வீணாக போகிறது 2,400 ஏக்கர் நீர் பொக்கிஷம் பராமரிப்பு இல்லாமல் பாழாகி கிடக்கும் பனமரத்துப்பட்டி ஏரி

*நீர்வளஆர்வலர்கள் வேதனை
* முட்புதராக மாறிய அவலம்

சேலம் : சேலத்தில் 2,400 ஏக்கர் பரப்பளவு கொண்ட பனமரத்துப்பட்டி ஏரியில் லட்சக்கணக்கான லிட்டர் நீரை தேக்குவதற்கு வாய்ப்பிருந்தும் பராமரிப்பு இல்லாததால் பாழாகி கிடக்கிறது. இது நீர்வள ஆர்வலர்கள் மத்தியில் பெரும்  வேதனையை ஏற்படுத்தி உள்ளது. சேலத்தில் பிரசித்தி பெற்ற ஜருகுமலை அடிவாரத்தில் இருக்கிறது பனமரத்துப்பட்டி. சில ஆண்டுகளுக்கு முன்பு பனமரத்துப்பட்டி என்ற பெயரில் சட்டமன்றத் தொகுதியும் இருந்தது. தொகுதி மறுசீரமைப்பில் தற்போது இது, வீரபாண்டி தொகுதியுடன் இணைக்கப்பட்டுள்ளது. ஒரு காலத்தில் பனமரத்துப்பட்டியின் பிரதான அடையாளமாக திகழ்ந்தது 2,400 ஏக்கர் பரப்பளவு கொண்ட பரந்து விரிந்த ஏரி. வரட்டாறு, கூட்டாறு, ஜருகுமலை காப்புகாடு பகுதிகளில் இருந்து ஏரிக்கு நீர் வந்து கொண்டிருந்தது. ஏரியின் நீர்ப்பிடிப்பு பகுதி மட்டும் 356.45ஏக்கர். ஆழம் 306 மீட்டராகவும், கரையின் நீளம் 1,248 மீட்டராகவும் இருந்தது. இயற்கை எழில் சூழ்ந்த இந்த ஏரி, சிறந்த படப்பிடிப்பு தலமாகவும் திகழ்ந்தது. 1911ல் ஆங்கிலேயர்கள் இந்த ஏரி நீரை சுத்திகரித்து சேலம் மாநகர், மல்லூர், பனமரத்துப்பட்டி பேரூராட்சிகளுக்கு குடிநீர் விநியோகம் செய்தனர். இன்றைய மேட்டூர் தனிக்குடி நீர் திட்டம் துவங்குவதற்கு முன்பு, சேலம் மாநகர மக்களின் தாகம் தீர்த்த பெருமைக்குரியது பனமரத்துப்பட்டி ஏரி. கடந்த சில ஆண்டுகளாக போதிய பராமரிப்பு இல்லாததால் சீமைக்கருவேல மரங்கள் முளைத்து முட்புதராக காட்சியளிக்கிறது. நடப்பாண்டு பெய்த மழையிலும் இந்த கருவேலம்காட்டில் தண்ணீர்  தேங்கி நிற்கிறது. ஆனாலும் இதனால் எந்த பயனும் இல்லை. இப்படி லட்சக்கணக்கான லிட்டரில் தண்ணீரை சேமிக்க வாய்ப்பிருக்கும் பெரும் ஏரி, பராமரிப்பு இல்லாமல் பாழாகி வருவது நீர்வள ஆர்வலர்கள் மத்தியில் பெருத்த வேதனையை ஏற்படுத்தி உள்ளது. இது குறித்து மூத்த நீர்வள ஆர்வலர்கள் கூறியதாவது: பனமரத்துப்பட்டி பேரூராட்சியில் இருக்கும் இந்த ஏரியானது, இன்று வரை சேலம் மாநகராட்சியின் கட்டுப்பாட்டில் உள்ளது. 1924ம் ஆண்டு வாக்கில் சேலம் நகருக்கு மேட்டூர் கூட்டுக்குடி நீர் திட்டம் செயல்படுத்தப்பட்டது. அப்போதிருந்து இந்த ஏரியின் பராமரிப்பு பணிகள் மந்தமானது. இதை தனக்கு சாதகமாக பயன்படுத்திய சிலர், ஏரிக்கு நீர்வரும் வழித்தடங்களை ஆக்கிரமித்தனர். 2005ம் ஆண்டு வாக்கில் இந்த ஆக்கிரமிப்புகள் அனைத்தும் அதிரடியாக அகற்றப்பட்டது. இதையடுத்து ஏரியை தூய்மைப்படுத்தி சுற்றுலா தலமாக மாற்றும் முயற்சிகளும் நடந்தது. இப்படிப்பட்ட சூழலில் 2009ம் ஆண்டு முதல் தொடர்ச்சியாக மழை பொய்த்து போனது. பல்வேறு அரசியல் தலையீடுகளும் அரங்கேறியதால் ஏரியின் புரனமைக்கும் திட்டங்கள் அனைத்தும் கிடப்பில் போடப்பட்டுள்ளது. இதனால் பரந்து விரிந்த பனமரத்துப்பட்டி ஏரி, இப்போது சீமைக்கருவேல மரங்கள் முளைத்து முட்புதராய் மாறி , பாழாகி கிடக்கிறது. இதை ₹50 கோடி செலவில் அகற்றும் பணிகளுக்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு கூட, அதிகாரிகள் இங்கு வந்து ஆய்வு செய்தனர். ஒரு காலத்தில் சேலத்து மக்களின் தாகம் தீர்த்த இந்த ஏரியை, கண்டும் காணாமல் இருப்பது வேதனைக்குரியது. அரசும், அதிகாரிகளும் இதற்கான சீரமைப்பு பணிகளை மேற்கொள்ள துரித கதியில் நடவடிக்கை எடுக்க வேண்டும். இதனால் பாழாகும் ஒரு அரிய நீர் பொக்கிஷம் நமக்கு என்றென்றும் நிலைத்திருக்கும்.இவ்வாறு நீர்வள ஆர்வலர்கள் கூறினர்.இது குறித்து அதிகாரிகளிடம் கேட்டபோது, ‘‘பனமரத்துப்பட்டியை சீரமைத்து மேம்படுத்துவதற்கான முயற்சிகள் அனைத்தும் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதில் முதற்கட்டமாக ஏரியில் முளைத்துள்ள சீமைக்கருவேல மரங்களை அகற்றுவதற்கான டெண்டர் விடும் முயற்சிகள் எடுக்கப்பட்டது. இதற்கு போதிய ஒப்பந்தபுள்ளிகள் வரவில்லை. இதற்கிடையில் நிலவிய பல்வேறு சூழல்களால் சில, நடவடிக்கைகள் மந்தமானது. புதிய அரசு நீர்நிலைகளை காக்கும் பணியில் மிகுந்த அக்கரையோடு செயல்பட்டு வருகிறது. இதனால் விரைவில் இந்த ஏரி, புத்துயிர்  பெறும்,’’ என்றனர்….

Related posts

ஆருயிர் – அனைவரும் உயிர் காப்போம் திட்டத்தை இன்று தொடங்கி வைக்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்..!!

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் சரணடைந்த ஆற்காடு சுரேஷின் தம்பி வாக்குமூலம்..!!

கஞ்சா விற்றதாக வாலிபரை கைது செய்ய சென்ற போலீசாருடன் குடும்பத்தினர் மல்லுக்கட்டு