வீட்டில் பரிகார பூஜை நடத்தி 55 பவுன், ரூ.1.5 லட்சம் பறிப்பு: பெண் மந்திரவாதிக்கு வலை

திருவனந்தபுரம்: திருவனந்தபுரம் வெள்ளாயணி பகுதியை சேர்ந்தவர் விஸ்வம்பரன். இவரது குடும்பத்தில் சில நெருங்கிய உறவினர்கள் அடுத்தடுத்து மரணமடைந்தனர். இதனால் மனமுடைந்து அப்பகுதியில் உள்ள ஒரு ஜோதிடரை சென்று பார்த்தார். அப்போது சில பரிகார பூஜைகள் நடத்த வேண்டும் என்று அந்த ஜோதிடர் கூறியுள்ளார். இந்நிலையில் குமரி மாவட்டம், களியக்காவிளையில் தெற்றியோடு தேவி என அழைக்கப்படும் வித்யா என்ற பெண் மந்திரவாதி இருக்கிறார். அவர் பரிகார பூஜை நடத்துவதாக விஸ்வம்பரனிடம் சிலர் கூறியுள்ளனர். இதையடுத்து விஸ்வம்பரன் களியக்காவிளை சென்று பெண் மந்திரவாதி வித்யாவை சந்தித்தார். அப்போது, தான் நேரடியாக வீட்டுக்கு வந்து பரிகார பூஜை நடத்துவதாக கூறியுள்ளார். அதன்படி சில நாட்கள் கழித்து விஸ்வம்பரனின் வீட்டுக்கு சென்ற வித்யா, கடுமையான சாபம் இருப்பதாக கூறியுள்ளார். வீட்டிலேயே ஒரு அறை பூஜையறையாக மாற்றப்பட்டு பரிகார பூஜை ஒரு வாரத்திற்கு மேல் நடந்தது. இந்நிலையில் ஒருநாள், தேவியின் சாபம் குறையவில்லை. அதனால் வீட்டிலுள்ள நகை மற்றும் பணத்தை வைத்து பூஜை நடத்த வேண்டும் என்று வித்யா கூறியுள்ளார். அதை நம்பிய விஸ்வம்பரனின் குடும்பத்தினர் வீட்டில் இருந்த 55 பவுன் நகை மற்றும் ஒன்றரை லட்சம் பணத்தை எடுத்துக் கொடுத்துள்ளனர். அவற்றை பூஜை அறையில் உள்ள பீரோவில் வைத்துவிட்டு செல்லும்படி வித்யா கூறியுள்ளார். பூஜையை முடித்த பின்னர் 2 வாரம் கழித்து தன்னிடம் தெரிவித்துவிட்டு பீரோவை திறந்து நகை மற்றும் பணத்தை எடுத்துக் கொள்ளும்படி கூறிவிட்டு வித்யாவும் அவருடன் வந்த கும்பலும் அங்கிருந்து சென்றது. இதன்படி இரண்டு வாரங்கள் கழித்து வித்யாவை விஸ்வம்பரன் தொடர்பு கொண்டு பீரோவை திறக்கலாமா என்று கேட்டுள்ளார். ஆனால் தேவியின் சாபம் இன்னும் குறையவில்லை என்றும், 3 மாதம் கழித்துத் தான் பீரோவை திறக்க வேண்டும் என்றும் கூறியுள்ளார். 3 மாதம் கழித்து கேட்டபோது ஒரு வருடம் கழித்து பீரோவை திறக்க வேண்டும் என்று கூறியுள்ளார். இதனால் சந்தேகமடைந்த விஸ்வம்பரன் பீரோவை திறந்து பார்த்தபோது, அதில் வைத்திருந்த நகை மற்றும் பணத்தை காணவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த விஸ்வம்பரன், உடனடியாக வித்யாவை தொடர்பு கொண்டு விவரத்தை கூறியுள்ளார். போலீசில் புகார் செய்தால் குடும்பத்தையே கொலை செய்து விடுவேன் என்று அவர் மிரட்டியுள்ளார். அப்போதுதான் தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த விஸ்வம்பரன் இதுகுறித்து திருவனந்தபுரம் போலீசில் புகார் செய்துள்ளார். அதன்பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து பெண் மந்திரவாதியை தேடி வருகின்றனர்….

Related posts

1.2 லட்சம் பக்தர்களுக்கு கூடுதலாக அன்னதானம் வழங்க ரூ.13.45 கோடி செலவில் திருமலையில் அதிநவீன சமையல் கூடம்: ஆந்திர முதல்வர் சந்திரபாபு திறந்து வைத்தார்

11 மணி நிலவரம்: ஹரியானாவில் 23% வாக்குப்பதிவு

திருப்பதியில் ரூ.13.45கோடியில் சமையற்கூடம் திறப்பு