வெற்றியை தீர்மானிக்கும் பெண்களின் வாக்கு அதியமான் கோட்டை நகரம் தர்மபுரியில் நகராட்சி தலைவர் இருக்கை யாருக்கு?

* முடங்கிய பணிகள் மீள்வதே முக்கியம் * சாதகமானவர்களை தேர்வு செய்ய ஆர்வம்தர்மபுரி : தர்மபுரியில்  நடக்கும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் நகராட்சி தலைவர் பதவியில் அமரப்போவது யார்? என்ற எதிர்பார்ப்பு மக்களிடம் எழுந்துள்ளது. தகடூர் என்ற அழைக்கப்பட்ட தர்மபுரி, அவ்வைக்கு அதியமான் நெல்லிக்கனி கொடுத்த வரலாற்று சிறப்பு மிக்க நகராகும். சேலத்தில் இருந்து கர்நாடகா, ஆந்திரா மற்றும் வடமாநிலங்களுக்கு செல்ல தர்மபுரி நகரம் ஒரு இணைப்பு பாலமாக உள்ளது. ஆங்கிலேயர் ஆட்சியின் போது, சேலம் மாவட்டத்தின் ஒரு தாலுகாவாக இருந்த தர்மபுரி, கடந்த 2.10.1965 ஆண்டு தனி மாவட்டமாக உருவாக்கப்பட்டது. அப்போது, பேரூராட்சியாக இருந்த  தர்மபுரி, 18 வார்டுகளுடன் மூன்றாம் நிலை நகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டது. பின்னர், 22 வார்டுகளுடன் 1971ம் ஆண்டு 2ம் நிலை நகராட்சியாகவும், 28 வார்டுகளுடன் 1987ம் ஆண்டு முதல்நிலை நகராட்சியாகவும், 33 வார்டுகளுடன் 2008ம் ஆண்டு தேர்வு நிலை நகராட்சியாகவும், 2019ம் ஆண்டு சிறப்பு நிலை நகராட்சியாகவும் தரம் உயர்த்தப்பட்டது. மொத்தமுள்ள 33 வார்டுகளில் 2 வார்டுகள் எஸ்.சி., பிரிவினருக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.தர்மபுரி பேரூராட்சி தலைவர்களாக சீனிவாச முதலியார், சுப்பிரமணி செட்டியார் இருந்துள்ளனர். நகராட்சியாக தரம் உயர்த்தப்பட்ட பின்னர், தர்மபுரி நகரமன்ற தலைவர்களாக வடிவேலன், வடிவேல் கவுண்டர், சிட்டி முருகேசன், எஸ்ஆர் வெற்றிவேல், ஆனந்தகுமாரராஜா, சுமதி ஆகியோர் இருந்துள்ளனர். பொதுப்பிரிவு ஆண்களுக்கான நகர்மன்ற தலைவர் பதவி, 2011ம் ஆண்டு பொது பிரிவு பெண்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டது. அப்போது, சுமதி நகர்மன்ற தலைவராக வெற்றி பெற்றார். தற்போதும், நகர்மன்ற தலைவர் பதவி பெண்களுக்கே ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு தர்மபுரி நகராட்சியில் குடிநீர், கழிவுநீர், தெருவிளக்கு, சாலை உள்ளிட்ட அடிப்படை வசதிகளை சிறப்பாக கையாண்டதற்காக, தமிழக அரசு சிறந்த நகராட்சியாக தேர்வு செய்து, தர்மபுரி நகராட்சிக்கு பரிசு வழங்கியது. 33 வார்டுகள் 11.65 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட இந்த நகராட்சியில், மக்கள் தொகை 68,619 ஆக உள்ளது.மொத்த வாக்காளர்கள் 47,955. இதில், ஆண் வாக்காளர்கள் 23,348, பெண் வாக்காளர்கள் 24,604, இதர வாக்காளர்கள் 3 பேரும் உள்ளனர். பெண் வாக்காளர்கள் 1,256 பேர் அதிகம் உள்ளனர்.பல ஆண்டுகளுக்கு பிறகு தற்போது நகராட்சிக்கு நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடக்கிறது. 33 வார்டு கவுன்சிலர் பதவிகளுக்கு திமுக, அதிமுக, பாமக, பாஜக, நாம்தமிழர் கட்சி, தேமுதிக, மநீம மற்றும் சுயேட்சை வேட்பாளர்கள் 172 பேர் களத்தில் உள்ளனர். தர்மபுரி நகராட்சியில் பெண் வாக்காளர்களே அதிகம் உள்ளதால், பெண்களின் வாக்குகளை அதிகளவில் பெறும் வேட்பாளர்களே வெற்றி பெறுவார்கள். பெண் தலைவர் தேர்வு செய்யப்படுவதாலும், பெண்களுக்கான திட்டங்கள், அடிப்படை வசதிகள் செய்து தருவதாக கூறி வேட்பாளர்கள் தீவிரமாக வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளனர்.இவர்களில் கவுன்சிலர்களாக மக்கள் தேர்வு செய்யப்போகும் வேட்பாளர்கள் யார்? அந்த கவுன்சிலர்கள் மூலம் தலைவராக தேர்ந்தெடுக்கப்படுபவர் யார்? என்பது நகர மக்களிடம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில், ‘வளர்ந்து வரும் நகரமான தர்மபுரியில், சொல்லும்படி தொழில்வளம் இல்லை. வணிக நிறுவனங்கள் அதிகம் உள்ளன. 2 பஸ் ஸ்டாண்டுகள் உள்ளது. தேசியமயமாக்கப்பட்ட அனைத்து வங்கிகளும், நகைக்கடைகளும் உள்ளதால், பண பரிவர்த்தனை அதிகம் உள்ளது. கடந்த 10 ஆண்டுகளில் தொலைநோக்கு பார்வையுடன் கூடிய எந்த திட்டங்களும் செயல்படுத்தவில்லை. நகரின் மையப்பகுதியில் மிகவும் குறுகலான சாலைகள் உள்ளன.திமுக தேர்தல் அறிக்கையில் கூறியபடி தர்மபுரி புறநகர் மற்றும் நகர பஸ் நிலையத்தை நவீனப்படுத்த வேண்டும். நகர எல்லையை விரிவாக்கம் செய்ய 8 ஊராட்சிகளை இணைக்க வேண்டும். ரிங்ரோடு அமைக்க வேண்டும். சாலையில் ஆக்கிரமித்து நிறுத்தப்படும் வாகனங்கள் அகற்றப்பட வேண்டும். மக்கள் நடந்து செல்ல நடைமேடை அமைக்க வேண்டும்.தக்காளி மார்க்கெட்டை நவீனப்படுத்த வேண்டும். இவை அனைத்தும் இவர்களால் மட்டுமே சாத்தியப்படும் என்று நாங்கள் நம்பும் வேட்பாளருக்கு வாக்களிக்க காத்திருக்கிறோம்.இவர்களில் ஒருவர் தலைவராகவும், துணைத்தலைவராகவும் பொறுப்பேற்று திறம்பட செயல்படுவார்கள் என்று நம்புகிறோம்,’’  என்றனர்.கலைஞர் கொண்டு வந்த பஞ்சப்பள்ளி குடிநீர் திட்டம்தர்மபுரி நகராட்சியில் குடிநீர் தட்டுப்பாடு கடுமையாக இருந்தது. திமுக ஆட்சியில் அப்போதைய நகரமன்ற தலைவர் தவே.வடிவேலன், அப்போதைய தமிழக முதல்வர் கருணாநிதியிடம் தெரிவித்து 50 கிமீ தொலைவில் உள்ள பஞ்சப்பள்ளி சின்னாறு அணையில் இருந்து, பஞ்சப்பள்ளி குடிநீர் திட்டத்தை தர்மபுரி நகரத்திற்கு கொண்டு வந்தார். தற்போதும் பஞ்சப்பள்ளி குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. அதன் பிறகு நகரமன்ற தலைவர் பதவியை திமுகவினரே கைப்பற்றி வருகின்றனர். அதே சமயம், தர்மபுரி நகராட்சியில் இதுவரை தலைவர்களாக இருந்தவர்கள், அரசியலில் செல்வாக்கு மிக்கவர்களாக பிரகாசிக்க முடியாமல், செல்வாக்கு சரிந்தவர்களாகவே இருந்துள்ளனர் என்பதும் விநோதமான ஒன்றாக உள்ளது….

Related posts

தமிழ்நாட்டில் 12 இடங்களில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனை!

கீழ் மட்டம் முதல் மேல் மட்டம் வரை ஊழல்; புதுச்சேரியில் முதல்வர் ரங்கசாமிக்கு எதிராக பாஜ எம்எல்ஏக்கள் கவர்னரிடம் திடீர் புகார்

வெள்ளக்காடாக மாறிய குடியிருப்புகள் ; பந்தலூரில் ஒரே நாளில் 27.8 செ.மீ மழை: சாலைகள் துண்டிப்பு, மண் சரிவு; முகாமில் மக்கள்