வீட்டை எழுதி தரும்படி கூறி சித்ரவதை செய்யும் 4 மகள்கள்: கலெக்டரிடம் கண்ணீர் மல்க மூதாட்டி புகார்

வேலூர், டிச.19: வீட்டை எழுதி தரும்படி தன்னை 4 மகள்கள் அடித்து சித்ரவதை செய்வதாக, கலெக்டர் அலுவலகத்தில் நடந்த மக்கள் குறைதீர்வு கூட்டத்தில் கலெக்டரிடம் மூதாட்டி கண்ணீர் மல்க புகார் மனு அளித்தார். வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்வு கூட்டம் கலெக்டர் குமாரவேல்பாண்டியன் தலைமையில் நேற்று நடந்தது. திட்ட இயக்குனர் ஆர்த்தி உள்ளிட்ட பல்வேறு துறை அதிகாரிகள் கலந்து கொண்டு பொதுமக்களிடம் இருந்து மனுக்களை பெற்றனர்.

கூட்டத்தில், அகில பாரத இந்து மகாசபா மாவட்ட தலைவர் சீனிவாசன் அளித்த மனுவில், ‘கடந்த 4 ஆண்டுகளாக பள்ளிக்குப்பம் அடுத்த கசம் பகுதியில் ஆஞ்சநேயர் கோயில் உள்ளது. இங்கு 365 ஏக்கர் நிலம் நீதிமன்றத்தால் மீட்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கசம் பகுதி தனியார் அமைப்பை சேர்ந்த 2 பேர், கிறிஸ்துமஸ் தினத்தன்று என்னை துண்டு, துண்டாக வெட்டி கோயில் எதிரே வீசுவதாக மிரட்டுகின்றனர். எனவே உயிருக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும்’ என தெரிவித்துள்ளார். பேரணாம்பட்டு அடுத்த மேல்பட்டியை சேர்ந்த தனலட்சுமி(75) என்பவர் அளித்த மனுவில், ‘எனது கணவர் எத்துராஜிலு, எங்களுக்கு 5 மகள்கள் உள்ளனர். அனைவருக்கும் திருமணமாகி விட்டது. எங்களது நிலத்தை விற்றுதான் மகள்களுக்கு திருமணம் செய்து வைத்தேன். எனது கணவர் கடந்த 2005ம் ஆண்டு இறந்து விட்டார். இதனால் நான் சிறிய வீட்டில் தனியாக வசித்து வருகிறேன். இந்நிலையில் எனது மகள்களில் 4 பேர் நான் குடியிருக்கும் வீட்டை எழுதி கொடுக்கும்படி என்னை அடித்து சித்ரவதை செய்கின்றனர். ஒரு மகள் கல்லை தூக்கி போட்டு கொலை செய்வேன் என மிரட்டி வருகிறார். இதற்கு விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும்’ என தெரிவித்தார்.

கே.வி.குப்பம் அடுத்த சென்றாம்பள்ளியை சேர்ந்த கோவிந்தன்(65) என்பவர் அளித்த மனுவில், ‘எனது மகனும், மருமகளும் என்னையும், எனது மனைவியையும், வீட்டை விட்டு வெளியே துரத்திவிட்டனர். கேட்டால் தகாத வார்த்தையால் திட்டுகின்றனர். எனவே எங்களுக்கு பாதுகாப்பு வழங்கவேண்டும்’ என தெரிவித்தார்.
வேலூர் சத்துவாச்சாரியை சேர்ந்த தாமோதரன்(94) என்பவர் அளித்த மனுவில், ‘எனக்கு சொந்தமான இடம் தோட்டப்பாளையம் எட்டியம்மன் கோயில் தெருவில் உள்ளது. அந்த இடத்திற்கு பழைய சர்வே எண் உள்ளதால் புதிதாக, டவுன் சர்வே எண் கேட்டு 5 ஆண்டுகளாக மனு அளித்து வருகிறேன். ஆர்டிஓ இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை. இந்த சொத்தை நான் அனுபவிக்க முடியாமல் இறந்து விடுவேன் போல் உள்ளது. எனவே எனக்கு புதிய சர்வே எண் வழங்க வேண்டும்’ என தெரிவித்தனர்.

வேலூர் மாவட்டத்தை சேர்ந்த கொசு ஒழிப்பு பணியாளர்கள் அளித்த மனுவில், ‘கடந்த 14 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறோம். தினக்கூலியாக ₹281 வழங்கப்படுகிறது. பலமுறை மனு அளித்தும் ஊதிய உயர்வு வழங்கவில்லை. மற்ற மாவட்டங்களில் எங்களை விட அதிக கூலி வழங்கி வருகின்றனர். கடந்த மாதம் 6ம் தேதியும் மனு அளித்தோம். ஆனால் இதுவரை கூலியை உயர்த்தவில்லை. எனவே கூலியை உயர்த்தி வழங்க வேண்டும்’ என தெரிவித்துள்ளனர்.
மாற்றுத்திறனாளிகள் சார்பில் அளித்த மனுவில், ‘கோட்டை சுற்றுச்சாலையில் உள்ள பார்வையற்றோர் பள்ளியில், பார்வையற்றோருக்கான தொழில் பயிற்சி ைமயம், கணினி வகுப்பு தொடங்கி வைத்தனர். ஆனால் அந்த மையத்தில் அங்கேயே தங்கி பயிற்சி பெறும் வகையில் அனுமதி வழங்கவேண்டும்’ என தெரிவித்துள்ளனர்.

Related posts

கரூர் வேளாண்.கூட்டுறவு விற்பனை சங்கத்தில் ராகி மாவு அரைக்கும் இயந்திரம் திறப்பு

கரூர் மாநகராட்சி பகுதிகளில் சின்டெக்ஸ் டேங்குகளை சீரமைக்க வேண்டும்

முக்கணாங்குறிச்சி செல்லும் சாலையில் கூடுதலாக வேகத்தடை அமைக்க கோரிக்கை