வெடி மூலப்பொருள் கிடப்பதாக பீதி

 

வேடசந்தூர், ஆக. 18: வேடசந்தூரில் நான்கு வழிச்சாலையில் வீசப்பட்ட சாக்கு மூட்டைகளில் இருந்த மண் கலவையை வெடி மூலப்பொருள் என நினைத்து மக்கள் பீதியடைந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.வேடசந்தூர் அய்யனார் நகர் பகுதி, கரூர்- திண்டுக்கல் நான்கு வழிச்சாலையில் நேற்று மாலை ஏராளமான பிளாஸ்டிக் சாக்கு முட்டைகள் வீசப்பட்டிருந்தன. அவ்வழியாக டூவீலர்களில் சென்றவர்கள் பார்த்த போது மூட்டைகளில் மர்மமான மண் போன்ற கலவை பொருள் இருந்துள்ளது. மேலும் இது வெடிகள் தயாரிக்கப்படும் மூலப்பொருட்களோ என அப்பகுதியினர் பீதியடைந்தனர்.

இதுகுறித்து அனைத்து சமூக வலைதளங்களிலும் வேகமாக செய்தி பரவியது. தகவலறிந்ததும் வேடசந்தூர் எஸ்ஐ அங்கமுத்து தலைமையிலான போலீசார் அங்கு விரைந்து சென்று மூட்டைகளை திறந்து பார்த்தனர். அப்போது அதில் இருப்பது என்ன என்பது குறித்து பார்வையிட்டனர். சாலை பணி மற்றும் மறுசுழற்சி செய்வதற்கு தேவையான மூலப்பொருளான தெர்மோ பிளாஸ்டிக் கலவை இருப்பது தெரியவந்தது. இதனை சாலையோரத்தில் வீசி சென்றது யார்? எதற்காக இங்கு வீசி சென்றார்கள் என்பது குறித்து விசாரணை செய்து வருகின்றனர். மேலும் இதுபோல் பொதுமக்களை அச்சுறுத்தும் தவறான செய்திகளை பரப்பும் நபர்கள் யாராக இருந்தாலும் சட்டரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் தெரிவித்தனர்.

Related posts

நாகப்பட்டினம் மாவட்ட ஓய்வுபெற்ற அலுவலர்கள் சங்க செயற்குழு கூட்டம்

பவளவிழாவையொட்டி தலைஞாயிறு பேரூர் பகுதியில் திமுக கொடியேற்றம்

முனையனூரில் மகளிர் குழுவினருக்கு புத்தாக்க பயிற்சி