வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தின் பல இடங்களில் வெளுத்து வாங்கிய கோடை மழை!: சூடு தணிந்து மக்கள் மகிழ்ச்சி..!!

சென்னை: வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தின் பல்வேறு இடங்களில் பெய்த கோடை மழையால் பொதுமக்களும், விவசாயிகளும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். அக்னி நட்சத்திரம் எனப்படும் கத்திரி வெயில் தொடங்கிய நாள் முதல் தமிழகம் முழுவதும் கோடை வெயில் சுட்டெரித்து வருகிறது. இந்நிலையில், வெப்பச்சலனம் காரணமாக கடந்த சில நாட்களாக தமிழகத்தின் பல்வேறு இடங்களில் பரவலாக கோடை மழை  பெய்து வருகிறது. தூத்துக்குடியில் காலையில் வெயில் சுட்டெரித்து நிலையில், மாலையில் நகரின் பல்வேறு இடங்களில் பலத்த காற்றுடன் மழை பெய்தது. 
இதனால் அங்கு வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் நிலவியது. திருச்சி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் 1 மணி நேரத்திற்கும் மேலாக கனமழை பெய்தது. திருச்சி விமான நிலையம், உறையூர், ஸ்ரீரங்கம், லால்குடி உள்ளிட்ட இடங்களில் மழை கொட்டி தீர்த்தது. மதுரை மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் பரவலாக மழை பெய்தது. திருமங்கலம், அவனியாபுரம் உள்ளிட்ட இடங்களிலும் மழை பெய்தது. பெரியகுளம்  திண்டுக்கல் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் 1 மணி நேரம் மழை கொட்டியது. நத்தம், சாணார்பட்டி, செம்பட்டி, சின்னாளப்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் பெய்த மழையால் பொதுமக்களும், விவசாயிகளும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். 
இதேபோல், சேலம் மாவட்டம் வாழப்பாடி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் இடி, மின்னலுடன் மழை பெய்தது. பொன்னாலம்பட்டி, முத்தம்பட்டி உள்ளிட்ட இடங்களில் சூறை காற்றுடன் மழை பெய்ததால் வீட்டின் மேற்கூரைகள் சரிந்தன. இதனிடையே ஜூன் மாத தொடக்கத்தில் தொடங்கும் என எதிர்பார்க்கப்பட்ட தென்மேற்கு பருவமழை, நாளை அந்தமான் மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் தொடங்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் இம்மாத இறுதியில் தென்மேற்கு பருவமழைக்கு வாய்ப்பிருப்பதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Related posts

போன மாதம் கிரிக்கெட் ஸ்டேடியம்; இந்த மாதம் ஹாக்கி ஸ்டேடியம்; விரைவில் பணிகள் துவக்கம்

ஒன்றிய அரசின் சுற்றுலாத்துறை சார்பில் சிறந்த பாரம்பரிய சுற்றுலா தலமாக கீழடி தேர்வு: முதல்வர் மு.க.ஸ்டாலின் எக்ஸ்தள பதிவு

ராணிப்பேட்டை சிப்காட் வளாகத்தில் ரூ.9000 கோடியில் டாடா கார் தொழிற்சாலை: முதல்வர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்; 5,000 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும்