வீட்டிற்கு செல்லும் பாதையில் தடுப்பு சுவர் கட்டியதால் தாய், மகன் தீக்குளிக்க முயற்சி வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பு குடியாத்தம் அருகே உள்ள கிராமத்தில்

வேலூர், நவ.21: வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்வு கூட்டம் ேநற்று நடந்தது. ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் ஆர்த்தி தலைமை தாங்கினார். இதில் பல்வேறு துறை அதிகாரிகள் பங்கேற்று பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை பெற்றனர். வேலூர் ஆர்.என்பாளையம் மக்கள் அளித்த மனுவில், நாங்கள் 60க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசிக்கிறோம். நாங்கள் வசிக்கும் இடத்திற்கு பத்திரம் உள்ளது. பட்டா வழங்க நடவடிக்கை வேண்டும், என்றனர். காட்பாடி அடுத்த கரிகிரி வரதராஜபுரம் மக்கள் அளித்த மனுவில், எங்கள் பகுதியில் இறந்தவர்களை அடக்கம் செய்யும் சுடுகாட்டுக்கு செல்லும் பாதையில் முட்புதர்கள் சூழ்ந்துள்ளதால், சீரமைத்து புதிய பாதை அமைக்க வேண்டும், என்றனர். வேலூர் விருபாட்சிபுரம் நம்பிராஜபுரத்தை சேர்ந்த வேண்டா அளித்த மனுவில், எனக்கு இந்தியன் வங்கியில் சேமிப்பு கணக்கு உள்ளது.

இந்த கணக்கில் வேறு ஒருவரின் ஆதார் எண் இணைக்கப்பட்டுள்ளது. வங்கி கணக்கில் கடந்த 3 மாதங்களாக அரசு வழங்கிய மகளிர் உரிமை தொகை மற்றும் மகளின் திருமணத்திற்காக ₹45 ஆயிரம் ரொக்கம் ஆகியவை இருப்பு உள்ளது. ஆனால் அந்த பணத்தை ஆதார் அட்டைக்கு உரியவர் ஒருவர் எடுத்துள்ளார். இதுகுறித்து மேலாளரிடம் கேட்டால், சரியான பதில் அளிக்கவில்லை. எனவே எனது பணத்தை மீட்டு தர வேண்டும், என்றார். குடியாத்தம் கொல்லப்பள்ளி கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள் அளித்த மனுவில், எங்களுக்கு முன்னாள் முதல்வர் கலைஞர் ஆட்சியில் 50 ஏக்கர் நிலம் வழங்கப்பட்டது. அந்த நிலத்திற்கு செல்ல வழி இல்லை. எனவே எங்கள் மனு மீது நடவடிக்கை எடுத்து வழியை ஏற்படுத்தி தரவேண்டும், என்றனர்.

வேலூர் அடுத்த செதுவாலை பகுதியில் இருளர் இன மக்கள் அளித்த மனுவில், நாங்கள் 12 குடும்பங்களை சேர்ந்தவர்கள் ஈரோடு பகுதியில் கொத்தடிமைகளாக இருந்து கடந்த ஆண்டு மீட்கப்பட்டவர்கள். தற்போது செதுவாலை ஏரிக்கரை பகுதியில் வசிக்கிறோம். நாங்கள் தங்குவதற்கு வீடு இல்லை. மழைக்காலம் என்பதால் அவதிப்பட்டு வருகிறோம். தங்குவதற்கு வீடு கட்டி தரவேண்டும், என்றனர். தொடர்ந்து மதியம் ஒரு மணியளவில் தாய், மகன் 2 பேர் திடீரென கலெக்டர் அலுவலக வளாகத்தில் மண்ணெண்ணெய் தலையில் ஊற்றிக்கொண்டு தீ குளிக்க முயன்றனர். அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் உடனே ஓடிச்சென்று, மண்ணெண்ணெய் பாட்டிலை தட்டிவிட்டு, அவர்கள் தலையில் தண்ணீரை ஊற்றி பாதுகாப்பாக மீட்டனர்.

தொடர்ந்து அங்கிருந்த போலீசார் நடத்திய விசாரணையில், குடியாத்தம் அடுத்த கோவிந்தாபுரத்தை சேர்ந்த செல்வி(45), அவரது மகன் பரத்(21) என்பது தெரியவந்தது. தொடர்ந்து நடத்திய விசாரணையில், நாங்கள் வசித்து வரும் கிராமத்தில் எங்கள் வீட்டிற்கு சென்றுவர வழியில்லை. எதிர்வீட்டில் வசிப்பவர் தடுப்பு சுவர் எழுப்பியுள்ளார். ஊரில் உள்ளவர்களும் அவருக்கு சாதகமாக பேசுகின்றனர். இதுகுறித்து 5 முறை மனு கொடுத்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதற்கு குடியாத்தம் ஆர்ஐ ஒருவரும் சாதகமாக செயல்படுகிறார். எனவே இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும், என்றனர். இதனால் குறைதீர்வு கூட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டது. சத்துவாச்சாரி போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related posts

வெளிநாட்டில் வேலை வள்ளியூர் பிரமுகரிடம் ரூ.10 லட்சம் மோசடி: கேரள முதியவர் கைது

சுரண்டை அரசு கல்லூரியில் சேர விண்ணப்பிக்க இன்று கடைசி நாள்

ஒன்றிய தொழிலாளர் அமைச்சகம் மூலம் பீடித் தொழிலாளர்கள் குழந்தைகளுக்கு கல்வி உதவித் தொகை ஆணையர் தகவல்