வீட்டுக்காக பெற்றோர் தொடர் தர்ணாவிஷம் குடித்து மகன் தற்கொலை முயற்சி

காலாப்பட்டு, ஏப். 5: புதுவை காலாப்பட்டு அருகேவுள்ள தமிழகப் பகுதியான கோட்டக்குப்பம் அடுத்த மாத்தூரை சேர்ந்தவர் விவசாயி மாரிமுத்து (69). இவரது முதல் மனைவி இறந்த நிலையில், மனைவியின் தங்கையான லட்சுமியை 2வது திருமணம் செய்து கொண்டார். முதல் மனைவிக்கு கோவிந்தராஜ் (42), வெங்கடேஷ் (40) என்ற 2 மகன்களும், 2வது மனைவிக்கு சங்கரி (35) என்ற மகளும் உள்ளனர். இந்த நிலையில் கடந்த 2008ல் மாரிமுத்து, தனது 2 மகன்கள் மற்றும் மகளுக்கு தனது விவசாய நிலத்தை பாகப்பிரிவினை செய்து எழுதி வைத்தார். இதில், தாங்கள் வசித்த வந்த வீட்டை இளைய மகன் வெங்கடேஷ் சேர்த்து எழுதி கொண்டதாக தெரிகிறது. பின்னர் 2015ல் திருமணம் செய்து கொண்ட வெங்கடேஷ், 2017ல் வயதான பெற்றோர் இருவரையும் அடித்து துன்புறுத்தி வீட்டைவிட்டு வெளியேற்றியுள்ளார். இதனால் அவர்கள், அதே பகுதியில் உள்ள வாடகை வீட்டில் குடியேறிய பெற்றோர், தங்களது வீட்டை மீட்டுத்தரக்கோரி கோட்டாட்சியர் மற்றும் காவல்துறையிடம் முறையிட்டுள்ளனர். இது தொடர்பாக விசாரணை நடத்திய கோட்டாட்சியர், வயதான பெற்றோரை, இறுதி வரைக்கும் இளைய மகன் வெங்கடேஷ் தனது வீட்டில் வைத்து பராமரிக்கவும், இன்னொரு மகனும், மகளும் சேர்ந்து மாதந்தோறும் ரூ.5 ஆயிரம் அவர்களின் வங்கி கணக்கில் செலுத்தவும் கடந்த மார்ச் மாதம் உத்தரவிட்டார்.

இதையடுத்து, கடந்த மார்ச் மாதம் 27ல் வாடகை வீட்டிலிருந்து, பொருட்களை எடுத்துக் கொண்டு, மாரிமுத்து தம்பதியினர் இளைய மகன் வீட்டிற்கு சென்றனர். ஆனால் வெங்கடேஷ், அவர்களை வீட்டிற்குள் வரவிடாமல், வீட்டை பூட்டிக் கொண்டார். இந்த நிலையில் மாரிமுத்தும், அவரது மனைவியும் வீட்டின் எதிரே தரையில் அமர்ந்து தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு வெங்கடேஷ், திடீரென விஷ மருந்தை எடுத்து குடித்து விட்டார். சிறிது நேரத்தில் அங்கே மயங்கி விழுந்துள்ளார். உடனே அக்கம் பக்கத்தினர், ஓடி வந்து வெங்கடேஷை மீட்டு, புதுச்சேரி கதிர்காமம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. பெற்றோர் இருவரும் வீட்டின் முன்பு தொடர் போராட்டம் நடத்தி வரும் நிலையில், மகன் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து கோட்டக்குப்பம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related posts

கர்நாடகாவில் கொலை குற்றவாளி கைது

மாடிக்கு கம்பியை எடுத்து சென்றபோது மின்சாரம் தாக்கி தொழிலாளி பலி

ஏற்காட்டில் குற்றச்சம்பவங்களை தடுக்க டிஎஸ்பி தலைமையில் போலீசார் வாகன தணிக்கை