வீதிகளில் வீசப்பட்ட நாய்க் குட்டிகளை தத்தெடுத்த பிரெஞ்சு பள்ளி மாணவர்கள்

புதுச்சேரி, டிச. 13: வீதிகளில் வீசப்பட்ட நாய்க் குட்டிகளை தத்தெடுத்த பிரெஞ்சு பள்ளி மாணவர்களை விலங்கு நல அமைப்பினர் ஊக்கப் பரிசுகளை வழங்கியும் கவுரவித்தனர். புதுச்சேரியில் கடந்த சில வாரங்களாக வீதிகளில் சுற்றித்திரிந்த தெருநாய்கள் பொதுமக்களை கடித்து குதறின. லாஸ்பேட்டை, ரெட்டியார்பாளையம் என முக்கிய பகுதிகளில் சிறுவர் முதல் பெரியவர்கள் வரை 30க்கும் மேற்பட்டோர் நாய்கள் கடித்து அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றனர். இதையடுத்து தெருநாய்களை நகராட்சி நிர்வாகம், கால்நடைத்துறையுடன் இணைந்து பிடித்தது. இதனால் தாய் நாய் பிடிக்கப்பட்டதால் அனாதையாக சாலையோரம் நாய்குட்டிகள் கிடந்த நிலையில், அவற்றை பாதுகாக்கும் நோக்கில் தன்னார்வ விலங்கு நல அமைப்பினர் களமிறங்கினர்.

”வீதியில் இருந்து வீட்டிற்கு” என்ற நோக்குடன் நாய்க் குட்டிகளை தத்து கொடுக்கும் நிகழ்வை புதுச்சேரி பிரெஞ்சு பள்ளியான லிசே பிரான்சிஸ் வளாகத்தில் நடத்தியது. இதில் தத்து கொடுக்க எடுத்துவரப்பட்ட நாய்கள் மட்டுமின்றி பூனைக் குட்டிகளும் கூண்டுகளில் அடைத்து பாதுகாப்பாக வைக்கப்பட்டிருந்தன. மனிதர்களால் அனாதையாக தூக்கி வீதிகளில் வீசப்பட்டு கிடந்த செல்லப் பிராணிகளை மாணவர்கள் அன்புடன் அள்ளிதூக்கி கொஞ்சினர். பின்னர் மாணவர்கள், தங்களது பெற்றோருடன் சேர்ந்து அவர்களுக்கு தேவையான செல்லப் பிராணிகளை தத்து எடுத்து வீட்டிற்கு அழைத்துச் சென்றனர். தத்து கொடுக்கப்பட்ட அனைத்து விலங்குகளுக்கும் தடுப்பூசி போடப்பட்டது. மேலும் குட்டிகளை தத்து எடுத்தவர்களுக்கு தன்னார்வ விலங்கு நல அமைப்பினர் ஊக்கப் பரிசுகளை வழங்கியும் கவுரவித்தனர்.

Related posts

ஆசிரியர்கள் கலந்தாய்வுக்கு எதிராக நடத்தும் போராட்டத்தில் பங்கேற்க மாட்டோம் பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு அறிவிப்பு

கஞ்சா விற்றவர் கைது

முப்பெரும் சட்டங்களை அமல்படுத்த எதிர்ப்பு திருச்சியில் வக்கீல்கள் ஆர்ப்பாட்டம்