வீட்டு வசதி வாரிய குடியிருப்பில் கொரோனா வார்டு அமைக்க மக்கள் எதிர்ப்பு: ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்

அம்பத்தூர்: அம்பத்தூர் அடுத்த அத்திப்பட்டு வீட்டு வசதி வாரிய குடியிருப்பில் காலியாக உள்ள வீடுகளில் கொரோனா வார்டு அமைக்க பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. அம்பத்தூர் அடுத்த அத்திப்பட்டு கலைவாணர் நகரில் தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்பு உள்ளது. 19 மாடிகள் மற்றும் 11 பிளாக்குகள் கொண்ட இந்த குடியிருப்பில் 2,394 வீடுகள் உள்ளன. மொத்தம் உள்ள 11 பிளாக்குகளில் 5  பிளாக்குகளில் உள்ள வீடுகளை வீட்டு வசதி வாரியம் விற்பனை செய்து உள்ளது. இந்த பிளாக்குகளில் 822 பேர் வசிக்கின்றனர். இவர்கள் அனைவரும், கடந்த செப்டம்பர் மாதம் தான் குடிபுகுந்தனர். இங்கு, மீதி 6 பிளாக்குகள் காலியாக உள்ளன. இந்நிலையில், கடந்த 21ம் தேதி வீட்டு வசதி வாரிய அதிகாரிகள், இந்த குடியிருப்பு பகுதிக்கு வந்து, ‘இங்கு காலியாக உள்ள 6  பிளாக்குகள் சென்னை மாநகராட்சி நிர்வாகத்திடம் வாடகைக்கு ஒப்படைக்கப்பட்டுள்ளன. அதில், கொரோனா தொற்று நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க வார்டுகள் அமைக்கப்பட உள்ளது,’ என குடியிருப்புவாசிகளிடம் கூறியுள்ளனர். இதனை கேட்டு அதிர்ச்சியடைந்த குடியிருப்புவாசிகள், மக்கள் வசிக்கும் பகுதியில் கொரோனா வார்டு அமைக்க எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதனையடுத்து, அதிகாரிகள் அங்கிருந்து சென்று விட்டனர். இந்நிலையில், நேற்று முன்தினம், நேற்று  ஆகிய 2 நாட்களில் ஆம்புலன்ஸ்களில் தொற்று பாதித்த 25 நோயாளிகள் இங்கு அழைத்து வரப்பட்டு, காலியாக உள்ள வீடுகளில் தங்க வைத்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதனை அறிந்த வீட்டுவசதி வாரிய குடியிருப்பில் வசிக்கும் 100க்கும் மேற்பட்டோர் நேற்று காலை 11 மணியளவில் குடியிருப்பு நுழைவாயில் முன்பு திரண்டு, கொரோனா வார்டுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனால்,  அங்கு பரபரப்பு ஏற்பட்டது. தகவலறிந்து அம்பத்தூர் போலீஸ் உதவி கமிஷனர் கனகராஜ், அம்பத்தூர் தொழிற்பேட்டை இன்ஸ்பெக்டர் பரணிதரன் ஆகியோர் தலைமையில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து, போராட்டத்தில் ஈடுபட்ட குடியிருப்புவாசிகளிடம்  பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, குடியிருப்போர் சங்கத்தின் நிர்வாகிகள், ‘காலியாக உள்ள பிளாக்கில் உள்ள வீடுகளில் 6,600 படுக்கையுடன் கூடிய கொரோனா வார்டுகளை அமைக்க அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.தற்போது, 25க்கும் மேற்பட்ட நோயாளிகள் தங்க வைக்கப்பட்டு சிகிச்சை அளித்து வருகின்றனர். இதனால், எங்கள் குடும்பத்தினருக்கு நோய் தொற்று அச்சம் ஏற்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி காஸ், பால், செய்தித்தாள், குடிநீர் சப்ளை செய்பவர்கள், எங்கள் குடியிருப்புக்கு வர மறுக்கின்றனர். எனவே, நாங்கள் எங்கள் வீட்டை திரும்ப ஒப்படைக்கிறோம். எங்களுக்கு வேறு இடத்தில் வீடு கொடுங்கள். இல்லாவிட்டால்,  எங்கள் பணத்தை திரும்ப தாருங்கள்,’ என்றனர். இதனையடுத்து, போலீசார் வீட்டுவசதி வாரிய அதிகாரிகளை தொடர்பு கொண்டு பேச முயன்றனர். ஆனால், அவர்கள் யாரும் செல்போன் அழைப்பை எடுக்கல்லை. மேலும், குடியிருப்போர் அனைவரும் அங்குள்ள வீட்டு வசதி வாரிய  அலுவலகத்திற்கு புகார் மனு கொடுக்க சென்றனர். அப்போது, இவர்கள் வருவதை அறிந்த அதிகாரிகள் அலுவலகத்தை பூட்டி விட்டு அங்கிருந்து ஓட்டம் பிடித்தார். இதனால், குடியிருப்போர் ஆத்திரமடைந்து மீண்டும் போராட்டத்தில் ஈடுபட முயன்றனர். அவர்களை போலீசார்  சமாதானப்படுத்தினர். அப்போது, அவர்கள் எங்களது பிரச்னைக்கு உரிய தீர்வு கிடைக்காவிட்டால், உண்ணாவிரத போராட்டத்தில்  ஈடுப்படுவோம், என எச்சரிக்கை விடுத்தனர். பின்னர், குடியிருப்போர் 3 மணிநேர போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்….

Related posts

நங்கநல்லூரில் 2 திரையரங்கிற்கு சீல்

வடகிழக்கு பருவமழையை முன்னிட்டு கழிவுநீர் கால்வாயை தூர்வாரும் பணி 4,100 கி.மீ. தூரம் நிறைவு: குடிநீர் வாரிய மேலாண்மை இயக்குனர் தகவல்

மாடம்பாக்கத்தில் அடிப்படை வசதி கோரி அதிமுக 26ம் தேதி ஆர்ப்பாட்டம்: எடப்பாடி அறிவிப்பு