Friday, June 28, 2024
Home » வெற்றி தரும் வாராகி வழிபாடு

வெற்றி தரும் வாராகி வழிபாடு

by kannappan

லலிதா பரமேஸ்வரியின் சேனைகள் அனைத்திற்கும் தலைவியே, தண்டநாதா என பக்தர்கள் போற்றும் வாராகி தேவி. ‘ஜகத் கல்யாண காரிண்ய’  எனும்படி உலகம் உய்ய வேண்டிய பணிகளில் அருளும் சப்த மாதர்களில் தலையானவள் இந்த வாராகி. மகாகாளி, தாருகாசுரனோடு போர்  புரிந்தபோது அவளுக்குத் துணை நின்றவள். யக்ஞ வராஹ மூர்த்தியின் சக்தி. சும்பாசுரனோடு சண்டிகா புரிந்த போரிலும் உதவியவள். சிங்கமதை  வாகனமாய்க் கொண்டு மூவுலகங்களையும் ஆளும் லலிதா பரமேஸ்வரியின் சேனா நாயகியாய் விளங்குபவள், இந்த அம்பிகை. லலிதையின் ரத, கஜ,  துரக, பதாதி எனும் நால்வகைப் படைகளுக்கும் தலைவி எனும் பொறுப்பில் தண்டினீ (commander in cheif) என  இவள் பக்தர்களால்  போற்றப்படுகிறாள்.ஹிரண்யாட்சனைக் கொல்ல வராஹ ரூபம் தரித்து சங்கு, சக்கரம், கதை ஏந்தி அவனை வதைத்து பூமாதேவியை கடலில் இருந்து மீட்டார் திருமால்.  உலகின் ஜீவாதாரமான  பூமிதேவியை  உலகிற்கு மீட்டுத் தந்த மூர்த்தியின் அம்சமான வாரா ஹியும் பராக்ரமங்களில் தன்னிகரில்லாதவள்.  திருமாலின் ஒப்புயர்வற்ற யக்ஞ வராஹ வடிவத்தை எடுத்துக் கொண்ட சக்தி எவளோ, அவளே அங்கு வாராகி வடிவம் தாங்கி வந்து சேர்ந்தாள்  என தேவி மஹாத்மியம் எட்டாம் அத்தியாயத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. வராஹ மூர்த்தியின் அம்சமே வாராகியாவாள். மந்த்ர சாஸ்த்ரம்  அறிந்தவர்கள் பல்வேறு வடிவங்களில் இவளை வழிபடுகின்றனர்.இந்த வாராகி, லலிதா தேவியின் புரத்தின் 16வது பிராகாரமான மரகதமணியால் ஆன பிராகாரத்தில் வசிப்பவள். மகாபத்மாடவீ எனும்  கோடிக்கணக்கான தாமரை மலர்கள் பூத்த தடாகங்கள் உள்ள அந்த பிராகாரத்தின் வடகிழக்குப் பகுதியில் நூற்றுக்கால் மண்டபத்தில்,  சர்வாலங்காரங்களுடன் அருள் பவள் இத்தேவி. வடகிழக்குப் பகுதி என்பது ஆராதனைக்குரியது. அமைதி, வளம், ஆரோக்கியம் போன்றவற்றை  தருவது. அப்படி வளம் கொடுக்கக்கூடிய பகுதியில் வசிக்கிறாள் வாராகி. அதனால் தன்னை வழிபடுவோரின் வாழ்வையும் வளம் கொழிக்கச்  செய்கிறாள். நிகரற்ற அருளும் இணையற்ற ஆற்றலும் கொண்ட வாராகியைப் பற்றியும் அவளின் பல்வேறு வடிவங்களைப் பற்றியும் மந்திர சாஸ்திர  நூல்கள் பலவாறு பாராட்டிப் பேசுகின்றன.‘தந்திரராஜ தந்த்ரம்’ எனும் நூல் இவளை லலிதையின் தந்தை என்றே குறிப்பிடுகிறது. பெண் தெய்வமாக இருப்பினும் காக்கும் திறத்தாலும் ஆற்றல்  வளத்தாலும் ஆண் தெய்வமாகவே அது இத்தேவியை வர்ணிக்கிறது. இதே கருத்தை பாவனோபநிஷத், ‘வாராகி பித்ரு ரூபா’ என ஆமோதிக்கிறது.  இத்தேவியை பஞ்சமி தினத்தன்று வழிபடுதல் விசேஷம். ‘பஞ்சமி பஞ்சபூதேஸி’ என லலிதா ஸஹஸ்ரநாமம் இவள் பெருமையைப் பேசுகிறது.  ‘பஞ்சமி பைரவி பாசாங்குசை’ என்று அபிராமி அந்தாதியில் அபிராமி பட்டரும் இந்த வாராகியைப் போற்றுகின்றார். காட்டுப்பன்றியின் முகம், அழகிய  பெண்ணின் உடல் என்ற தோற்றத்துடன் காட்சியளிப்பவள் இவள். எட்டு கைகளை இத்தேவி கொண்டிருக்கிறாள்.என்ன பேசுவது என நடுக்கம் வந்தால் வாராகி என நினைத்தால் வார்த்தைகள் தானே வரும். வாராகி காவல் தெய்வம். காலம் எனும் கடலில்  நீந்தும் நம்மை கரை சேர்க்கும் கப்பல் அவள். வாராகி உபாசனை உக்ர நரசிம்ம உபாசனையைப் போல் பயங்கரமானது என்று பாமரரிடையே  எண்ணம் உள்ளது. வித்யா பூஜை முறையில் மஹாவாராகியின் இடம் மிக மிக உயர்ந்தது. மஹாவாராகியை ஏதோ பயங்கர தேவதையாகக்  கருதுவது தகாதது. கருணைக்கடலான தேவி அவள். இத்தேவியின் கரங்களில் சங்கு, சக்கரம் இருப்பது, தன் பதி திருமாலைப் போல் கணவனுக்கேற்ற  அனந்த கல்யாண குணங்கள் கொண்ட மனைவியாய் இவள் திகழ்வதை உணர்த்துகிறது.வலக்கரம் அபய முத்திரை காட்டி அடியாருக்கு அடைக்கலம் தந்து, பயத்தைப் போக்குகிறது. இவள் ஏந்தியுள்ள கலப்பை நான்கு விதங்களாகச்  செயல்படுகிறது. முதலாவதாக கடினமான பூமியைப் பிளந்து, இரண்டாவதாக ஆழமாக உழுது, மூன்றாவதாக மண்ணை மிருது வாக்கி, கடைசியில்  அதில் பயிர்கள் செழித்து வளர்ந்து, அதனால் நமக்கு உணவு கிடைக்கும்படிச் செய்கிறது. அதுபோல, நாம் உண்ட உணவு செரிக்காமல் இருந்தாலும்  அதையும் உழுது உணவைப் பக்குவப்படுத்தி மிருதுவாக்கி திசுக்கள் வளர உதவி செய்கிறது. நம் ஐம்புலன்களாலும் நுகரும் இறுகிய மனதையும்  தெளிவிலா புத்தியையும் மிருதுவாக்கி, மென்மையான நெஞ்சத்தில் அன்பு வளரவும் தெளிவடையும் புத்தியில் இறையுணர்வு வளரவும் வழி  வகுக்கிறது.மேலும் பல பிறவிகளின் கர்மவினையால் கெட்டிப்பட்ட ஆன்மாவை, பூமியில் புதைந்துள்ள கிழங்கை கலப்பையால் அகழ்ந்து மேலே கொண்டு  வருவதைப் போல், ஞானக் கலப்பையால் நம் ஆத்மாவைத் தோண்டி ஞானம் ஏற்படும்படியும் செய்கின்றது. இத்தேவி வராஹ முகம் கொண்டதேன்? ‘மானமில்லாப் பன்றிபோல் உபமானமுமில்லை’ என்பது ஆன்றோர் வாக்கு. தேவர்களுக்கு அதிபதியான அதிரூப சௌந்தர்யம் கொண்ட திருமால்  கடலில் புதைந்த உலகை மேலே கொண்டு வர மானமில்லாப் பன்றி வடிவெடுத்ததில் அவனுக்கு நிகருண்டோ என வியக்கின்றனர் சான்றோர். பன்றி மானமில்லாததாகக் கருதப்படு வதாயினும் அதன் உயர்ந்த ஆன்ம குணம் நமக்குப் பாடமாகத் திகழ்கிறது.மானம் இல்லையெனில், அவமானமும் இல்லையன்றோ? மான, அவமானம் எனும் இரண்டிலும் பாதிக்கப்படாமல் இருப்பதே ஞான சாதனை.  சுகத்தையே வேண்டாம் என்பவருக்குத் துக்கம் ஒன்றுமே செய்யாதல்லவா? தன்மானம், தன்மதிப்பு, தற்பெருமை எனத் தன்னையே பாராட்டிக்  கொண்டிருப்பவர்கள்தான் தனக்குச் சிறு அவமதிப்பு நேர்ந்தாலும் தாங்கிக் கொள்ளாமல் துவண்டு போவார்கள். புகழ்ச்சிக்கு மகிழ்ந்தும் இகழ்ச்சிக்கு அஞ்சியும் வாழ்வது ஞானத்திற்குப் புறம் பானது என்பதை சுட்டிக்காட்டவே இந்த வராஹ வடிவை தேவி கொண்டுள்ளாள். ‘நீ ஞானத்தில்  உயரவேண்டுமெனில் துடைப்பம் போலிரு’ என்பர் பெரியோர்.“துடைப்பம் தூசிகளைச் சேர்த்து ஒரு புறமாக ஒதுக்கிவிட்டு, தான் ஒரு மூலையில் ஒதுங்கிக் கொள்கிறது. அது ஒருநாள் தன் பணியைச்  செய்யாவிடில் வீடே குப்பைக் கூளமாய் மாறி, நோய்கள் உண்டாகும் சூழ்நிலை உருவாகிறது. அதுபோல் நீயும் கர்வம் கொள்ளாமல் உன் கடமையைச்  செவ்வனே செய். உன்னை நினைத்து பெருமைப்படாதே! புகழுக்கு ஆசைப்படாதே. உன் பணி முடிந்ததும் ஒதுங்கிக் கொள். எல்லோரும் நலமுடன் வாழ  துடைப்பம்போல் பாடுபடு’என்பது ஆன்றோர் வாக்கு. அதுபோல் வாராகியும் தன் அடியார்களின் பாவ பீடைகளை எல்லாம், மாயா மல மாசுகளை  எல்லாம் களைந்து அவர்களைத் தூய்மைப்படுத்துகிறாள்.தான் ஈன்ற கன்றினை தன் நாக்கால் நக்கி பசு சுத்தப்படுத்துவதுபோல தன் தாயன்போடு  தன்னை அண்டுவோரின் தோஷங்களை எல்லாம் போக்கிப்  புனிதமாக்கி, பயம், பந்தம், துன்பங்களிலிருந்து மீட்டு, முக்திக்கு அருள் செய்கிறாள் வராஹி. பண்டாசுரனை வதம் செய்ய வேண்டி லலிதா  திரிபுரசுந்தரி நால்வகைப் படைகளுடன் புரிந்த போரில் அனைத்திற்கும் தலைமையேற்றதோடு விஷூக்ரன் எனும் அரக்கனை மாய்த்தவள் இந்த  வாராகி என லலிதோபாக்யானம் இவளை புகழ்கிறது. லலிதா ஸஹஸ்ர நாமத்திலும் ‘விஷூக்ரப் ப்ராணஹரண வாராகி வீர்ய நந்திதா, கிரி சக்ர  ரதாரூட தண்டநாத புரஸ்க்ருதா’ எனும் வரிகள் இவளைக் குறிக்கின்றன.இவள் ஆரோகணித்து வருவது கிரி சக்ர ரதத்தில் என்றும் இவளின் யந்திரம் கிரியந்த்ரம் என்றும் போற்றப்படுகிறது. (கிரி=பன்றி). காட்டுப்  பன்றிகளால் இழுக்கப்படுவதால் அந்த ரதத்திற்கு அப்பெயர். பராபட்டாரிகையான லலிதையின் மனக் குறிப்பறிந்து ரதத்தைச் செலுத்துவதால்  ‘ஸங்கேதா’என இவள் போற்றப்படுகிறாள். வாராகி என்ற பெயரைக் கேட்டதும் பக்தி மட்டுமன்றி பயமும் பலருக்குத் தோன்றுவது இயற்கை.  ஆனால் அச்சத்தை நீக்கி அன்னையாய் அரவணைத்துக் காப்பவள் இத்தேவி என்பதே உண்மை. பயம் நீக்கி ஜெயம் அருள வல்லவள். சண்ட  முண்டாசுரர்களைக் காளி வதம் செய்த பின் சாமுண்டி எனப் பெயர் கொண்டாள். சும்ப நிசும்பர்களுடனும் ரக்த பீஜனுடன் அவள் போரிடும் போதும்  வாராகி துணைக்கு வந்தாள் என்பதை தேவி மகாத்மியம் எட்டாம் அத்தியாயம்‘யக்ஞ வராஹமதுலம்ரூபம் யா பிப்ரதோ ஹரே:சக்தி: ஸாப்யாயயௌ தத்ர வாராஹீம் பிரதீம்தனும்’- என்று சொல்லி விளக்குகிறது. ஹரியின் ஒப்புயர்வற்ற யக்ஞ வராஹ வடிவத்தை எடுத்துக்கொண்ட சக்தி எவளோ, அவளும் அங்கு வாராகி வடிவு  தாங்கி வந்து சேர்ந்தாள் என்கிறது. எனவே வாராகியும் வராஹரும் வேறு வேறு அல்ல என்பது ஊர்ஜிதமாகிறது. வராஹமுகம் எனும் பன்றி முகம்  கொண்ட தேவி வராஹமூர்த்தி பூமியை மீட்க அவதாரம் எடுத்த போது உதவியவள். எந்த விதமான உதவி தெரியுமா? மிருகங்களிலேயே பன்றிக்கு  வானை நோக்கும் சக்தி இல்லை. எந்த நேரமும் பூமியை நோக்கியே அதன் முகம் இருக்கும். ஆனால், பன்றி முகம் கொண்ட வராஹப்  பெருமானுக்கோ பூமியை கடலிலிருந்து மீட்டு தன் மூக்கின் நுனியில் தலையை உயர்த்தி வைக்க வேண்டும் என ஆசை.ஆனால், தான் எடுத்த உருவின் இயல்பை மாற்றமுடியாமல் தவித்தபோது, அந்த உந்துதலுக்கு உதவியவள் வாராகி. இதனாலேயே வாராகி  உந்துதலுக்கு உரிய தெய்வமாகக் கருதப்படுகிறாள். எதை அன்னை உயரத் தூக்கி விட வேண்டும்? செல்வம், புகழ், சமுதாய அந்தஸ்து  போன்றவற்றையா? இல்லை நம் குண்டலினியை உயர்த்த அவள் அருள் வேண்டும். எப்படி ஒரு மாணவனோ மாணவியோ வகுப்பில் முதல்  வகுப்பில் தேறினால் அவர்கள் நன்றாகப் படித்தனர் என்பது மறைபொருளாய் உள்ளதோ அதேபோல் குண்டலினி சக்தியின் உயர்வால் நம் வாழ்வு  தானே உயரும். மூலாதாரத்தில் உள்ள குண்டலினி ஆக்ஞா சக்ரத்திற்குச் செல்ல உந்துதலைத் தருபவள் வாராகி.எனவேதான் அவள் ஆக்ஞாசக்ரேஸ்வரி என போற்றப்படுகிறாள். எழுந்த குண்டலினி மேல் வர தன் கையில் உள்ள தண்டத்தால் தட்டி உயர்த்தவே  அதை கையில் ஏந்தியுள்ளாள். லலிதாம்பிகையின் பிருஷ்ட பாகத்தில் இருந்து தோன்றியவள் இவள். அது மூலாதாரம் இருக்கும் இடம். ஆக  வாராகியின் வடிவமும், அமைப்பும், ஆயுதங்களும் குண்டலினி சக்தியை மேலெழுப்ப உதவும் வண்ணமே உள்ளன. குண்டலினி மேலெழுந்தால்  எண்ணிய எண்ணங்கள் ஈடேறும். வாக்கு பலிதமாகும். எதிரிகள் நண்பர்கள் ஆவர். அன்பால் அனைவரையும் வெல்லலாம். துர்தேவதைகள்  அண்டமுடியாது. கூப்பிட்ட குரலுக்கு ஓடோடி வருபவள் இந்த அன்னை. இவளுக்குரிய காயத்ரி மந்திரங்களுள் ஒன்று:ஓம் ஸ்யாமளாயை வித்மஹே ஹல ஹஸ்தாய தீமஹிதன்னோ வாராகி ப்ரசோதயாத்இந்த மந்திரத்தை துன்பம் வரும் போது மட்டுமல்ல எப்போதும் ஜபித்துக் கொண்டிருந்தால் தேவியின் திருவருள் சடுதியில் கிட்டும்.ஆதி வாராகிநீலநிறம் கொண்டவள், சந்திரன், சூர்யன், அக்னி மூவரையும் மூன்று கண்களாகக் கொண்டவள். தேவர்களாலும், மூவராலும் பணிவிடை  செய்யப்படுபவள், சகல மாத்ருகா தேவதைகளும், சதுஷ்சஷ்டி கோடி பைரவர்களாலும் பாதுகாக்கப்படுபவள். சர்வாலங்கார பூஷிதையாக பக்தர்களின்  நோய்களைத் தீர்க்கும் சாத்திரங்களையும் அஸ்திரங்களையும் ஏந்தி கலப்பை உலக்கையுடன் காட்சி தருபவள். லகுவாராகி எனும் உன்மத்த பைரவி பக்தர்களின் துயரங்களைத் தீர்த்து அவர்களின் பயத்தை நீக்கியருள்பவள். அவர்களின் எதிரிகளின் கொழுப்பை அடக்கி அவரின் அறிவுத்திறனை  உன்மத்தமாக்குபவள்.  வாராகியின் அங்கதேவி. திருமாலின் ஆத்மசக்தியாய் திகழ்ந்து கடலிலிருந்து பூமியை மூக்கின் நுனியில் சுமந்து வந்த  மகாசக்தி. இத்தேவியை மிகப்பெரிய கொம்புகள் கொண்ட சரீரமுடையவளாக தியானிக்க வேண்டும்.பஞ்சமிலலிதா த்ரிபுரசுந்தரியைத் தாங்கும் பஞ்சமூர்த்திகளில் சதாசிவனின் பத்தினி இந்த பஞ்சமி. அவருடன் இணைந்து படைத்தல், காத்தல், அழித்தல்,  மறைத்தல், அருளல் எனும் ஐந்தொழில்களைப் புரிபவள். சாலோக்யம், சாமிப்யம், சாருப்யம், சாயுஞ்யம் மற்றும் கைவல்யம் எனும் ஐந்து மோக்ஷ  நிலைகளில் கடைசியான கைவல்ய நிலையை அருள்பவள் இவளே. பக்தர்களை தந்தையைப் போல் காப்பவள். மனிதனின் எலும்புக்கு அதிதேவதை  இவள். எலும்பு உறுதியாக இருந்தால்தானே அதைச் சுற்றி ரத்தமும் சதையும் நன்றாக நிலைபெறும். ‘பஞ்சமி பஞ்சபூதேசி’ என லலிதா  ஸஹஸ்ரநாமம் இவளைத் துதிக்கிறது. அபிராமி பட்டரோ ‘பஞ்சமி பைரவி பாசாங்குசை’ எனத் தொடங்கும் அபிராமி அந்தாதி பாடலில் இவளைப்  போற்றி மகிழ்ந்தார்.கோர்ட், வழக்கு என அலைந்து கொண்டிருப்பவர்கள் இத்தேவியை வழிபட சிக்கல்கள் தீரும் என்பது நம்பிக்கை. ராஜராஜசோழன் எந்தச் செயலை  மேற்கொண்டாலும் வாராகியை வழிபட்டுத்தான் ஆரம்பிப்பது வழக்கம். வாராகியை வெற்றி தெய்வம் என்றே போற்றினார் அவர். ஐந்து பஞ்சமி  அல்லது ஐந்து ஞாயிற்றுக்கிழமைகளில் தேங்காய் மூடியில் நெய் விளக்கு ஏற்றி வாராகியை வழிபட, கோரிய பலன் கிட்டுவது உறுதி. மகாவாராகி  யந்த்ரம் பெரிய தொழிலகங்களில் நிறுவப்படுமாயின் தொழில் வளம் சிறக்க உதவும். ஒரு நாட்டின் தலைநகரத்தில் மஹாவாராகி யந்த்ரமும்  மூர்த்தமும் நிறுவப்படுவது மிகமிக அவசியம். பிற நாடுகளால் ஏற்படக்கூடிய அச்சுறுத்தல்களையும் இன்னல்களையும் தவிர்க்கும் ஆற்றல் உடையது  கிரி சக்ரம் என்கிற வாராகி யந்த்ரம்.இந்த யந்த்ரம் மிகவும் மனோஹரமானது. பிந்துஸ்தானம், முக்கோணம், ஐங்கோணம், அறுகோணம், எட்டிதழ், நூற்றிதழ், ஆயிரம் இதழ், பூபுரம் என  எட்டு பகுதிகளைக் கொண்டது. ஆயிரம் இதழ்களையும் எட்டு பகுதிகளாகப் பிரித்து ஒவ்வொரு பகுதியிலும் 125 தளங்கள் இருப்பதாக பூஜிப்பவரும்  உண்டு. ஆனால், அது தவறானதாகும். ஆயிரம் இதழ்களிலும் வாராகியின் ஆயிரம் நாமங்கள் கொண்ட ஸஹஸ்ரநாமங்களால் அர்ச்சிக்க வேண்டும்.  அதுவே உண்மையான பூஜையாகும். இத்தேவி ஆரோகணித்து வரும் சிம்மம் வஜ்ரகோஷம் என வணங்கப்படுகிறது. சூழ்நிலைக்கு ஏற்றவாறு இத்தேவி  எருமை மீதும் ஏறி வருவாள். சில சமயங்களில் நாக வாகனத்திலும் அமர்ந்தருள்வாள் என தேவி பாகவதம் கூறுகிறது.இந்த வாராகி குதிரை மீதேறி வரும்போது அஷ்வாரூடா வாராகி என போற்றப்படுகிறாள். குதிரைக்காரி என சித்தர்கள் போற்றும் தேவி இவள்.  ஜனவசியம், ராஜவசியம் போன்றவற்றை அருள்பவள். அரசியலில் வெற்றி பெற இத்தேவி நிச்சயம் அருள்பவள். மகாவாராகி எனும் ஆதிவாராகி,  பிருஹத் வாராகி, லகு வாராகி, பஞ்சமி வாராகி, அஷ்வாரூடா வாராகி, சுத்த வாராகி, தண்டநாதா வாராகி, தும்ர வாராகி, ஸ்வப்ன  வாராகி, வார்த்தாளி என வாராகியின் வடிவங்கள் பலப்பல. உன்மத்த பைரவி, ஸ்வப்னேசி, திரஸ்கரணி, கிரிபதா ஆகியோர் இந்த அம்பிகையின்  பரிவார தேவதைகளாக அருள்கின்றனர்.இந்த தேவியின் நிவேதனத்தில் பூமிக்கு அடியில் விளையும் சர்க்கரை வள்ளிக் கிழங்கு, உருளைக் கிழங்கு போன்றவற்றோடு கட்டாயமாக பூண்டும்  வெங்காயமும் சேர்ந்த பலகாரம் இடம்பெற வேண்டும் என பூஜை முறையில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதைத் தவிர சர்க்கரைப் பொங்கல், வெல்லப்  பாயசம், மிளகு, சீரகம் கலந்த தோசை, தோல் எடுக்காத முழு உளுந்தில் செய்த வடை, எல்லா பருப்புகளும் சேர்ந்த ஆமை வடை, வாசனைப்  பொருட்கள் சேர்த்த எருமைப் பால், எருமைத் தயிர், எள்ளுருண்டை, தயிர் சாதம், மொச்சை சுண்டல் மற்றும் தேனும் இடம் பெற வேண்டும் எனக்  கூறப்பட்டுள்ளது. வெண்தாமரையும் செந்தாமரையும் இந்த அன்னையின் பூஜைக்கு உரியவை. இரவு நேர பூஜையே இந்த தேவிக்கு உரியது.வாராகியைக் குறித்த வாராகி மாலை எனும் தமிழ் துதியும் நிக்ரஹாஷ்டகம், அனுக்ரஹாஷ்டகம் எனும் வடமொழி துதிகளும் புகழ் பெற்றவை.   வழக்குகளிலிருந்து விடுபட இவள் அருள் கட்டாயம் தேவை. ‘வாராகி உபாசனை செய்பவருடன் வாதாடாதே’ என வழக்கு மொழியே உள்ளது. மனம்  ஒருமைப்பட, வாக்குபலிதம் பெற, எதிரிகளிடமிருந்து நம்மைக் காக்க இவள் அருள் உதவும். எலும்பிற்கு அதிதேவதையான இவள் கோபமுற்றால்  வாதமும் பித்தமும் ஏற்படும். மயில் தோகை விசிறியால் விசிறி, பிரார்த்தனை செய்து முறுக்கும் வெள்ளரிக்காயும் நிவேதித்து அன்பர்களுக்கு  விநியோகம் செய்தால் நலம் பெறலாம். ஆடி மாத அமாவாசைக்குப் பின் வரும் ஒன்பது நாட்கள் ஆஷாட நவராத்திரி எனும் பெயரில் வாராகி  நவராத்திரியாக தேவி உபாசகர்களால் கொண்டாடப்படுகிறது.ஒப்பற்ற சக்தியாக உலகத்திற்கு மங்களங் கள் அருளும் வாராகியை பஞ்சமி, தண்டநாதா, ஸங்கேதா, ஸமயேஸ்வரி, ஸமயஸங்கேதா, வாராகி,  போத்ரிணீ, ஷிவா, வார்த்தாலீ, மஹாஸேனா, ஆக்ஞாசக்ரேஸ்வரி, அரிக்னீ போன்ற நாமாக்களைக் கூறி, வழிபட நம் துயர்கள் தூசாய்ப் பறக்கும். பாவனோபநிஷத் குறிப்பிடும்   லலிதையின் தாயாக குறிப்பிடப்படும் குருகுல்லாவிற்கும், தந்தையாக குறிப்பிடும் வாராகிக்கும்  புவனேஸ்வருக்கு  30 கி.மீ. தொலைவில் உள்ள கொரகொரா எனும் சிற்றூரில் தனிக் கோயில் உள்ளது குறிப்பிடத்தக்கது. ஒப்பற்ற தேவியின் பாத கமலங்களைப் பற்றி  நம் பாத கமலங்களை ஒழித்து நிர்மலமான தூயவாழ்வு பெறுவோம்.வாராகி த்யானம்கட்கம் சக்ரம் முஸலமபயம் தக்ஷிணாபிஸ்ஸுதோர்பி:ஸங்கம் கேடம் ஹலமபயவரம் பிப்ரதீம்வாமதோர்பி:ஸிம்ஹாஸீநாமயுகநயநாம் ஸ்யாமளாம்கோலவக்த்ராம்வந்தே தேவீம் ஸகல பலதாம் பஞ்சமீம்மாத்ரு மத்யே.வாராகி காயத்ரிஓம் மஹிஷத்வஜாய வித்மஹே தண்டஹஸ்தாய தீமஹிதன்னோ வாராகி ப்ரசோதயாத்.வாராகி மாலைஇரு குழை கோமளம் தாள் புஷ்பராகம்இரண்டு கண்ணும்குரு மணி நீலம் கை கோமேதக(ம்) நகம்கூர் வயிரம்திருநகை முத்துக்கனிவாய் பவளம் சிறந்தவல்லிமரகத நாமம் திருமேனியும் பச்சைமாணிக்கமே.மந்த்ரம்ஓம் வாராஹ்யை நம:ஓம் ல்ரூம் ஸாம் வாராஹீ கன்யகாயை  நம:தேவி மஹாத்மியத்தில் வாராகிக்ருஹீதோக்ர மஹா சக்ரே தம்ஷ்ட்ரோத்த்ருத் வசுந்தரேவராஹ ரூபிணி சிவே நாராயணீ நமோஸ்துதே.செய்தி: ந. பரணிகுமார்ஓவியம்: ஸி.ஏ.ராமச்சந்திரன்

You may also like

Leave a Comment

6 − 1 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi