வெண்டிபாளையம் காவிரி ஆற்றில் ஆகாய தாமரையை அகற்ற கோரிக்கை

 

ஈரோடு, ஜூன் 3: காவிரி ஆற்றின் குறுக்கே உள்ள ஈரோடு, வெண்டிபாளையம் கதவணை மின் நிலைய நீர்த்தேக்கப் பகுதியில் படர்ந்துள்ள ஆகாயத் தாமரைகளை அகற்ற கோரிக்கை எழுந்துள்ளது. ஈரோடு வெண்டிபாளையம் பகுதியில் உள்ள காவிரி ஆற்றின் குறுக்கே கதவனை மின் நிலையம் உள்ளது. தற்போது, ஆற்றில் போதுமான தண்ணீர் வரத்து இல்லாத்தால் மின் உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளது.

இந்த சமயத்தில் அணையின் இரும்பு கதவுகள் மேலே ஏற்றப்பட்டு பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவது வழக்கம். தற்போது, பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்ட நிலையில், இரும்புக் கதவுகள் கீழே இறக்கப்பட்டு, ஆற்றில் வரும் குறைந்த அளவு தண்ணீர் தேக்கப்பட்டு வருகிறது. ஒரு கதவில் மட்டும் சொற்ப அளவிலான தண்ணீர் ஆற்றில் திறந்து விடப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், கதவணையால் ஆற்றில் தேங்கி நிற்கும் தண்ணீர் முழுவதும், கண்ணுக்கெட்டிய தூரம் வரை ஆகாயத் தாமரைகள் படர்ந்துள்ளன. இந்த ஆகாயத் தாமரைகள் நீரை விரைவாக உறிஞ்சி ஆவியாக்கி விடும் தன்மை கொண்டவை என்பதால் தேங்கியுள்ள தண்ணீர் பெருமளவில் ஆவியாகி வீணாகி வருகிறது.

இதானால் மீன் உற்பத்தி முதற்கொண்டு பல்வேறு பாதிப்புகள் ஏற்பட்டு வருகின்றன. மேலும், அதிகப்படியான ஆகாயத் தாமரை செடிகளால் கடும் துர் நாற்றமும் வீசுகிறது. எனவே, வெண்டிபாளையம் காவிரி ஆற்றில் படர்ந்துள்ள ஆகாய தாமரைகளை அகற்ற மாவட்ட நிர்வாகமும், பொதுப்பணித் துறையும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related posts

சீர் மரபினர் நல வாரியம் உறுப்பினராக சேர விண்ணப்பங்கள் வரவேற்பு

புகையிலை பொருட்களை கடத்தியவர் கைது

முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு திசையன்விளையில் மின்னொளி கைப்பந்து போட்டி