்டார் என்றால் பாருங்களேன். எவ்வளவு வேகம் என்று! ஆக, சரோஜாதேவி கதாநாயகியாக நடித்த; நேரடித் தமிழ்ப்படம் ‘செங்கோட்டை சிங்கம்’. அத பிறகு எம்.ஜி.ஆர். – சரோஜா தேவியை இணையாக வைத்தே தேவர் பல வெற்றிப் படங்களையும் எடுத்துக் குவித்தார். குறிப்பாக, ‘தாயைக் காத்த தனயன்’, ‘தர்மம் தலை காக்கும், தாய் சொல்லைத் தட்டாதே, குடும்பத் தலைவன், நீதிக்குப் பின் பாசம். இப்படங்களின் பாடல்கள் அனைத்தும் பட்டிதொட்டி எங்கும் காற்றலைகளில் பரவலாகி இப்போதும் நம் காதுகளில் ரீங்காரமிட்டுக் கொண்டிருக்கின்றன. இதில் ‘வேட்டைக்காரன்’ படம் மட்டும் கால்ஷீட் பிரச்சனைகளாலும், சரோஜா தேவியின் தாயார் ருத்ரம்மாவுக்கும் சின்னப்ப தேவருக்கும் இடையில் எழுந்த ஈகோ பிரச்சனையாலும் சரோஜா தேவி இப்படத்தின் நாயகி வாய்ப்பினை இழந்தார். அந்த வாய்ப்பு நடிகையர் திலகம் சாவித்திரிக்குப் போய்ச் சேர்ந்தது. புகழேணியின் உச்சத்தில் இருந்த சரோஜா தேவிக்கு இதனால் பெரிய இழப்பு ஏதும் ஏற்பட்டு விடவில்லை; அந்த அளவு பிற தயாரிப்பாளர்களாலும் நாயக நடிகர்களாலும் தவிர்க்க முடியாத ஒரு நடிப்பு ஆளுமையாகவும் மக்கள் விரும்பும் நாயகியாகவும் இருந்தார் என்பதும் மறுக்க இயலாத உண்மை. எதிர்பாராமல் கிடைத்த ஏற்றமும் முன்னேற்றமும் எம்.ஜி.ஆரின் ‘திருடாதே’ படத்தில் ஒப்பந்தமாகியும் அந்தப் படத்தை உடனடியாகத் தொடர முடியாத நிலை எம்.ஜி.ஆருக்கு ஏற்பட்டது. தன் சொந்த நாடகக் குழுவான ’எம்.ஜி.ஆர். நாடக மன்றம்’ மூலம் நாடகங்களையும் தொடர்ந்து நடித்துக் கொண்டிருந்தார் எம்.ஜி.ஆர். ‘இழந்த காதல்’ அவருடைய பிரபலமான நாடகங்களில் ஒன்று. அதில் நடிப்பதற்காக சென்றபோது காலில் எலும்பு முறிவு ஏற்பட்டதால், கட்டாய ஓய்வு எடுத்தேயாக வேண்டிய சூழலுக்குத் தள்ளப்பட்டார். நாடகம், திரைப்படம் என அவர் சார்ந்த எல்லா வேலைகளும் ஒத்தி வைக்கப்பட்டன. ‘திருடாதே’ படமும் அதனால் தள்ளிப் போனது. எம்.ஜி.ஆர். கால் குணமாகி மீண்டும் நடிப்பதற்குத் தயாரான நிலையில் வந்தபோது, அவரால் அறிமுகப்படுத்தப்பட்ட கதாநாயகி சரோஜாதேவி தமிழ்த் திரையுலகின் முன்னணி நாயகியாக, தவிர்க்கப்பட முடியாதவராக உச்சத்தில் மின்னும் தாரகையாக ஒளிர்ந்து கொண்டிருந்தார் என்பது எம்.ஜி.ஆரே எதிர்பார்க்காத ஒரு நிலை. அந்தளவுக்கு அனைவரையும் தன் அழகாலும் நடிப்பாலும் இறுகப் பிணைத்துக் கட்டிப் போட்டிருந்தார் கன்னடத்துப் பைங்கிளி. நாயகியாக நடிக்கும் வாய்ப்பு கிடைத்த பின்னரும் கூட சிறிய பட்ஜெட் படங்கள், சிறு சிறு வேடங்கள், எதிர்மறை வேடங்கள் என வந்த வாய்ப்புகளையும் நழுவ விட்டு விடாமல் திறம்படச் செய்தார். ‘இல்லறமே நல்லறம்’ படத்தின் நாயகி அஞ்சலி தேவி; ஆனால், கதாநாயகன் ஜெமினிகணேசனை தன் வலையில் வீழ்த்தும் நாடக நடிகையாக ஒரு வேம்ப் பாத்திரத்திலும் நடித்தார். மஞ்சக்குப்பத்திலிருந்து தெருக்கூத்துக் கலைஞராக, நம்பியாரின் காதலியாக தன்னால் நாடகக் குழுவுக்குள் நடிக்க அழைத்து வரப்பட்டவரை, ‘ஜெர்மன் புகழ் நடனமணி சரளாதேவி’ என்று ஜெமினிக்கு அறிமுகப்படுத்தி வைப்பார் நம்பியார். நாட்டியக் கலைஞர்கள் உதய சங்கர் மற்றும் குமாரி கமலாவுடன் இணைந்து ஒரு முழு நீள நாட்டிய நாடகத்திலும் சரோஜாதேவி பங்கேற்று ஆடினார்., ‘கணவனே கண்கண்ட தெய்வம்’ படத்தைத் தயாரித்த நாராயணன் கம்பெனியார் இப்படத்தின் தயாரிப்பாளர்கள். இந்தப் பட வாய்ப்பும் கூட ஜெமினி கணேசன் மூலமாகவே சரோஜாதேவிக்குக் கிடைத்தது. ;அதைத் தொடர்ந்து ‘தேடி வந்த செல்வம்’ படத்தில் டி.ஆர்.ராமச்சந்திரனுக்கு ஜோடி. அடுத்து ‘மனமுள்ள மறு தாரம்’ படத்தில் இணையாக நடித்தவர் நடிகர் பாலாஜி. இயக்குநர் பி.ஆர்.பந்துலுவும் அடுத்த தன் தயாரிப்பான ‘சபாஷ் மீனா’ படத்தில் செல்வச் சீமான் எஸ்.வி. ரங்காராவின் செல்ல மகளாக, சந்திரபாபுவின் ஜோடியாக நடிக்கும் வாய்ப்பினை அளித்தார். அதன் பிறகு ஏராளமான படங்களில் தந்தையும் மகளுமாக இருவரும் நடித்துக் குவித்தார்கள் என்றுதான் சொல்ல வேண்டும். இப்படத்தின் முதன்மை நாயகனும் நாயகியுமாக சிவாஜி கணேசன், மாலினி இருவரும் நடித்தார்கள். சென்னை காசினோ தியேட்டரில் இப்படம் 20 வாரங்களைக் கடந்து ஓடி, மக்களின் ஒருமித்த ஆதரவினைப் பெற்றது. அத்துடன், சென்ற நூற்றாண்டில் மீண்டும் மீண்டும் திரையிடப்பட்ட படங்களில் இது முதன்மை இடத்தையும் பிடித்தது. ;சம்பிரதாயங்களை மீறிய சுய மரியாதைக்காரி சரோஜாதேவி கதாநாயகி அந்தஸ்து பெற்ற 1958 ஆம் ஆண்டில் பல படங்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. ஆனால், அவரை முதன்மை நாயகியாக முன்னிலைப்படுத்திய பெருமைக்குரியவர்; இயக்குநர் தர். அவரின் இயக்கத்தில் 1959ல் வெளிவந்த ‘கல்யாணப்பரிசு’ தமிழகத்தையே புரட்டிப் போட்டது எனலாம். ஆண் – பெண் என அனைத்துத் தரப்பினரையும் கொண்டாட வைத்த கதாபாத்திரமாக வசந்தி இருந்தாள். கல்லூரி மாணவியாக, விளையாட்டில் ஈடுபாடு கொண்டவளாக, காதலன் பாஸ்கர் மீது உயிரையே வைத்திருப்பவளாக, பெற்ற தாயையும் உடன்பிறந்த சகோதரி கீதாவையும் நேசிப்பவளாக என அனைவருக்கும் பிடித்தமானவளாக அவள் உருவாக்கப்பட்டிருந்தாள். குடும்பப் பொறுப்புடன் ஒரு சகோதரனின் இடத்திலிருந்து கூடப் பிறந்தவளைக் கரை சேர்க்கக் கூடியவளாக, தான் விரும்பும் காதலனைத் தன் சகோதரியும் விரும்புகிறாள் என அறிந்ததும் தன் உணர்வுகளைக் கொன்றழித்து விட்டு சகோதரியின் விருப்பத்துக்கு முன்னுரிமை அளிப்பதுடன் காதலனை அவளுக்காக விட்டுக் கொடுத்து, இருவருக்கும் மணம் முடித்து வைத்து வழியனுப்புவது வரை அவள் எந்தப் பெண்ணும் செய்ய முடியாத அற்புதமான செயல்களைச் செய்யக்கூடியவளாக அதி உன்னதமான குணவதியாகப் படைக்கப்பட்டிருந்தாள். இந்தப் பாத்திரப் படைப்பு அனைவரையும் கவர்ந்திழுக்கக் கூடியதாகவும் இருந்தது. ‘ஒரு முறைதான் காதல் வரும்’ என்று அதுவரை சொல்லப்பட்டு வந்த கருத்தாடல்களை மிக எளிதாகக் கடந்து சென்றது இப்படம். பெண்கள் ஒரு முறை ஒரு நபரைக் காதலித்தால், சம்பந்தப்பட்ட காதலனைத் திருமணம் செய்து கொள்ள வேண்டும். அல்லாவிடில் அடுத்த ஒரு நபரைத் திருமணம் செய்து கொள்வது என்பதெல்லாம் நினைத்துக் கூடப் பார்க்க முடியாதவையாகத் திரைப்படங்களில் காட்சிப் படுத்தப்பட்டுக் கொண்டிருந்த நிலையை மாற்றியமைத்த படமாகவும் இது அமைந்தது. காதலில் தோற்றுப் போன ஒரு பெண் எப்போதும் சாகடிக்கப்பட வேண்டும் என்பதையே வழக்கமாகவும் கொண்டிருந்தன அன்றைய திரைப்படங்கள். காதலித்தாலும் காதலனை விட்டுப் பிரிந்தாலும் அவளுக்கு மீண்டும் ஒரு வாழ்க்கை உண்டு என்பதையும் முதன்முறையாக இப்படமே பேசியது. தான் விரும்பியவனுக்குத் தன் சகோதரியை மணம் முடித்து வைத்த பின்னும், சந்தர்ப்ப வசத்தால் தன் மீதும் தன் நடத்தையின் மீதும் சந்தேகம் கொள்ளும் சகோதரியை விட்டுப் பிரிந்து, ரோஷத்துடன் தனித்து எங்கோ முன்பின் அறிமுகமில்லாதவர்களுடன் நட்பினை ஏற்படுத்திக் கொண்டு அவர்கள் வீட்டுப் பெண்ணாக வாழ்வதும் கூட புதிதுதான். பெண்ணின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்கக்கூடிய ஆண் கதாபாத்திரங்களையும் படைத்து உலவ விட்டதில் ஸ்ரீதருக்கும் பெரும் பங்கு இருக்கிறது. இவை அனைத்தையும் மிக அமைதியான முறையில் பேசாமல் பேசியது ‘கல்யாணப்பரிசு’. கனத்த விஷயங்களைப் பேசியபோதும் படம் வெள்ளி விழா கண்டது. உண்மையில் இந்த வேடத்தை ஏற்பதற்காக முதலில் அணுகப்பட்டவர் நடிகையர் திலகம் சாவித்திரி. அவர் அந்த நேரத்தில் கர்ப்பவதியாக இருந்ததால் இந்த வாய்ப்பினை மறுத்து விட்டார். அடுத்ததாகப் பேசப்பட்டவர் நாட்டிய மங்கை எல்.விஜயலட்சுமி. ஆனால், அவருக்கு முடிவெடுக்கும் அதிகாரம் இல்லாததுடன், அவருடைய தந்தை கேட்ட ஊதியம் அவரை இந்த வேடம் ஏற்க முடியாத நிலையையும் உருவாக்கியது. இவர்களைக் கடந்துதான் புதுமுகமாக இருந்த சரோஜாதேவியை அணுகினார்கள். அவரும் இந்தக் கனத்த வேடத்தைப் பொறுப்புணர்ந்து மிகச் சிறப்பாகச் செய்து அறுபதாண்டுகள் கடந்தும் வசந்தியாக நம் மனங்களில் வீற்றிருக்கிறார். மதுரையின் வீரத் தமிழச்சி பொன்னி வசந்தி சுயமரியாதை கொண்டவள் என்றால் பொன்னி அன்பும் பணிவும் துணிச்சலும் மிக்க கிராமத்துப் பெண். முறத்தால் புலியை விரட்டிய வீரத் தமிழச்சி என்று இலக்கியங்கள் சுட்டியதைக் காட்சிப்படிமம் ஆக்கியவள் அவள். இந்த வேடமும் சற்றே கனம் பொருந்தியது. சிவாஜி கணேசன் நடித்த வண்ணப்படமான ‘வீரபாண்டிய கட்டபொம்மன்’ இதே 1959 ஆம் ஆண்டில் வெளியான பிரம்மாண்டத் திரைப்படம். ஆனால், அந்தப் படம் பெறாத சிறப்பையும் பெருமையையும் மத்திய அரசின் வெள்ளிப் பதக்கத்தையும் சிவாஜி கணேசன் நடித்த மற்றொரு கருப்பு வெள்ளைத் திரைப்படமான ‘பாகப்பிரிவினை’ வென்றது. இப்படம் வெள்ளி விழாவையும் கடந்து மதுரை சிந்தாமணி திரையரங்கில் 31 வாரங்கள் ஓடி பெரும் வீச்சாக மக்களின் பாராட்டைப் பெற்றது. ;கிராமிய மணம் கமழும் கூட்டுக் குடும்ப வாழ்க்கையின் அருமைகளையும் உறவுகளின் மேன்மையையும் பேசியது. மாற்றுத் திறனாளியான நாயகனை மணந்து கொள்ளும் ஆதரவற்ற நாயகி பொன்னியாக சரோஜாதேவி நடித்தார் என்பதைவிட, கூடு விட்டுக் கூடு பாய்ந்தார் என்றுதான் சொல்ல வேண்டும். அன்புக்கு அடிமையாகும் அதே நேரம், தன்னை இழிவு படுத்துபவன் எஜமானர் வீட்டு பட்டணத்து விருந்தினன் என்றாலும் ‘விளக்குமாற்றுப் பூசை’ கொடுக்கத் தயங்காதவள் பொன்னி. மாமன். மாமிக்குப் பணிவிடை செய்வது, குணம் கெட்டவளான பெரிய மாமியார் ஏறுக்கு மாறாய்ப் பேசினாலும் பொறுத்துப் போவது என்று அற்புதமாக நடித்திருந்தார். இதுவும் கூட வயதுக்கு மிஞ்சிய வேடம் என்றபோதும் சோகம் மகிழ்ச்சி என மாறுபட்ட உணர்வுகளை முகத்தில் தேக்கி வைப்பதுமாக அழகான ரசவாதத்தைத் தனக்குள் நிகழ்த்திக் காட்டினார். உடன் நடித்த நாயகன் சிவாஜி கணேசனுக்கு நடிப்பு என்பது உடன் பிறந்தது. அவருக்கு இணையாக நடிக்கும்போது நாயகியும் அந்த அளவுக்கு நடிக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு எல்லோருக்குள்ளும் இருக்கும். அதை சரோஜா தேவி சரியாகவே செய்தார். அடுத்தடுத்த இரு படங்களும் பெரும் வெற்றி பெற்றதுடன் நன்கு நடிக்கத் தெரிந்த நடிகை என்ற பெயரையும் அவருக்குப் பெற்றுத் தந்தன. உடன் நடித்த பண்பட்ட நடிகர்கள், பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரத்தின் செழுமையான பாடல்கள், அதற்கு உயிரூட்டும் விதத்தில் அமைந்த; விஸ்வநாதன் – ராமமூர்த்தி இரட்டையரின் இசையமைப்பு என திறமையாளர்களின் கூட்டணியில் அமைந்த படம். ‘தாழையாம் பூ’ முடிச்சு தம்பதியரின் காதலைப் பேசியதென்றால் ‘தேரோடும் எங்க சீரான மதுரையிலே ஊரார்கள் கொண்டாடும் ஒயிலாட்டம்’ பாடல் கிராமிய மணம் கமழ, கிராமத்துத் திருவிழாவின் கொண்டாட்ட மனநிலையை வெளிப்படுத்தும் அற்புதமானதோர் பாடல் என ‘பாகப்பிரிவினை’ காலம் கடந்தும் பேசப்படும் படமாக இருக்கிறது. இந்தப் படங்களின் பெரு வெற்றிக்குப் பிறகு, சரோஜாதேவி மீதான எதிர்பார்ப்பு எல்லோருக்கும் அதிகரித்தது. அதன் விளைச்சலாக ஒரே நாளில் முப்பது படங்களில் நடிப்பதற்கான வாய்ப்புகள் அவரைத் தேடி வந்தன. தினமும் மூன்று ஷிஃப்ட்களில் நடிக்க வேண்டிய நிலை உருவானது. அதனால் 24 மணி நேரத்தில் இரண்டு மணி நேரம் மட்டுமே ஓய்வு எடுக்கும் அவலமும் நிகழ்ந்தது. இது தமிழ்ப் படங்களுக்கு மட்டும் என்றில்லாமல், தெலுங்கு, கன்னடப் படங்கள் என நீண்டது. தமிழ்த் திரையுலகின் மூவேந்தர்களாக அறியப்பட்ட எம்.ஜி.ஆர், சிவாஜி கணேசன், ஜெமினி கணேசன் இவர்களுடன் ஒரு நீண்ட பயணமாக சரோஜா தேவியின் நடிப்புலக அனுபவங்களும் தொடர்ந்தன. அதில் வெற்றிப் படங்களின் எண்ணிக்கையும் வெகுவாக உயர்ந்தது. சரோஜா தேவியின் வெற்றிப் பயணத்தின் அடுத்தடுத்த கட்டங்கள் குறித்து அடுத்த இதழில்….(ரசிப்போம்!)

You may also like

Leave a Comment

12 + twenty =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi